பாப்கான் மூளை தெரியுமா? எப்போதும் ஸ்கிரீன் பார்த்துட்டே இருக்குறவங்க இதை தெரிஞ்சுகோங்க!!

By SG Balan  |  First Published Jul 22, 2024, 4:00 PM IST

இந்த டிஜிட்டல் யுகத்தில் 'பாப்கார்ன் மூளை' என்ற புதிய பிரச்சனை வேகமாக உருவாகி வருகிறது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.


இன்றைய டிஜிட்டல் உலகில், நாம் தொடர்ந்து தகவல்களால் சூழப்பட்டுள்ளோம். ஸ்மார்ட்போன்கள் முதல் கம்ப்யூட்டர் வரை, எல்லா இடங்களிலும் தகவல்கள் நம்மை வந்தடைகின்றன. அது மூளையில் ஏற்படுத்தும் விளைவைப் பற்றி யோசித்திருக்கிறீர்களா

இதைப் பற்றிக் கூறும் நிபுணர்கள், இந்த டிஜிட்டல் யுகத்தில் 'பாப்கார்ன் மூளை' என்ற புதிய பிரச்சனை வேகமாக உருவாகி வருகிறது என்கிறார்கள்.

Latest Videos

பாப்கார்ன் மூளை என்பது மூளையின் பலவீனமான நிலை. இது ஒரு விஷயத்தில் தொடர்ந்து கவனம் செலுத்தும் திறனைக் குறைக்கிறது. இதற்குக் காரணம் மூளையில் ஏற்பட்டுள்ள தகவல் சுமைதான். இதனால் மனம் ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு தாவிக்கொண்டே இருக்கும். ஒரே விஷயத்தைப் பற்றிச் சிந்திப்பது கடினமாக இருக்கும். எந்த வேலையிலும் கவனம் செலுத்துவதில் சிரமம் ஏற்படும்.

பாப்கார்ன் மூளை பிரச்சனை உள்ளவர்களின்  அறிகுறிகள் என்னென்ன?

கவனம் செலுத்துவதில் சிரமம்: 

பாப்கார்ன் மூளை பிரச்சனை உள்ளவர்கள் ஒரு பணியில் கவனம் செலுத்துவது கடினம். திரும்பத் திரும்ப கவனச்சிதறல் ஏற்படும். எந்த வேலையையும் முடிப்பதில் சிரமம் உண்டாகும்.

எளிதில் கவனம் திசைதிருப்பபடலாம்:

அவ்வப்போது சில தகவல்கள் மனதை உலுக்கும். சமூக ஊடகத்தில் வரும் பதிவையோ வேறொருவர் பகிரும் செய்தியையோ பார்க்கும்போது, ஏற்கெனவே ​​செய்துகொண்டிருக்கும் வேலையைக் கைவிட்டு, அதை பார்ப்பதில் ஆர்வம் காட்டுவார்கள்.

வேலையைக் கையாளுவதில் சிரமம்:

கவனமின்மையால் எந்தப் பணியையும் முடிக்க முடியாமல் திருப்தியின்மை ஏற்படும். வேலை இன்னும் முடிவடையவில்லை என்பது மீண்டும் மீண்டும் தோன்றிக்கொண்டே மன அழுத்தத்தை அதிகரிக்கும்.

முக்கியமான பணிகளை மறந்துவிடுவது:

அடிக்கடி போனைப் பார்க்கும் பழக்கத்தால் மூளை போனில் வரும் பல தகவல்களில் சிக்கிக்கொள்கிறது. இதனால் முக்கியமான பணிகளைக்கூட நினைவில் வைத்துக்கொள்வது கடினமாகிறது. மறதி அதிகரிக்கிறது.

ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது:

செய்யும் வேலையில் தரம் மற்றும் அளவு இரண்டும் பாதிக்கப்படுகின்றன. தகவல்களே மூளையில் சுமையாக மாறும். இதனால் மனஅழுத்தமும், பதற்றமும் அதிகரிக்கிறது. பணியைச் சரியாக முடிக்க முடியாமல் தோல்வியுறும்போது மனச்சோர்வு ஏற்படுகிறது. பலவீனமான மனநிலை காரணமாக, மற்றவர்களுடனான தொடர்பும் பலவீனமடையும். உறவுகளில் விரிசல் ஏற்படும் அபாயமும் உள்ளது.

கவனமாக இருங்கள்:

நீங்களும் பாப்கார்ன் மூளையின் அறிகுறிகளை உணர்கிறீர்களா? அப்படி இருந்தால், டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்தும் பழக்கத்தை கொஞ்சம் மாற்றிக்கொள்வதில் கவனம் செலுத்துங்கள். நோட்டிஃபிகேஷன் வந்தால், உடனடியாகப் பார்க்கவேண்டிய அவசியமில்லை. மனதை ரிலாக்ஸ் செய்ய, அவ்வப்போது ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள். அமைதியான இடத்தில் சிறிது நேரம் செலவிடுங்கள்.

click me!