ஈஷாவில் பிரமாண்டமாக நடந்த மஹாசிவராத்திரி விழா...! சிறப்பு விருந்தினராக "குடியரசு துணைத் தலைவர்" ..!

By ezhil mozhiFirst Published Feb 27, 2020, 1:31 PM IST
Highlights

ஒவ்வொரு வருடமும் மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி மஹா சிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. பல அரிய ஆன்மிக சாத்தியங்களை உள்ளடக்கிய வருடத்தின் நீண்ட இரவாக மஹா சிவராத்திரி விளங்குகிறது. 

ஈஷாவில் பிரமாண்டமாக நடந்த மஹாசிவராத்திரி விழா...! சிறப்பு விருந்தினராக "குடியரசு துணைத் தலைவர்" ..!

கோவை ஈஷா யோகா மையத்தில் 26-ம் ஆண்டு மஹாசிவராத்திரி விழா மிக பிரமாண்டமாகவும், விமர்சையாகவும் நடைபெற்றது. இதில் மாண்புமிகு குடியரசு துணைத் தலைவர் திரு.வெங்கையா நாயுடு அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் நேரில் வருகை தந்து ஆதியோகியை தரிசித்தனர்.

ஒவ்வொரு வருடமும் மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி மஹா சிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. பல அரிய ஆன்மிக சாத்தியங்களை உள்ளடக்கிய வருடத்தின் நீண்ட இரவாக மஹா சிவராத்திரி விளங்குகிறது.  இந்த இரவு முழுவதும் முதுகுதண்டை நேராக வைத்து விழிப்பாக இருப்பது பல நன்மைகளை மக்களுக்கு வழங்கும். இதனை அனைத்து மக்களுக்கும் கொண்டும் சேர்க்கும் விதமாக ஈஷா யோகா மையம் மஹா சிவராத்திரியை ஆண்டுதோறும் மிக விமர்சையாக கொண்டாடி வருகிறது.

குடியரசு துணைத் தலைவர் பங்கேற்பு

அதன்படி, ஈஷாவின் 26-ம் ஆண்டு மஹாசிவராத்திரி விழா பிப்.21-ம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 6 மணி வரை நடந்தது. தியானலிங்கத்தில் நிகழ்த்தப்படும் பஞ்ச பூத ஆராதனையுடன் விழா தொடங்கியது. இந்தாண்டு மஹாசிவராத்திரி விழாவில் மாண்புமிகு குடியரசு துணைத் தலைவர் திரு.வெங்கையா நாயுடு சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு அவரை வரவேற்று சூர்ய குண்டம், நாகா சன்னிதி, லிங்க பைரவி, தியானலிங்கம் ஆகிய இடங்களுக்கு அழைத்து சென்றார்.

அவர்கள் தியானலிங்கத்தில் நடந்த பஞ்ச பூத ஆராதனையில் பங்கேற்றுவிட்டு, ஆதியோகி முன்பு அமைக்கப்பட்டிருந்த விழா மேடைக்கு வருகை தந்தனர். அப்போது லிங்க பைரவி தேவியின் மஹா யாத்திரை நடத்தப்பட்டது. ‘மரணம்’ தொடர்பாக சத்குரு எழுதிய ‘Death’ என்ற பெயரிலான புதிய ஆங்கில புத்தகத்தை குடியரசு துணைத் தலைவர் அவர்கள் வெளியிட்டார்.

லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு

இவ்விழாவில் தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் நேரில் பங்கேற்றனர். மஹா சிவராத்திரியின் முக்கிய நிகழ்வான நள்ளிரவு தியானம் சத்குரு அவர்களால் நடத்தப்பட்டது. இதில் லட்சக்கணக்கான மக்கள் தியான நிலையில் ஆம் நமசிவாய மந்திர உச்சாடனம் மற்றும் சில குறிப்பிட்ட தியான முறைகளை மேற்கொண்டனர். அத்தருணம் மக்கள் அனைவரும் ஆனந்ததில் திளைத்தும், அசைவில்லா தியான நிலைகளிலும் இருந்தனர்.

கலை நிகழ்ச்சிகள்

பிரபல நாட்டுப்புற பாடகர் திரு. அந்தோணி தாசன் அவர்களின் இசை நிகழ்ச்சி மக்களை துள்ளி நடனமாட வைத்தது. மேலும் திரை பாடகர் திரு. கார்த்திக் அவர்களின் இனிமையான இசை நிகழ்ச்சியும், கபீர் கபே குழுவின் துள்ளலான இசை நிகழ்ச்சியும் இரவு முழுவதும் மக்களை விழிப்பாக வைத்திருந்தது.

ஈஷா சம்ஸ்க்ருதி மாணவர்களின் களரி மற்றும் நாட்டிய நிகழ்ச்சி காண்போரை பிரம்மிப்பில் ஆழ்த்தியது. மேலும் அவர்கள் பாடிய தேவார இசை பாடல்கள் மக்களை பக்தியில் பரவசப்படுத்தியது. விழாவுக்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் ஆதியோகி அவர்கள் ஒரு வருடமாக அணிந்திருந்த 1 லட்சத்து 8 ருத்ராட்ச மணிகளும், சர்ப்ப சூத்திரமும் பிரசாதமாக வழங்கப்பட்டது.

 

நாட்டு மாடுகள் கண்காட்சி

மக்கள் மத்தியில் நாட்டு மாடுகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஈஷா யோகா மையத்தில் 350 க்கும் மேற்பட்ட பாரம்பரிய நாட்டு மாடுகள் பராமரிக்கபட்டு வருகிறது. அம்மாடுகளை காட்சிப்படுத்தும் கண்காட்சியில் பல்வேறு நாட்டு மாடுகளின் பெயர்களும் அதனை பற்றிய முக்கிய தகவல்களும் இடம்பெற்றிருந்தன.

ஈஷா மஹாசிவராத்திரி விழாவில் குடியரசு துணைத் தலைவர் முதல் தமிழகத்தின் சிறு கிராமம் வரையுள்ள பலதரப்பட்ட மக்கள் சாதி, மத, இன பாகுபாடு இன்றி பங்கேற்றனர். முக்கியமாக ஈஷா யோகா மையம் அமைந்துள்ள பகுதியை சுற்றியுள்ள கிராம மக்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது. மேலும் வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் சங்கம் சார்பாகவும் மற்றும் பல்வேறு பகுதிகளை சார்ந்த விவசாயிகளும் கலந்துகொண்டனர்.

இரவு முழுவதும் தொடர்ந்த நிகழ்ச்சிகள் மறுநாள் காலை 6 மணிக்கு சத்குரு அவர்களின் நிறைவுறையோடு முடிவடைந்தது.

click me!