திருவள்ளுவர் முருகப்பெருமானின் மச்சான்..? அதிர்ச்சியூட்டும் விநோத தகவல்..!

By Thiraviaraj RMFirst Published Nov 4, 2019, 4:09 PM IST
Highlights

 விநோதரச மஞ்சரியில் ஒரு தகவல் தந்த அதிர்ச்சி இன்றுவரை நினைவிருக்கிறது. அதன்படி வள்ளுவர் முருகப் பெருமானுக்கு மச்சான். 

திருவள்ளுவரின் மதம் குறித்தும், உருவம் குறித்தும், சாதி குறித்தும் அவ்வப்போது சர்ச்சைகள் எழுந்து அடங்கும். ஆனால், பாஜக திருவள்ளுவருக்கு பட்டை நாமம் போட்டு உத்திராட்சம் கொட்டைபோட்டு காவி அணிவித்து பெரும் விவாதத்தை கிளப்பி இருக்கிறது. 

இந்த சர்ச்சை குறித்து பிரபல எழுத்தாளரும், சினிமா கலைஞருமான ரூபன் தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். பல்வேறு கோணங்களில் அலசி ஆராயப்பட்டுள்ள அந்தப்பதிவில், ’’கருணாநிதியை போல ஏராளமான வதந்திகளும்,கட்டுக்கதைகளும் கொண்டது திருவள்ளுவர் வாழ்க்கை, கமலஹாசனைப் போல விதவிதமான கெட்-அப்புகளில் உலவியவர் அவர். என்ன, கமல் அந்த வேடங்களைத் தானே விரும்பிப் புனைந்து கொண்டார். வள்ளுவருக்கு மழித்ததும் நீட்டியதும் மற்றவர்கள்.

திருக்குறள் கிட்டத்தட்ட இன்றைய வடிவத்தில் அச்சிடப்பட்டது 1812ல்! அதற்கு திருக்குறள் மூலபாடம் என்று பெயரிட்டிருந்தார் அதன் பதிப்பாளர். தொண்டைமண்டலம் சென்னைப் பட்டிணத்தில் தஞ்சை நகரம், மலையப்ப பிள்ளை குமாரன் ஞானபிறகாசன் என்பவரால் அது பதிப்பிக்கப்பட்டு இருக்கிறது. 200 வருடம் முன்பு அறிவுசார் துறைகள் எல்லாம், இரண்டு மூன்று உயர்சாதியினர் வசமே இருந்ததால், வள்ளுவர் எந்த சாதி என்ற கேள்வி எழுந்திருக்க வேண்டும்.

நான் சிறுவனாக இருந்த காலத்தில் கையில் கிடைக்கும் எல்லா புத்தகங்களையும் படிப்பேன். அப்படிக் கிடைத்த விநோதரச மஞ்சரியில் ஒரு தகவல் தந்த அதிர்ச்சி இன்றுவரை நினைவிருக்கிறது. அதன்படி வள்ளுவர் முருகப் பெருமானுக்கு மச்சான். அந்தக் கதையின்படி ஆதி என்கிற புலைச்சி பெண்ணும் பகவான் என்கிற பார்ப்பண பையனும் காதல் கொள்கிறார்கள். அவர்கள் இருவரும் தங்களுக்குப் பிறந்த குழந்தைகளை அங்கங்கே வழியில் போட்டு விட்டுப் போய்விடுவார்களாம். அந்தக் குழந்தைகளின் பட்டியல் நீளமானது. எனக்கு நினைவிருப்பது வள்ளுவர், அவ்வை, பாரி, வள்ளி!

இந்தப் புனைகதையின் பின் உள்ள வன்மம், எங்கள் கலப்பில்லாமல் உங்களால் இத்தனை உயர்ந்த படைப்புகளை தரமுடியாது என்பதே. வள்ளுவர்தான் ராஜராஜ சோழனுக்குப் பிறகு எல்லா ஜாதியும் சொந்தம் கொண்டாடும் கவி. அவர் பறையர், வள்ளுவர், கையில் ஆணி வைத்திருப்பதால் ஆசாரி, பனை ஓலை வைத்திருப்பதால் நாடார், ஏன் ? அவருடைய தலையலங்காரத்தை வைத்து அவரை சர்தார்ஜி என்று கூடச் சொல்வார்கள்.

நடுவில் ஆசான் ஜெயமோகன், அவர் கேரளத்தைச் சேர்ந்தவர். வள்ளுவர் என்கிற ஜாதி கேரளத்தில் இருக்கிறது. ஒரு காலத்தில் அவர்கள் உயர்ந்த நிலையில் இருந்திருக்கிறார்கள் என்று எழுதி இருந்தார். இந்த சிந்தனையைத்தான் பாய்ச்சலூர் புராணம் இப்படிக் கேள்வி கேட்கிறது.

' சந்தனம் அகிலும் வேம்பும்
தனித்தனி வாசம் வீசும்,

அந்தணர் தீயில் வீழ்ந்தால்
அதன்மணம் வேறதாமோ?

செந்தலை புலையன் வீழ்ந்தால்
தீமணம் வேறதாமோ?

பந்தமும் தீயும் வேறா?
பாய்ச்சலூர் கிராமத்தாரே?'

என்று கேட்கிற கவிஞன்,பெரியார் பாணியில் ஒரு அறிவியல் கேள்வியும் கேட்க்கிறான்.

'குலம் குலம் என்பதெல்லாம்
பூணும் குடுமியும் நூலுந்தானே,

சிலந்தியும் நூலும் போலச்
சிறப்புடன் பிறப்ப துண்டோ'?
என்று கேட்கிறான்.

அடுத்து, அவரது மதம் எது?

கொஞ்ச நாள் முன்னால், யாழ்பாணத்தில் சிங்களரால் எரிக்கப்பட்ட நூலகத்தில் இருந்து கிடைத்ததாக உருத்திராட்சம் அணிந்த வள்ளுவரின் ' புகைப்படம்' வலைத்தளங்களில் சுற்றிக் கொண்டு இருந்தது. திருப்பாதிரிப் புலியூரில் வாழ்ந்த குந்த குந்தர் என்கிற சமணத்துறவிதான் வள்ளுவர். அவர் சமணத்துக்கு எல்லாம் முந்திய ஆசீவக மதத்தைச் சேர்ந்தவர் என்றும் விவாதங்கள் நடந்திருக்கின்றன.

திருவள்ளுவர் , மைலாப்பூர் வாசி என்பதால் எப்படி அய்யரானோரோ, அதே காரணத்தால் பக்கத்தில் இருக்கும் சாந்தோம் வாசியான புனித தோமையரின் கருத்துகளை எழுதிய கிறிஸ்தவராகவும் ஆக்கப்பட்ட பெருமை அவருக்குண்டு. நாகசாமி போன்ற, தொல்பொருட்கள் அவரை, வேதம் தமிழ் செய்தவர் என்று பெருமைப் படுத்தின. இப்போது சங்கிகள், தங்கள் பங்கைச் செய்ய துவங்கி இருக்கிறார்கள். ஆனால் அவர், வேணுகோபால சர்மா தயவில் அவளவு நீண்ட அடர்த்தியான தாடி வைத்திருந்தும் இந்த 'பாய்கள்'தான் அவரை கண்டுகொள்ளவே இல்லை. என்னையா உங்க டேஸ்ட்டு?’’எனப் பதிவிட்டுள்ளார். 

click me!