சனிப்பெயர்ச்சிப் பலன்கள் பரிகாரங்கள் - முக்கியமான விஷயங்கள்...

Asianet News Tamil  
Published : Dec 27, 2017, 07:16 PM ISTUpdated : Sep 19, 2018, 01:44 AM IST
சனிப்பெயர்ச்சிப் பலன்கள் பரிகாரங்கள் - முக்கியமான விஷயங்கள்...

சுருக்கம்

The benefits of the disaster-the important things

ஆய கலைகள் அறுபத்து மூன்றில் ஜோதிடமும் ஒன்றாகும். ஜோதிடம் என்பது வானியலோடும் கலந்து காணப்படுவதால் இது வேதத்தின் அங்கம் என்று ஜோதிடம் அழைக்கப்படுகின்றது. நவக்கிரகங்கள் 9 ஆகும். இதில் “குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி இராகு, கேது பெயர்ச்சி” இவற்றிற்கு மட்டுமே ஜோதிட சாஸ்த்திரத்தில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

மற்ற கிரகங்கள் பெயர்ச்சி ஆகவில்லையா என்றால் எல்லாக்கிரகங்களும் சுற்றிச் சுழன்று கொண்டுதான் உள்ளது. சூரியன், சுக்கிரன், புதன், செவ்வாய் இவையெல்லாம் மாதக் கிரகங்கள் ஆகும். சந்திரன் தினமும் மாறும் கிரகம் ஆகும். குரு வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பெயர்ச்சியாகும். ராகு, கேது ஒன்றரை வருடத்திற்கு ஒரு முறை பெயர்ச்சியாகும். சனி மட்டுமே 2 ½ வருடங்களுக்கு ஒரு முறை பெயர்ச்சியாகக் கூடியதாகும். அதனால் தான் சனிப்பெயர்ச்சிக்கு ஜோதிட சாஸ்த்திரத்தில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

சனியானவர் தெய்வங்கள் தேவர்கள் முனிவர்கள் சாதுக்கள் சந்நியாசிகள் ஆண், பெண் இருப்பவன் இல்லாதவன் ஏழை பணக்காரன் உயர்ந்தவர் தாழ்ந்தவன் படித்தவன் படிக்காதவன் சாதி, மதம், இனம், மொழி, என்ற எந்த வித்தியாசமும் இல்லாமல் ஒவ்வொருவரையும் ஆட்கொண்டு ஆட்சி செலுத்துவதில் முதன்மையானவர் ஆவார்.

நவக்கிரங்களிலேயே சனி பகவான் வித்தியாசமானவர். மனிதனின் பிறப்பு நிலையில் அவரவர் முற்பிறவியில் செய்த பாவ புண்ணிய கணக்கின் அடிப்படையிலேயே அவர் இச் சென்மத்தில் பலன்களை அளிக்கவல்லவராவர். முற்பிறவியில் நற்பலன்கள் நற்செயல்கள் நற்சிந்தனைகள் செய்யின் இச்சென்மத்தில் அவர் மிக உயர்ந்த வாழ்வையும் மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் அளிப்பவரவாகவும் மாறாக முற்பிறவி மற்றும் முன்ஜென்மத்தில் கெடுபலன்கள் தீயபலன்கள் தீய எண்ணங்கள், பாவங்கள் செய்யின் இச்சென்மத்தில் துன்பம், துயரம் அசிங்கம் அவமானம் நித்தம். நித்தம் போராட்டம் மனக்குழப்பம் நிம்மதியற்ற சூழ்நிலையை அளிக்கவல்லவரவார்.

ஒரு மனிதனுடைய பிறப்பிற்கும் இறப்பிற்கும் காரணகர்த்தா சனி ஆவார். ஒரு குழந்தை பிறக்கும் பொழுது அழுகின்றது. குழந்தை பிறந்த பொழுது அழுதால் மட்டுமே மற்றவர்களால் சந்தோஷமாக சிரிக்க முடியும். அதே போல் ஒரு மனிதன் இறக்கும் பொழுது மற்றவர்கள் அழுகின்றார்கள். ஆக இறப்பு என்ற ஒரு விஷயத்திற்கும் சனி பகவான் காரணமாகிறார். ஆக அழுகை என்ற ஒரு விஷயத்திற்கு சனி பகவான் காரணகர்த்தாவாவார். அதனால் தான் சனிபகவான் அவரவர் கர்மாவிற்கு ஏற்ப ஒவ்வொரு மனிதனையும் அழவைத்து அவனை கஷ்டப்படுத்தி நீதி வழங்குகிறார்.

