Fat Increased: உடலில் கொழுப்பு அதிகரித்துவிட்டதை இந்த 3 வழிகளில் எளிதாக கண்டறியலாம்..!!

By Dinesh TGFirst Published Sep 12, 2022, 4:33 PM IST
Highlights

இந்தியாவில் பலரும் உடல் பருமனால் அவதி அடைந்து வருகின்றனர். நிலையில்லாத உணவுப் பழக்கம், துரித வாழ்க்கை, உணவு மீதான அர்த்தமற்ற ஆர்வம் போன்றவை பருமன் பிரச்னைகளுக்கு காரணமாகவுள்ளன. இதுபோன்ற உணவுப்பழக்கங்களால் ரத்தத்தில் சக்கரை நோய் அதிகரிப்பது, அழுத்தம் அதிகரிப்பது அல்லது குறைந்துபோவது மற்றும் கெட்டக் கொழுப்பு உட்சேருவது போன்ற பிரச்னைகள் ஏற்படுவதற்கு காரணமாகிவிடுகின்றன. சக்கரை மற்றும் ரத்த அழுத்தம் தொடர்பான பிரச்னைகளுக்கு அறிகுறிகள் உண்டு. ஆனால் கொலஸ்ட்ரால் பிரச்னையை கண்டறிவது கடினமானது. ரத்தப் பரிசோதனை மூலமே தெரிந்துகொள்ள முடியும். எனினும் குறிப்பிட்ட அறிகுறிகள் மூலம் கொலஸ்ட்ரால் பிரச்னை குறித்து தெரிந்துகொள்ளலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
 

கைகளில் வலி

கொலஸ்ட்ரால் உருவானால் இருதய பாதிப்பு ஏற்படக்கூடும் என்கிற அச்சம் நம்மில் பலருக்கும் உண்டு. உடலில் கொலஸ்ட்ரால் அதிகரித்தால், கட்டிகள் உருவாகுகின்றன. இதனால் ரத்த ஓட்டத்தில் தடை மற்றும் இடையூறை ஏற்படுத்துகிறது. இதுதான் பெருந்தமனி தடிப்பு அழற்சி என்று மருத்துவ உலகம் கூறுகிறது. இந்த பிரச்னை உருவானால் கைகளில் வலி ஏற்படும். இதுதான் கொலஸ்ட்ரால் காரணமாக உருவாகும் பெருந்தமனி தடிப்பு அழற்சிக்கான முதல் அறிகுறி.

சருமத்தில் மாற்றம்

முகம், தோல், கால்கள் ஆகிய பகுதிகளிலுள்ள தோல் மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறத்தில் மாறுவது அடுத்த முக்கிய அறிகுறியாக உள்ளது. சருமத்தின் கீழ் கொழுப்புகள் தேங்கி நிற்பதனால் இதுபோன்ற அறிகுறி தோன்றுகிறது. ஒருசிலருக்கு கண்களின் கீழே தோக்கங்கள் உருவாகும். இது உள்ளங்கைகளிலோ அல்லது கால்களின் பின்புறத்திலோ கூட தென்படலாம். இப்படிப்பட்ட அறிகுறிகள் தோன்றினால் உடனடியாக ரத்தப் பரிசோதனை செய்து மருத்துவரை காணுங்கள்.

கண் பார்வையில் பிரச்னை

உடலில் கொலஸ்ட்ரால் உச்சபட்ச வரம்பை மீறினால், கண்களிலும் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் கொழுப்புச் சேர துவங்கும். அதை சரியான நேரத்தில் அடையாளம் கண்டு மருத்துவரிடம் ஆலோசனை பெறவேண்டும். கண்களுக்கு அருகில் மஞ்சள் நிற பார்வை, பார்வை மங்குவது மற்றும் கார்னியாவைச் சுற்றியுள்ள பகுதிகளில் மஞ்சள்- பழுப்பு மற்றும் வெள்ள நிற படிவங்கள் உள்ளிட்டவை ஆபத்தான அறிகுறிகளாக உள்ளன. இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

கொழுப்பை எப்படி குறைக்கலாம்?

வாழ்க்கை முறையை முற்றிலும் மாற்றினால் கெட்ட கொழுப்பை எளிதாக குறைக்கலாம். நீர்சத்து மிகுந்த காய்கறிகள், இனிப்புச் சுவையற்ற பழங்கள், எண்ணெய் குறைவான பண்டங்கள் ஆகியவற்றின் மூலம் கொழுப்பை குறைக்கலாம். நொறுக்குத் தீன், துரித உணவுகள், இனிப்புப் பொருட்கள் ஆகியவற்றில் இருந்து விலகி இருப்பது நன்மையை தரும். 

கொழுப்பை குறைக்க எளிய வழிகள்

தினமும் காலையில் எழுந்ததும் ஒரு குவளை வெதுவெதுப்பான நீரில், ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் போட்டு குடிக்க வேண்டும். அதேபோல கொல்ஸ்ட்ரால் பிரச்னை கொண்டவர்கள் பூண்டு பல்லை காலையில் எழுந்ததும், இரவு தூங்கச் செல்வதற்கு முன்னர் நன்றாக கடுத்து சாப்பிட வேண்டும். பூண்டை சமைக்காமல் சாப்பிடுவதில் தான் சிறப்புள்ளது. ஒரு ஸ்பூன் நெல்லிக்காய் பொடியை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிப்பது நல்ல பயனை தரும். மல்லி விதையை ஒரு டீஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் நீரில் போட்டு 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி குடித்தால், கொலஸ்ட்ரால் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். 

அசைவ உணவுகள் சாப்பிடும் கொலஸ்ட்ராலை கட்டுக்குள் கொண்டுவர முடியும். அதற்கு கானாங்கெளுத்தி, சால்மன், மத்தி போன்ற மீன்களை அன்றாட உணவில் சேர்த்து வருவது நல்லது. அது உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுவதோடு, இருதய நோயின் அபாயத்தையும் குறைக்கும்.

இவ்வழிமுறைகளை பின்பற்றி வருவதன் மூலம் கொலஸ்ட்ரால் கட்டுக்குள் இருக்கும். உடலில் கொலஸ்ட்ரால் அதிகரித்தவுடன், அதுசார்ந்த அறிகுறிகளும் தோன்றுகின்றன என்பதை மறந்துவிடாதீர்கள். நீங்கள் பின்பற்றி வரும் வழிமுறைகள், பயனுள்ளதாக இருக்கிறதா என்பதை அவ்வப்போது பரிசோதனை மூலம் தெரிந்துகொண்டு வாருங்கள். இதன்மூலம் நீங்கள் அடுத்தக்கட்டமாக என்ன செய்யலாம் என்பது குறித்து மருத்துவர் மூலம் தெரிந்துகொள்ள முடியும்.
 

click me!