கடலுக்கு போன 10 மீனவர்கள் கரை திரும்பவில்லை: வான்வழியாக தேடும் பணி தொடர்கிறது என அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி.

By Ezhilarasan BabuFirst Published Aug 11, 2020, 11:55 AM IST
Highlights

மீன்வளத் துறை இயக்குனர் மற்றும் சென்னை மீன்பிடி துறைமுக மேலாண்மை பிரிவு மீன்துறை உதவி இயக்குனர்  மூலம், காணாமல் போன மீனவர்களை, வான்வழி மற்றும் கடல் வழியாக தேடுதல் மற்றும் மீட்பு பணிகளை மேற்கொள்ள சென்னை கடலோர காவல் படையிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 
 

ஆழ்கடல் மீன்பிடிப்பிற்குச் சென்று கரை திரும்பாத சென்னை மீனவர்கள் மற்றும் படகுகளை மீட்பதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார்.அதன் விவரம்:-

கடந்த 23-7-2020 அன்று சென்னை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து IND-TN-02-MM-2029 என்ற பதிவின் கொண்ட செவுல் வலை ஆழ்கடல் மீன்பிடிப்பு விசைப்படகில் 10 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றுள்ளனர். மீனவர்கள் 7-8-2020 அன்று கரை திரும்பியிருக்க வேண்டும். இந்நிலையில் கடந்த 28-7-2020 அன்று ஆந்திர மாநிலம் கிருஷ்ணாம்பட்டினம் கடற்கரையில் கிழக்குப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது படகு மற்றும் அதில் மீன்பிடிக்கச் சென்ற 10 மீனவர்களையும் தொடர்புகொள்ள இயலவில்லை என படகின் உரிமையாளர் மற்றும் மீனவர்களின் குடும்ப உறுப்பினர்கள், மீன்வளத்துறைக்கு தகவல் தெரிவித்து, காணாமல்போன படகு மற்றும் மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கக் கோரினர்.

 

இதனைத்தொடர்ந்து காணாமல்போன படகுடன் சேர்த்து மீன்பிடிக்கச் சென்ற படகில் உள்ள மீனவர்களை, மீன் துறையினர் செயற்கைக்கோள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு காணாமல் போன படகின் விவரம் தெரிவிக்கப்பட்டு, அவர்களையும் தேடும் பணிகள் மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும் சென்னை மீன்பிடி துறைமுகத்தை சேர்ந்த உள்ளூர் விசைப்படகுகளை கொண்டும் காணாமல் போன மீனவர்களை மீட்பதற்கு மீன்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  மேலும் மீன்வளத் துறை இயக்குனர் மற்றும் சென்னை மீன்பிடி துறைமுக மேலாண்மை பிரிவு மீன்துறை உதவி இயக்குனர்  மூலம், காணாமல் போன மீனவர்களை, வான்வழி மற்றும் கடல் வழியாக தேடுதல் மற்றும் மீட்பு பணிகளை மேற்கொள்ள சென்னை கடலோர காவல் படையிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

சென்னை கடலோர காவல் படை விமானங்கள் மற்றும் கப்பல்கள் மூலம் காணாமல் போன மீனவர்கள் மற்றும் படைகளை தேடும் பணி நடைபெற்று வருகிறது. காணாமல் போன மீனவர்கள் மற்றும் படகினை கண்டறிந்து அவர்களை பாதுகாப்பாக மீட்டிட அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது என அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

click me!