
குழந்தைகள் பிறக்கும், போதும் சரி, வளரும் போதும் சரி, திருமணத்திற்கு பிறகும் தன்னுடைய பிள்ளைகளை மனதளவில் குழந்தைகளாகவே பெற்றோர்கள் கருத்தில் கொள்வர். ஆனால், குழந்தைகள் வளரும் பருவத்தில் ஒவ்வொரு காலகட்டத்தில், வெவ்வேறு குணாதிசயங்கள் தோன்றும். குறிப்பாக, பிள்ளைகள் வளரும் பருவங்களில் குழந்தையாகவும் அல்லாமல் வாலிபராகவும் அல்லாமல், இடைப்பட்ட ஒரு நிலையில், பதின்பருவ காலத்தில் ஒவ்வொரு பிள்ளையும் பல்வேறு சிந்தனைகளை கொண்டிருக்கும். ஆனால், அவற்றை எப்படி செயல்படுத்துவது என்று தெரியாது. அவற்றை கண்டறிந்து, அவர்களை சரியான முறையில் வழி நடத்த வேண்டும். இதன் மூலம் அவர்களை வல்லுனர்களாகவும், மேதைகளாகவும், தொழில் அதிபர்களாகவும் மாற்ற முடியும்.
எனவே, இளம் வயதிலேயே தொழில் செய்யும் ஆர்வம் உள்ள பிள்ளைகளா நீங்கள்? ஆன்லைன் வகுப்புகள் போய்க்கொண்டிருப்பதால்,வீட்டில் அதிக நேரம் இருக்கிறதா? அதை எப்படி சரியாக பயன்படுத்துவது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
சமூக வலைத்தளம்:
நமது திறமையை உலகத்திற்குக் கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்கு வகிப்பவை சமூக வலைத்தளங்கள். அதில் ஒன்றுதான் யூடியூப் தளம். இதில் நாம் பதிவிடும் ஒவ்வொரு வீடியோவுக்கும், பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதன் மூலம் வருமானமும் கிடைக்கும். திறமையை எளிதாக அனைவருக்கும் வெளிப்படுத்தவும் முடியும். இளம் வயதினரின் திறமைகளை வெளிக்கொண்டுவருவதற்கு இது சரியான வாய்ப்பாகும்.
இதற்கு ஒரு உதாரணம், ரித்து ராக்ஸ் சேனல், இது ஆரம்பித்து ஆறே மாதங்களில் 18.6 லட்சம் சப்ஸ்க்ரைபர்களைத் தொட்டது. ரித்து, என்ற குழந்தை ஆண் மற்றும் பெண் பாத்திரங்களில் டெய்லர், சர்வர், டாக்டர், மன்னர் போன்ற பல்வேறு வேடங்களில் நடித்து அசத்தி பட்டி தொட்டி எங்கும் பிரபலம் அடைந்துள்ளார். விளம்பரங்கள், ஏராளமான சினிமா வாய்ப்புகளும் தேடிவந்துள்ளதாம். ரித்து ராக்ஸ் சேனலின் மூலம் தாம் நினைத்ததை விட பன்மடங்கு புகழும் வாழ்த்துக்களும் தேடி வந்திருப்பதாக சிறுவன் ரித்விக்கின் பெற்றோர் கூறுகின்றனர்.
வயதானவர்களுக்கு உதவுதல்:
இது பிள்ளைகளுக்கு மிகவும் பிடித்தமான வேலையாகக்கூட இருக்கலாம். வீட்டில் அல்லது அருகில் வயதானவர்கள் யாராவது இருந்தால், அவர்களுக்குத் தேவையான சிறுசிறு உதவிகளைச் செய்யலாம். காய்கறிகள், மருந்துகள் உட்பட தேவையான சிறு வேலைகளைச் செய்யலாம். பல இடங்களில், இதற்கு ஒரு குறிப்பிட்ட தொகை வழங்கப்படுகிறது. வெளிநாடுகளில், டீனேஜ் பிள்ளைகள் இதை ஒரு தொழிலாக மேற்கொண்டு வருகின்றனர்.
கைவினைப் பொருட்கள் மற்றும் கிப்ட் பேக்கிங் தயாரிப்பு:
குழந்தைகளுக்கு இயல்பாகவே இருக்கும் திறமையில் ஒன்று கைவினைப் பொருட்கள் தயாரிப்பு. இதை ஊக்குவிக்கும்போது, எதிர்காலத்தில் கற்பனைத் திறன் அதிகரிப்பதுடன் சிறந்த தொழிலதிபராகவும் மாற முடியும். குழந்தைகளிடம், அவர்களின் கற்பனைத் திறனுக்கேற்ப அழகாய் பேக்கிங் செய்யும் திறன் இருக்கும். அதைக் கூடுதலாக அழகுபடுத்துவதற்கு கற்றுத்தரலாம். பூங்கொத்துகள் தயார் செய்வதற்கு பயிற்சி தரலாம். இது குழந்தைகளுக்குப் பணம் ஈட்ட ஒரு வாய்ப்பாகவும் அமையலாம்.
கவிதை, கட்டுரை, சிறுகதை:
வளரும்போதே கவிதை, கட்டுரை, சிறுகதை என எழுதும் திறமை பிள்ளைகளுக்கு உண்டு. இவற்றைச் சரியான பாதையில் வழிநடத்திச் சென்று, கற்பனைத் திறனை ஊக்குவிக்கும்போது எழுத்தாளராகும் வாய்ப்பு ஏற்படும். இதன் மூலம் குழந்தைகளுக்குச் சிறந்த எதிர்காலத்தையும் உருவாக்க முடியும்.
இன்னும், சில குழந்தைகள் கேக், குக்கீஸ் போன்ற உணவு வகைகளை தயாரிப்பதற்கு ஆர்வம் உடையவர்கள், முறையான பயிற்சி இருந்தால் கண்டிப்பாக எதிர்கால தொழில்அதிபராக உருவாக்க முடியும்.
எனவே, இன்றைய உலகம் நாளைய பிள்ளைகள் கையில் என்பதை ஒவ்வொரு பெற்றோரும் உணர்ந்து குழந்தைகளுக்கு முறையான பயிற்சி கொடுக்க வேண்டும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.