Too Much Walking Effects : நடைபயிற்சி உடலுக்கு நல்ல பலன்களை தந்தாலும் அதிகமாக நடந்தால் சில பிரச்சனைகள் ஏற்படலாம்.
உடற்பயிற்சிகளிலே எளிய மற்றும் மிதமான பயிற்சி என்றால் நடைபயிற்சி தான். உடல் எடையை குறைப்பது முதல் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் ஆகியவற்றை கட்டுக்குள் வைப்பது வரை நடைப்பயிற்சி சிறந்த பலன்களை தருகின்றன. இந்த பயிற்சி செய்வதற்கு சிறப்பு உபகரணங்கள் ஏதும் தேவையில்லை. உங்களிடம் 30 நிமிடங்களும் நடக்க வேண்டும் என்ற உந்துதலும் இருந்தாலே போதும். ஆனால் நடைப்பயிற்சியில் எவ்வளவு ஆரோக்கியமான நன்மைகள் கிடைத்தாலும் சில உடல் நல பிரச்சனைகள் இருப்பவர்கள் நடக்கும்போது நல்ல பலன்களை பெற முடிவதில்லை. அதிகப்படியாக நடைபயிற்சி செய்யும்போது யார் யாருக்கு பாதிப்பு வரும்? என்னென்ன பிரச்சனைகளை சந்திக்க கூடும்? எதைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதை இந்த பதிவில் காணலாம்.
தசை, மூட்டு வலி:
நடைப்பயிற்சி மேற்கொள்ளும் சிலருக்கு கால்களில் வலி ஏற்படும். அது சாதாரணமானதாக தெரியலாம். ஆனால் வலியின் வீரியத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். தசைபிடிப்பு, தொடை போன்றவற்றில் வலியை உணரலாம். வாக்கிங் போய் வந்த 24 மணி நேரத்திற்கு பின்னர் அல்லது 48 மணி நேரங்களுக்குள்ளாக இப்படி வலி ஏற்படலாம். எந்த உடற்பயிற்சியையும் செய்ய தொடங்கும் போது இது மாதிரியான வலிகள் ஏற்படுவது சகஜம்தான். ஆனால் இந்த வழிகள் நாள்பட்ட நோயாக மாறும்போது மருத்துவரை ஆலோசிக்க வேண்டும். சமதளமான நல்ல பரப்புகளில் நடைபயிற்சி மேற்கொள்வது கால்களை வலியில் இருந்து பாதுகாக்கும். ஷூ அணியாமல் வெறும் கால்களில் மோசமான பரப்புகளில் நடப்பதால் முழங்கால்கள், மூட்டுகள், கணுக்கால்களில் வலி ஏற்படலாம். கீல்வாதத்தை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
இதையும் படிங்க: எடை குறைய '8' வடிவ வாக்கிங்.. எத்தனை நிமிஷம் நடந்தால் பலன் கிடைக்கும்?
கீழ் முதுகு வலி வரலாம்:
நீங்கள் சரியான தோரணையில் நடைபயிற்சி மேற்கொள்ளாவிட்டால் உங்களுக்கு கீழ் முதுகு வலி ஏற்படும் வாய்ப்புள்ளது. ஏற்கனவே உங்களுடைய மைய தசைகள் பலவீனமாக காணப்பட்டால் தொடர்ந்து நடைபயிற்சி செய்யும்போது வலி ஏற்படலாம். ஏனென்றால் நீங்கள் வெகுதூரம் நடக்கும்போது உடல் எடையை காரணமாக கீழ் முதுகில் அழுத்தம் ஏற்படும். இதை ஆரம்ப கட்டத்தில் கவனித்து சரி செய்ய வேண்டும். சரியான தோரணையில் நடைபயிற்சி மேற்கொள்வதே முழு பலன்களை பெற உதவும். இல்லையென்றால் பக்க விளைவுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. இந்த வலி வந்தால் நடப்பது மட்டுமின்றி நிற்க சிரமமாக உணர்வீர்கள்.
இதையும் படிங்க: 1 கி.மீ வாக்கிங்.. எவ்வளவு எடையை குறைக்கும் தெரியுமா?