சனிபகவான் ஒரு நீதிமான் ஆவார். எப்படி நீதிபதியானவர். ஒருவன் செய்த குற்றங்களுக்குத் தக்கப்படி தண்டனை அளிக்கிறாரோ அதே மாதிரி சனிபகவானும் அவரவர் முற்பிறவியில் செய்த கர்மாக்களுக்குத் தக்கவாறு தண்டனை வழங்குகிறார்.

எனவே தான் சனி என்றாலே நாம் எல்லோரும் அச்சத்துடனே இருந்து வருகிறோம். சனி பகவானை நினைத்தாலே நம் நெஞ்சும் பதறுகிறது. நம்மை அறியாமலேயே ஒருவித பயம் பீதி மனக்குழப்பம் வந்து விடுகிறது.

இவர் நினைத்தால் சாதரணமாக உள்ள ஒருவனை மாடமாளிகைக்கு அதிபதியாகவும் மாடமாளிகைகளில் சகலவசதிகளுடன் வாழ்வோரை கீழே தள்ளி ஆண்டியாகவும் பரதேசியாகவும் ஆக்கும் ஆற்றல் பெற்றவராவார். அதனால் தான் “சனி கொடுத்தால் யார் தடுப்பார்” என்ற அனுக்கிரகத்தையும் பெற்றார். சனியானவர் தன்னுடைய தசா காலங்களில் ஒருவருக்கு கொடுக்கும் செல்வமானது அவரது மூன்று தலைமுறைகளுக்கும் நிலைத்து நிற்கும் என்று கூறப்படுகிறது. மற்ற கிரகங்கள் தங்களது தசா காலங்களில் கொடுக்கும் செல்வமானது அந்தத் தசையாலோ அல்லது அடுத்த தசையாலோ அது அழிந்துவிடும் அல்லது கைமாறி விடும் அல்லது கையை விட்டுப் போய்விடும். 

சனி பகவான் கொடுத்தால் யாராலும் தடுக்க இயலாது. அதனால் தான் “சனி கொடுத்தால் யார் தடுப்பார்” “சனியைப் போல் கொடுப்பாரும் இல்லை, சனியை போல் கெடுப்பாரும் இல்லை” என்ற வார்த்தைகள் வழக்கத்திற்கு வந்தன. மேலும் இவரது தசா புத்தி அந்தர சூட்சம காலங்களில் ஒருவருக்கு தொழில் சொத்து, புகழ், அந்தஸ்து செல்வம் செல்வாக்கு இவற்றை அளித்து அது என்றும் அழியாமல் நிலைத்து நிற்க வைப்பார்.

அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது என்பது ஔவையின் வாக்கு. அப்படிப்பட்ட மானிடப் பிறப்பில் அவன் கூன், குருடு, செவிடு நொண்டி இல்லாமல் ஆரோக்யமாக இருக்க உதவுபவரே சனிபகவான் ஆவார். இதனாலேயே இவர் “ஆயுள் காரகன்” என்று அழைக்கபப்டுகிறார். 

அத்துடன் நோய் நொடி இல்லாமல் நன்கு ஆரோக்யமாக இப்பூவுலகில் வாழ்ந்து மடிவதே மனிதப் பிறவியின் பலன் ஆகும். ஆனால் சனியானவர் தீராத வியாதியையும், அதனால் தீர்க்க முடியாத நோயையும் அதனால் மரண அவஸ்தைகளையும் அளிப்பதால் அவர் நோய் காரகன் என்றும் அழைக்கப்படுகிறார்.

இதன் அடிப்படையிலேயே ஒரு மனிதனது வாழ்க்கையில் ஆயுளைப் பார்க்கும் பொழுது “அற்ப ஆயுள்” “மத்திம ஆயுள்” “நீண்ட ஆயுள்” என்று குறிப்பிடப்படுகிறது. ஜோதிட சாஸ்த்திரப்படி தசா ஆண்டுகள் 120 ஆகும். ஆனால் நடைமுறையில் நாம் எல்லோரும் அவ்வளவு காலம் வாழ்வது இல்லை. இருப்பினும் மனித வாழ்வை சுமார் 90 ஆண்டுகளாகக் குறிப்பிட்டு அதற்கு சனியின் சுழற்சியின் அடிப்படையில் பெயரிடப்பட்டது.

