எழுத்தாளர் இமயத்துக்கு கனடாவின் இயல் விருது ! தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கியது !!

By Selvanayagam PFirst Published Jun 12, 2019, 9:31 AM IST
Highlights

கோவேறு கழுதைகள் என்ற நாவல் உட்பட 5 நாவல்கள் மற்றும் சிறுகதைகளை படைத்த எழுத்தாளர் இமயத்துக்கு  கனடா நாட்டைச் சேர்ந்த தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பு  வாழ்நாள் சாதனைக்காக 2018 ஆம் ஆண்டுக்கான  இயல் விருதை வழங்கியுள்ளது.
 

எழுத்தாளர் இமையம், தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். தற்போது விருத்தாசலத்தில் ஆசிரியராகப் பணிபுரிந்துவரும், வெ. அண்ணாமலை என்ற இயற்பெயர் கொண்ட இவர், எளிமையான விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்.  

தமிழ்நாட்டு கிராமங்களில் வாழும் ஒடுக்கப்பட்ட மக்களே இவர் கதைகளின் பாத்திரங்கள். அவர்களின் வாழ்க்கை, கலாசாரம்,  சாதி, வகுப்பு, பால்பேதங்களால் அவர்கள்படும் அவலம் போன்றவற்றை அவர்களின் மொழியிலேயே கதைகளாக வடித்திருக்கிறார். இவரது முதல் நாவலான ‘கோவேறுக் கழுதைகள்’ ‘Beasts of Burden’ என ஆங்கிலத்தில் வெளியாகியுள்ளது

இந்நிலையில் கனடா நாட்டைச் சேர்ந்த தமிழ் இலக்கியத் தோட்டம், எழுத்தாளர் இமையத்துக்கு வாழ்நாள் சாதனைக்காக 2018ஆம் ஆண்டுக்கான இயல் விருது வழங்கியுள்ளது. 

இந்த விருது வழங்கும் விழாவில் மருத்துவர் ஜானகிராமன், கனடா நாடாளுமன்ற உறுப்பினர் கரீ ஆனந்தசங்கரீ, எழுத்தாளர் அ.முத்துலிங்கம், சிறப்பு விருந்தினராக கொலம்பியா பல்கலைக்கழக விரிவுரையாளர் டைலர் ரிச்சர்ட் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஏற்புரை வழங்கிய எழுத்தாளர் இமையம், நான் எழுதியுள்ள ஐந்து நாவல்களும், ஆறு சிறுகதைத் தொகுப்புகளும், ஒரு நெடுங்கதையும் என்னுடைய அறிவின் பலத்தால், சிந்தனையின், கற்பனையின், மதி நுட்பத்தின் பலத்தால் எழுதப்பட்டவை அல்ல.
 
எழுத்தாளனாகியே தீர வேண்டும் என்ற வேட்கையினாலோ, எழுத்தாளனாகிவிட்டதால் தொடர்ந்து எழுதித்தான் தீர வேண்டும் என்ற கட்டாயத்தினாலோ எழுதப்பட்டதல்ல. நடைமுறை சமூகத்தின் நிஜ வாழ்க்கை என்ற கந்தக நெருப்புத்தான் என்னை எழுதத் தூண்டியது; இப்போதும் எழுதத் தூண்டிக்கொண்டிருக்கிறது என தெரிவித்தார்..

click me!