குதிகாலில் வலி
நடைப்பயிற்சி கால் வலியை ஏற்படுத்துவது மட்டுமின்றி குதிகால்களிலும், கால் வளைவுகளிலும் வலியை உண்டாக்கலாம். கால் விரல்களும் அழுத்தம் காரணமாக வலிக்க தொடங்கலாம். நீங்கள் அதிகமாக நடைபயிற்சி மேற்கொண்டால் இந்த அறிகுறிகளை உடல் வெளிப்படுத்தும். அதில் குதிகால் வலியும் ஒன்று. இஞ வலிக்கு காரணமே அதிகமான நடைபயிற்சியின் போது கால் விரல்களுடன் இணைந்த குதிகால் எலும்பின் தசைநார் வீங்குவதால் தான். கால்களில் திரும்ப திரும்ப அழுத்தம் வருவதே குதிகால் வீங்க காரணம். நடைபயிற்சிக்கு பின்னர் சரியான ஓய்வெடுக்காதது, பொருத்தமான காலணிகளை அணியாதது போன்றவை இந்த வலிகளுக்கு காரணம். அதிகப்படியான வாக்கிங் கொப்புளங்கள் ஏற்பட காரணமாகவுள்ளது. ஏற்கனவே நீங்கள் சிறிய காலணிகளை அணிந்து இருந்தால் நீண்ட தூரம் நடக்கும்போது கொப்புளங்கள் உருவாகின்றன.
எலும்பு வலியின் பின்னணி:
ஒருவர் அதிகமாக நடைபயிற்சி செய்வதால் அவருடைய பாதங்கள், கணுக்கால்களில் வீக்கம் ஏற்படுகிறது. இந்த வீக்கத்தால் ரொம்ப நேரம் நிற்பது, ரொம்ப தூரம் நடப்பது போன்றவை கடினமாக மாறுகிறது. சிலருக்கு மூட்டுக்கு கீழே காணப்படும் காலின் உள் அல்லது முன்பக்கம் உண்டாகும் வலியை குறிக்கும். இதை ஷின் போன் (shin bone) வலி என்பார்கள். திடீரென நடைபெறச்சு தீவிரமாக மேற்கொள்வோர்களுக்கு இந்த வலி வரும் வாய்ப்பு அதிகம். நீங்கள் உங்களுடைய உடல் வலிமையை மீறி, அதாவது உங்களுடைய திறனுக்கு அப்பால் அதிகமாக நடைபயிற்சி செய்தால் உங்களுடைய தசைகள், தசை நாண்கள், எலும்பை சுற்றியுள்ள எலும்பு திசுக்களில் அழுத்தம் ஏற்பட்டு வீக்கம் உண்டாகும். இதனால் வலி உண்டாகலாம்.
சிறப்பு கவனம் கொடுக்கவேண்டியவை:
வாக்கிங் செல்வது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. உங்களுடைய இதய ஆரோக்கியம், மனநலம், கால்களின் வலிமை, எடை குறைப்பு உள்ளிட்ட பல விஷயங்களுக்கு உதவியாக இருக்கிறது ஆனால் உங்களுடைய எடைக்கு ஏற்றவாறு குறிப்பிட்ட நேரத்தில், தூரத்திற்கு நடைபயிற்சி செய்வது நல்லது. விரைவாக உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக மணிக்கணக்கில், பல கிமீ நடப்பது உடலில் எலும்பு தேய்மானம், காயங்கள், வலி போன்றவற்றையே ஏற்படுத்தும். அதனால் உங்களுக்கு பலன்கள் கிடைக்காது. அதனால் 30 நிமிடங்களில் இருந்து 45 நிமிடங்கள் வரை மட்டுமே நடைபயிற்சி மேற்கொள்வது நல்லது. அவ்வப்போது உடலுக்கு தேவையான ஓய்வையும் அளிக்க வேண்டும். இடைவிடாது தினமும் நடைபயிற்சி செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. வாரத்தில் 3 அல்லது முதல் 4 நாட்கள் நடைபயிற்சி மேற்கொண்டால் போதுமானது. 2 நாட்களாவது கால்களை வலுவாக்கும் உடற்பயிற்சிகளை (strength training) மேற்கொள்ள வேண்டும். நல்ல ஷூ அல்லது காலணி அணிந்து நடைபயிற்சி செய்ய வேண்டும். நீங்கள் நடக்கும்போது சரியான தோரணையில் (posture) நடக்கவேண்டும்.