பயணி தவறவிட்ட 10 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள்.. மீட்டு பத்திரமாக ஒப்படைத்த எழும்பூர் ரயில்வே பாதுகாப்பு படை.

By Ezhilarasan BabuFirst Published Apr 7, 2021, 3:44 PM IST
Highlights

கன்னியாகுமரியைச் சேர்ந்த பயணி ஒருவர் ரயிலில் தவறவிட்ட 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை ரயில்வே பாதுகாப்புப் படையினர் மீட்டு உரியவரிடம்  பத்திரமாக ஒப்படைத்தனர்.

கன்னியாகுமரியைச் சேர்ந்த பயணி ஒருவர் ரயிலில் தவறவிட்ட 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை ரயில்வே பாதுகாப்புப் படையினர் மீட்டு உரியவரிடம்  பத்திரமாக ஒப்படைத்தனர். கன்னியாகுமரி மாவட்டம் பூச்சிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் மதிகிருஷ்ணன். இவர் நேற்று இரவு நாகர்கோவிலில் இருந்து ரயில் மூலம் அதிகாலை 5.30 மணிக்கு சென்னை தாம்பரம் ரயில் நிலையம் வந்துள்ளார். அப்போது தான் கொண்டு வந்த பையை ரயிலிலேயே தவறவிட்டுச் சென்றுள்ளார். 

அந்த பையில் சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் இருந்த நிலையில், பையை தவறவிட்டதை உணர்ந்த மதிகிருஷணன் உடனடியாக தாம்பரம் ரயில்வே பாதுகாப்பு படையினரிடம் தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து உடனடியாக அந்த தகவலானது எழும்பூர் ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கு தெரிவிக்கப்பட்டது. மதிகிருஷ்ணன் வந்த ரயில் காலை 5.50 மணிக்கு எழும்பூர் ரயில் நிலையம் வந்தடைந்தவுடன் ரயில்வே பாதுகாப்பு படையினர் அந்த ரயிலை முழுவதுமாக சோதனை செய்தனர். 

அப்போது ரயிலின் ஒரு பெட்டியில் மதிகிருஷ்ணனின் பை கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பையின் உள்ளே 10 லட்சம் மதிப்புடைய 240 கிராம் தங்க நகைகள் இருந்தது. அதைக் கைப்பற்றிய எழும்பூர் ரயில்வே பாதுகாப்பு படையினர்  உடனே மதிகிருஷ்ணனுக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அங்கு வந்த மதிகிருஷ்ணன், தனது பையினுள் அனைத்தும் பத்திரமாக இருப்பதை கண்டு ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார். இதனையடுத்து மதிகிருஷ்ணனிடம் நகைகளுக்கான ஆவணங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டபின் அவரிடம் அவரது பையை ரயில்வே பாதுகாப்புப் படையினர் பத்திரமாக  ஒப்படைத்தனர்.
 

click me!