பிரதமர் - சீன அதிபர் சந்திப்பு..! மாமல்லபுரத்தை தேர்வு செய்தது ஏன் தெரியுமா..?

By ezhil mozhiFirst Published Oct 9, 2019, 6:04 PM IST
Highlights

கி.பி. 6 ஆம் நூற்றாண்டு துவங்கி, 13 ஆம் நூற்றாண்டு வரை காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு, தட்சணப் பிரதேசத்தில் முதல் பேரரசை உருவாக்கி, வடபுலத்தில் அரசியற் பாரம் பரியத்தில் தென்னாட்டின் ஆளுமையைத் தொடங்கியது பல்லவர்கள் என்றால், அது மிகை அன்று.

பிரதமர் - சீன அதிபர் சந்திப்பு..! மாமல்லபுரத்தை தேர்வு செய்தது ஏன் தெரியுமா..?   

மாமல்லபுரத்தில் மாண்புமிகு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களும், மாண்புமிகு சீன அதிபர் ஜி ஜின்பிங் அவர்களும் சந்தித்துப் பேசுவது வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வாகும். அப்படி என்ன சிறப்பு என்பதை இப்போது பார்க்கலாம்..

கி.மு. 100 ஆம் ஆண்டில், சீனாவின் கான்-டோ-ஓ- வில் இருந்து கப்பல் மூலம் இரண்டு மாதங்கள் பயணம் செய்தால், காஞ்சி நாட்டை அடையலாம்; காஞ்சி பரந்தும் மக்கள் மிகுந்தும் பலவிதமான பொருள்களோடு முத்தும் மணி வகைகளும் நிரம்பித் திகழும் நாடு; பேரரசர் வான் கி.மு. 140-86 காலம் முதல் அந்நாட்டுடன் வானிபம் செய்து வருகின்றார்கள் என்று காஞ்சியைப் பற்றி சீனப்பயணி பான்-கோ எழுதி இருக்கின்றார். கி.மு. 10 இல், கிரேக்க நாட்டு ஸ்டிராபோ என்ற வரலாற்று ஆசிரியர், தமிழகக் கடற்கரைப் பட்டினத்தில் இருந்து பரிசுகளோடு அனுப்பி வைத்த தூதுவர்கள் அகஸ்டஸ் சீசரிடம் வந்தார்கள் என்கிறார். கி.பி. 550-600 சீன வரலாற்று ஆசிரியர் மா-டவான் லி அவர்கள், தமிழர்கள் எழுதப்பட்ட இலக்கியங்கள் மட்டும் அல்லாமல், வானவியல் அறிவும் பெற்றுள்ளார்கள்; ஆடவர்கள் எல்லோரும் ஓலைச்சுவடிகளில் பாதுகாக்கப்பட்ட சித்தாந்தம் என்ற வழிகாட்டும் நூலைக் (திருக்குறள்) கற்கின்றார்கள் என்று குறிப்பிட்டு இருக்கின்றார்.

கி.பி. 640 இல், யுவான் சுவாங் என்ற சீனப் பயணி, காஞ்சி தலைநகரம்; இது வளமான பூமி, பூவும் கனிகளும் பெரு மதிப்புள்ள பல்வகைப் பொருள்களும் கொண்டு இருந்தது; இதன் மக்கள் தைரியம் உடையவர்களாகவும் நம்பத் தகுந்தவர்களாகவும் பொதுநலம் பேணுபவர்களாகவும் கல்வியில் நாட்டம் உடையவர்களாகவும் இருந்தார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற மூதுரைக்கு எடுத்துக்காட்டாக, பல்லவர்களின் கடல் வாணிபம், சீனர்களின் கடல்வழி, பட்டு வழித்தட வாணிபம், நீண்ட நெடிய தொடர்புகள் மூலம், காஞ்சியில் பட்டுத் தொழில் நுட்பம் கிடைத்தது. பல்லவர்கள் சீனா, எகிப்து, ரோம் போன்ற பேரரசுகளுடன் வாணிபம் செய்ததற்கான சான்றுகளுக்கு, மாமல்லபுரம் கிருஷ்ணர் மண்டபத்தில் செதுக்கப்பட்டுள்ளன சிற்பம் சாட்சியாக விளங்குகின்றது. பல்லவர்களின் சிங்கம், எகிப்தியர்களின் மனித முகம் சிங்க உடல் அமைப்பு கொண்ட ஸ்பிங்ஸ், சீனர்களின் டிராகன், ரோமர் சிங்கம் போன்ற பேரரசுகளின் வீரத்தின் அடையாளங்களாகச் செதுக்கி வைத்துள்ளனர்.

கி.பி. 6 ஆம் நூற்றாண்டு துவங்கி, 13 ஆம் நூற்றாண்டு வரை காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு, தட்சணப் பிரதேசத்தில் முதல் பேரரசை உருவாக்கி, வடபுலத்தில் அரசியற் பாரம் பரியத்தில் தென்னாட்டின் ஆளுமையைத் தொடங்கியது பல்லவர்கள் என்றால், அது மிகை அன்று. வாதாபி வெற்றியின் மூலம் வீரத்தை நிருபித்துக் காட்டினர். இலங்கையின் ஆட்சி உரிமையை இழந்து தஞ்சம் வந்த நண்பன் மானவர்மனுக்காக, இலங்கை மீது படை நடத்தி வெற்றி வாகை சூடி, ஆட்சிப் பொறுப்பை அவனிடம் ஒப்படைத்தனர்.  இந்தோனேசியாவின் ஜாவா, சுமத்ரா தீவுகளைக் கடந்து, கம்போடியாவின் ஆங்கோர்வார்ட் வரை சென்று, கலை நகரங்களை உருவாக்கினர். இவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த சிங்கபுரம்தான், இன்றைய சிங்கப்பூர். அலைகடலின் மீது ஆதிக்கம் செலுத்தி, மகோன்னதமாக இருந்த பல்லவர்களின் ஆட்சியில்,  கல்வியில் சிறந்த பேராசிரியர் தர்ம பாலனை, நாலந்தா பல்கலைக் கழகத்திற்கு அனுப்பி வைத்தது.புத்தனுக்கு அடுத்த இடத்தில் வைத்து, சீனர்கள் கோயில் கட்டி ஆராதிக்கும் போதி தர்மன், பல்லவ மன்னர்களுள் ஒருவரான புத்தவர்மப் பல்லவன், இவர் மருத்துவம் மற்றும்ஜென் புத்த மதத்தை போதித்தவர். 

காஞ்சியில் இருந்து வந்த த கிரேட் வாரியர் மாஸ்டர் ஆப் குங்~பூ என்று, சீனத் தற்காப்புக் கலைக்கோயில் ஷாவ்லின் டெம்பிளில் கல்வெட்டு பதித்து வைத்து இருக்கின்றார்கள்.ஆக, நீண்ட நெடிய பாரம்பரிய கலாச்சாரத் தொடர்புகளை மீள் உருவாக்கம் செய்கின்ற வகையில், கல்லில் கலை வண்ணம் கண்ட பல்லவர்களின் துறைமுகப்பட்டினமான திருக்கடல் மல்லை என்னும் மாமல்லபுரத்தில், மாண்புமிகு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களும், மாண்புமிகு சீன அதிபர் ஜி ஜின்பிங் அவர்களும் சந்தித்துப் பேசுவது வரலாற்றுச் சிறப்பு ஆகும். இதன் மூலம் இரு நாட்டிற்குள்ளும் சகோதரத்துவம் மலர்ந்து, ஆசியக் கண்டத்தின் அமைதிக்கு வித்திடும் என்பதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது.

click me!