10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வேண்டும்.. வெறும் பாஸ் என்பது தவறான முடிவு.. அன்புமணி ராமதாஸ்..!

By vinoth kumarFirst Published Jun 11, 2021, 1:48 PM IST
Highlights

கொரோனாவால் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட கடந்த ஆண்டுகூட சான்றிதழ்களில் மதிப்பெண்கள் வழங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு மதிப்பெண்கள் வழங்கப்படாவிட்டால், அதுவே மாணவர்களையும், அவர்களின் கல்வித்திறனையும் சிறுமைப்படுத்தும் செயலாகிவிடும்.

10ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மதிப்பெண் இல்லாமல் சான்றிதழ் வழங்குவது மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழில் எந்த மதிப்பெண்ணும் குறிப்பிடப்படாது என்றும், தேர்ச்சி என்ற குறிப்பு மட்டுமே இடம்பெறும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. இவை உண்மை என்றால் அரசின் முடிவு மிகவும் தவறானது.

மதிப்பெண் சான்றிதழில் மதிப்பெண்கள் குறிப்பிடப்படவில்லை என்றால், பத்தாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு, பின்னாளில் பத்தாம் வகுப்பைக் கல்வித் தகுதியாகக் கொண்ட அரசுப் பணிகளுக்கு செல்வதிலும், மேல்நிலை வகுப்புகளில் சேர்வதிலும் சிக்கல் ஏற்படக்கூடும்.

கொரோனாவால் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட கடந்த ஆண்டுகூட சான்றிதழ்களில் மதிப்பெண்கள் வழங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு மதிப்பெண்கள் வழங்கப்படாவிட்டால், அதுவே மாணவர்களையும், அவர்களின் கல்வித்திறனையும் சிறுமைப்படுத்தும் செயலாகிவிடும்.

2020-21 கல்வியாண்டில் அனைத்துப் பள்ளிகளிலும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு குறைந்தது 3 அல்லது 4 தேர்வுகள் நடத்தப்பட்டிருக்கின்றன. அவற்றின் அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண்களுடன் கூடிய மதிப்பெண் சான்றிதழை வழங்க அரசு ஆணையிட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

click me!