'ஓசியில் போகமாட்டேன் 'துளசியம்மாள் பாட்டி பின்னணியில் அதிமுக ஐடி விங்: நாடகம் அம்பலம்.. தேவையா இந்த அசிங்கம்?

By Ezhilarasan BabuFirst Published Sep 29, 2022, 6:40 PM IST
Highlights

" அரசு பேருந்தில் ஓசியில் செல்ல மாட்டேன் என மூதாட்டி ஒருவர் நடத்துனரிடம் தகராறில் ஈடுபட்ட சம்பவத்தின் பின்னணியில் அதிமுக ஐடி விங் இருப்பது அம்பலமாகியுள்ளது. 

" அரசு பேருந்தில் ஓசியில் செல்ல மாட்டேன் என மூதாட்டி ஒருவர் நடத்துனரிடம் தகராறில் ஈடுபட்ட சம்பவத்தின் பின்னணியில் அதிமுக ஐடி விங் இருப்பது அம்பலமாகியுள்ளது. அதிமுக ஐடி விங்கை சேர்ந்த பிரித்திவிராஜ் என்பவர் தனது பக்கத்து வீட்டில் வசித்து வரும் துளசியம்மாளை அழைத்துச்சென்று ஓசியில் பயணம் செய்ய மாட்டேன் என பேசவைத்து வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. 

திமுக ஆட்சிக்கு வந்தது முதல் பல்வேறு அதிரடி திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அரசு எடுத்து வரும் ஒவ்வொரு நடவடிக்கையும் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்று வருகிறது, இந்நிலையில் அரசுப் பேருந்துகளில் இலவசமாக பெண்கள் பயணிக்கலாம் என்ற திட்டம் அறிவிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது, இத்திட்டம் பெண்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அரசு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் பொன்முடி பெண்கள் அனைவரும் பேருந்தில் ஓசியில் பயணிப்பதாக கூறினார்.

அவரின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது, பலரும் அவரது பேச்சை கண்டித்து வருகின்றனர். இந்நிலையில் இதைப் பயண்படுத்தி கோவை அரசு பேருந்தில் ஏறி பயணித்த மூதாட்டி ஒருவர் பேருந்து நடத்துநரிடம் அரசு பேருந்தில் இலவசமாக பயணிக்க விருப்பமில்லை என்றும், எனவே தனக்கு டிக்கெட் வழங்க வேண்டும் என பேருந்து நடத்துனரிடம் கட்டணத்தை செலுத்தி டிக்கெட் கேட்டு ரகளை செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

பலரும் இந்த வீடியோவை மேற்கோள்காட்டி, ஓசியில் பயணிப்பதாக கூறிய அமைச்சருக்கு சரியான பதிலடி கொடுத்த பாட்டி, தமிழக அரசுக்கு பாடம் கற்பித்த மூதாட்டி என்றெல்லாம் வர்ணித்து கருத்து பதிவிட்டு வந்தனர். ஆனால் இந்த வீடியோவில் வரும் மூதாட்டி, அவர் பேசிய வசனம் அனைத்துமே அதிமுக ஐடி விங்கின் செட்டப் நாடகம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, பேருந்தில் " ஓசி டிக்கெட் வேண்டாம்"  என பேசிய துளசியம்மாள் கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் உள்ள குரும்பபாளையத்தைச் சேர்ந்தவர் என்பதும், அவர் அதிமுக ஆதரவாளர் என்பதும், 

அவர் மதுக்கரை மார்க்கெட் கலைவாணி பேக்கரி அருகே பேருந்தில் ஏறியதும், அப்போது பேருந்து நடத்துனர் வினித் என்பவர் துளசியம்மாவுக்கு இலவச பயணம் செய்யும் பயணச்சீட்டை வழங்கியதும், ஆனால் அதற்கு துளசியம்மாள், எனக்கு இலவச பயணச்சீட்டு வேண்டாம், எனக்கு பாலத்துறை என்ற ஊருக்கு கட்டணப் பயணச்சீட்டு வேண்டும் எனக்கூறி நடத்துனரிடம் வாக்குவாதத்தில்  ஈடுபட்டதும்,  

ஆனால் பெண்களுக்கு இதில் இலவசமாகப் பயணிக்கலாம் என நடத்துனர் நடத்துனர் எவ்வளவோ கூறியும், தன்னால் " ஓசியில் பயணம் செய்ய முடியாது" டிக்கெட் கொடுத்தே ஆகவேண்டும் என கூறி, டிக்கெட் தரவில்லை என்றால் பேருந்தில் இருந்து குதித்து விடுவேன் என நடத்துனரை மிரட்டியதும், பின்னர் பாலத்துறை பேருந்து நிலையம் வந்தும் பேருந்து விட்டு இறங்க மாட்டேன் என்று தகராறு செய்ததும், அதன் பிறகு நடத்துனர் ஐந்து ரூபாய் டிக்கெட் வழங்கியதும் பின்னர் அதற்கான சில்லரையை துளசியம்மாள் பெற்றதும் தெரியவந்துள்ளது.

அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், கோவை மதுக்கரை மார்க்கெட் பகுதியை சேர்ந்த அதிமுக ஐடிவிங் உறுப்பினர்கள் அதிமுகவைச் சேர்ந்த துளசியம்மாள் மூதாட்டியை தூண்டிவிட்டு வேண்டுமென்றே நடத்துனரிடம் பிரச்சினை செய்து அதை வீடியோவாக பதிவு செய்திருப்பதும் தெரியவந்துள்ளது. அதிமுக ஐடி விங்கைச் சேர்ந்த பிரித்திவிராஜ் என்பவரின் பக்கத்து வீட்டில் வசிப்பவர் தான் துளசியம்மாள் என்பதும் தெரியவந்துள்ளது.

மொத்தத்தில் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் முழுக்க முழுக்க மூதாட்டி துளசியம்மாளை நடிக்க வைத்து அதிமுக ஐடி விங் வீடியோ எடுத்து வைரலாகி இருப்பதே அம்பலமாகியுள்ளது. இந்த தகவலை அறிந்த பலரும் அதிமுக ஐடி விங்கிற்கு ஏன் இந்த பிழைப்பு என கழுவி கழுவி ஊற்றி வருகின்றனர். அதிமுக என்றாலே ட்ராமாதானா என்று தலையில் அடித்துக் கொள்கின்றனர். 
 

click me!