அவிச்ச முட்டை,  ஆம்லெட் இதுல எது நல்லது......?

First Published Jan 4, 2017, 5:40 PM IST
Highlights


அவிச்ச முட்டை,  ஆம்லெட் இதுல எது நல்லது......?

முட்டை குறித்த சந்தேகங்கள் ஒரு தொடர்கதை. அதிலும், ‘வேகவைக்காத பச்சை முட்டையைச் சாப்பிடலாமா... கூடாதா?’, ‘வேகவைக்காத, அரைவேக்காடான முட்டைகளைத் தொடர்ந்து சாப்பிட்டால், செரிமானக் கோளாறு, வயிற்றுவலி எல்லாம் வரும்’ என்று சிலர் கூறக் கேட்டிருப்போம். முட்டை குறித்த எட்டு உண்மைகளைத் தெரிந்துகொண்டாலே, இந்தச் சந்தேகங்கள் எல்லாம் பறந்தோடிவிடும். அவை...

 

* முட்டையை வேகவைப்பதால், அதிலுள்ள உடலுக்குத் தேவையான செலினியம், ரிபோஃபிளேவின் உள்ளிட்ட சத்துக்கள் குறைந்துவிடும், எனவே, அரைவேக்காடான ஹாஃப் பாயில் முட்டைகள் சாப்பிடலாம் என நினைப்பது தவறு. ஹாஃப் பாயிலில், முட்டை முழுமையாக வேகாததால், அதில் உள்ள பாக்டீரியாக்கள் முழுமையாக அழிக்கப்பட்டிருக்காது.. இது குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோருக்கு உகந்ததல்ல. வேகவைக்கும்போது, சத்துக்களின் அளவு குறைந்தாலும், நோய்ப் பாதுகாப்பு மிகவும் முக்கியம். வெரைட்டியை விரும்புபவர்கள் ஹாஃப் பாயிலுக்கு பதிலாக மிளகு, வெங்காயம் சேர்க்கப்பட்ட ஆம்லெட் சாப்பிடலாம்.

 பச்சை முட்டையில் கிடைக்கும் சத்துக்களை முழுமையாகப் பெற சிறந்த வழி, வேகவைத்த முட்டையின் வெள்ளைக்கருவை அதிகமாகச் சாப்பிடுதல். மஞ்சள்கருவில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பதால், இதய நோயாளிகள், உடல்பருமனானவர்கள் தவிர்ப்பது நல்லது.

 

* இருபதாயிரம் முட்டைகளில் ஒரு முட்டையில் `சல்மோனில்லா’ (Salmonella) எனும் பாக்டீரியா இருக்க வாய்ப்புள்ளது. இந்த பாக்டீரியா உள்ள முட்டையைச் சாப்பிட்டால் வாந்தி, உடலில் நீர் வறட்சி, கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்படும். ஏழு நாட்கள் வரை காய்ச்சல் இருக்கும்.

 

* சல்மோனில்லா பாக்டீரியா தாக்குதல் தீவிரமடைந்து அமெரிக்காவில், வருடத்துக்கு சராசரியாக 360 பேர் மரணமடைகின்றனர். சிறுவர்கள், இளைஞர்கள் ஆகியோருக்கு எதிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பதால், இந்தக் காய்ச்சலின் வீரியம் குறைகிறது. பச்சை முட்டை சாப்பிடுவதால் பரவும் இந்தக் காய்ச்சலால், எதிர்ப்பு சக்தி குறைந்த முதியோர்களே அதிகம் பாதிப்புக்குள்ளாகிறார்கள். எனவே, பச்சை முட்டையை, 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டும். 

 

* ஜிம்மில் உடற்பயிற்சி செய்பவர்கள், தசை வளர்ச்சிக்காக, காலையில் வெறும் வயிற்றில் முட்டையைச் சாப்பிடுவது உண்டு. பல மாதங்களாகத் தொடர்ந்து பச்சை முட்டை  சாப்பிடுபவர்களுக்கு, பயோடின் (Biotin), வைட்டமின் பற்றாக்குறை ஏற்படுகிறது. முட்டையை பச்சையாகச் சாப்பிடும்போது (குடிக்கும்போது), முட்டையின் வெள்ளைக்கருவில் உள்ள அவிடின் (Avidin) என்னும் புரதம், பயோடின் வைட்டமினை உடல் ஈர்க்கவிடாமல் தடுக்கும். இதனால், உடலில் பயோடின் வைட்டமின் குறைபாடு ஏற்படும். இதன் காரணமாக, நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள், சரும ஒவ்வாமை, முடிகொட்டும் பிரச்னை ஏற்படும். ஜிம் பயிற்சி செய்பவர்கள், ஆணழகன் போட்டியில் கலந்துகொள்பவர்கள் தசை வளர்ச்சிக்காக, கட்டாயம் பச்சை முட்டை சாப்பிடுவதற்கு முன் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

 

* மேலை நாடுகளில் பச்சை முட்டை ரெசிபிக்கள் அதிகம். எக் ஃபிலிப் (Egg flip), எக் நாக் (Egg nog), ஃபிரெஞ்ச் டோஸ்ட் (French toast), சாஃப்ட் கஸ்டார்ட் (Soft custards), மொஸ்ஸி (Mousse), மயோன்னைஸ் (Mayonnaise), ட்ராமிசு (Tiramisu), ஹொலாண்டைஸ் சாஸ் (Hollandaise sauce), கேக், ஐஸ் க்ரீம்கள் ஆகிய பிரபல ரெசிபிக்களில், மேலை நாட்டவர்கள் பச்சை முட்டையைச் சேர்ப்பார்கள். இந்தியப் பெருநகர ஸ்டார் ஹோட்டல்களிலும் இப்போது இந்த உணவுகள் பிரபலமடைந்துவிட்டன. ஆனால், இவ்வாறு பச்சை முட்டை சேர்க்கப்பட்ட உணவுகள், குழந்தைகள், 10 வயதுக்குட்பட்ட சிறுவர்கள், கர்ப்பிணிப் பெண்களுக்கு உகந்ததல்ல.

 

* ஒரு முட்டையில் சராசரியாக 7 கிராம் புரதம், 5 கிராம் கொழுப்பு, 75 கலோரிகள், 185 மில்லிகிராம் கொலஸ்ட்ரால், 70 மில்லிகிராம் சோடியம், 67 மில்லிகிராம் பொட்டாசியம் உள்ளன. தவிர, வைட்டமின் ஏ, டி, பி காம்ப்ளெக்ஸ் ஆகியவை அடங்கியுள்ளன. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் லுடீன் (Lutein), சியாக்சன்தீன் (Zeaxanthin) ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. உடலுக்குத் தேவையான ஏழு அமினோ அமிலங்களும் முட்டையில் மட்டுமே நிறைவாக இருக்கின்றன.

எனவே, முட்டையை அவித்தோ, மிளகு சேர்த்த ஆம்லேட்டாகவோ, வயதைக் கருத்தில் கொண்டு பச்சையாகவோ தேவைக்கேற்ப சாப்பிடுவோம். ஆரோக்கியம் காப்போம்! 

tags
click me!