இந்தியாவை வாட்டி வதைக்கும் கொரோனா... ட்விட்டர் நிறுவனம் 15 மில்லியன் டாலர் நிதியுதவி...!

By Kanimozhi PannerselvamFirst Published May 11, 2021, 11:24 AM IST
Highlights

இந்நிலையில் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கும் இந்தியாவிற்கு உதவ ட்விட்டர் நிர்வாகம் முன்வந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸின் கோரதாண்டவம் நாளுக்கு நாள் உச்சம் தொட்டு வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3 லட்சத்து 29 ஆயிரத்து 942 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 2 கோடியே 29 லட்சத்து 92 ஆயிரத்தை கடந்தது. கடந்த 24 மணிநேரத்தில் 3,56,082 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் நலமடைந்தோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 90 லட்சத்து 27 ஆயிரத்தை தாண்டியது. ஒரே நாளில் 3,876 பேர் மரணமடைந்துள்ள நிலையில், இதுவரை 2 லட்சத்து 49 ஆயிரத்து 992 பேர் பலியாகியுள்ளனர். 

இப்படி நாளுக்கு நாள் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவிற்கு உதவி அமெரிக்கா, ரஷ்யா, அரபுநாடுகள் உள்ளிட்டவை முன்வந்துள்ளன. மருத்துவ உபகரணங்கள், ஆக்ஸிஜன் தயாரிக்கும் இயந்திரங்கள், தடுப்பு மருந்து தயாரிக்க தேவையான மூலப்பொருட்கள் என பல்வேறு நாடுகளில் இருந்தும் இந்தியாவுக்கு உதவிகள் கப்பல், விமானங்கள் மூலமாக அனுப்பிவைக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கும் இந்தியாவிற்கு உதவ ட்விட்டர் நிர்வாகம் முன்வந்துள்ளது. சமூக வலைத்தள நிறுவனங்களில் முன்னணியான ட்விட்டர் நிறுவனம் இந்தியாவிக்கு கொரோனா நிவாரண நிதியாக 15 மில்லியன் டாலர்களை வழங்கியுள்ளது. 

இது தொடர்பாக டுவிட்டர் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் பேட்ரிக் டோர்சி கூறுகையில், “இந்த தொகையானது கேர், எய்ட் இந்தியா மற்றும் சேவா இன்டர்நேஷனல் யுஎஸ்ஏ ஆகிய மூன்று அரசு சாரா நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார். 

click me!