ஒரு மனிதன் பிறந்ததிலிருந்து 33 வயதுக்குள் இறந்தால் “அற்ப ஆயுள்” என்றும் 33 வயதுக்கு மேல் 66 வயதுக்குள் இறப்பின் “மத்திம ஆயுள்” என்றும் 66 வயதுக்கு மேல் இறப்பின் “பூர்ண ஆயுள்” என்றும் குறிப்பிடப்படுகிறது. இந்த ஆயுளை நிர்ணயிப்பதே சனி பகவானே ஆவார். 

சனியானவர் ராசி மண்டலமான 12 ராசிகளைச் சுற்றிவர சுமார் 30 ஆண்டுகள் ஆகும். வானியல் சாஸ்த்திரப்படி சுமார் 29 ½ ஆண்டுகள் ஆகும். ஒரு மனிதனது ஜாதகப்படி அவர் 12 ராசிகளையும் சுற்றி வர எடுக்கும் கால அளவு சுமார் 30 ஆண்டுகள் ஆகும். அதாவது பிறந்ததிலிருந்து 30 வயது வரை அவர் ஒருவரது ஜாதகத்தில் சுற்றி வரும் கால அளவை “மங்கு சனி” என்றும் 30 முதல் 60 வயது வரை ஜாதகத்தை சுற்றும் காலத்திற்கு “பொங்கு சனி” என்றும் 60 வயது முதல் 90 வயது வரை ஒரு ஜாதகத்தை சுற்றும் காலத்திற்கு “மரணச் சனி” என்றும் குறிப்பிடுவார்கள். ஆக அவர் மங்கு சனி, பொங்கு சனி, மரணச் சனி என்று ஒரு ஜாதகரை முழுமையாக ஆட்கொண்டு ஆட்சி செலுத்துகிறார். 

உலகத்தில் உள்ள அனைத்து இன்பங்களையும் அனுபவிக்க மனித மனம் ஆசைப்படுவது இயல்பான ஒன்றுதான். ஆனால் அதற்கேற்ப நம் ஜாதகம் அமைந்துள்ளாதா என்பதுதான் கேள்விக்குறி. எல்லோருமே வெற்றியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருகிறோம். அந்த வெற்றி எத்தனை பேருக்கு கிடைக்கிறது என்பது தான் கேள்வி. அப்படிபட்ட வெற்றியை அளிக்கவல்லவர் சனிபகவான் மட்டுமே. 

அவர் ஒருவர் மட்டுமே ஒரு மனிதனை கடுமையாக உழைக்க வைத்து அவனைக் கடுமையாகப் பாடுபடவைத்து அவனை அல்லல்படவைத்து அவனுக்கு வெற்றியையும் அழியாப் புகழையும் அளிக்க வல்லவராவார். 

நவக்கிரகங்களிலே அதிக முக்கியத்துவம் பெறக் காரணம் இவர் மட்டுமே, தொழில் ஸ்தானம் எனப்படும் ஜீவனத்துக்கான வழி வகைகளை ஏற்படுத்துவதால் இவர் “ஜீவன காரர்கள்” என்று அழைக்கப்படுகிறார். தொழில் என்ற ஒன்று அல்லது வேலை என்ற ஒன்று இருந்தால் மட்டுமே இவ்வுலகில் வாழ முடியும். கடுமையான உழைப்புக்கும் சீரிய முயற்சிக்கும் காரண கர்த்தாவே சனியாவார். “உழைப்பு” என்ற ஒன்றுக்கு “சனி” என்பதே பொருளாகும். எனவே ஒரு மனிதன் வாழ ஜீவனத்திற்கு வழிவகை செய்வதால் இவர் “ஜீவன காரகன்” என்றும் அழைக்கப்படுகிறார். 

வான மண்டலத்தில் உள்ள ராசிகளில் சனி பகவானுக்கு மட்டுமே “மகர ராசி” “கும்பராசி” என்ற இரண்டு ராசிகளும் அடுத்தடுத்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ராசிகள் வான மண்டலத்தில் 10வது மட்டுமே 11வது ராசிகள் ஆகும். 10 என்பது கர்மம் ஆகும். இங்கு கர்மம் என்பது “தொழில்” என்ற அடிப்படையிலும் பார்க்கப்படுதல் வேண்டும். இவ்வுலகில் மனிதன் ஜீவிக்க வேண்டும் என்றால் வேலை அல்லது தொழில் செய்தால் தான் ஜீவனம் பண்ண முடியும். அப்படிப்பட்ட ஜீவன ஸ்தானத்தை தன்னுள் வைத்துள்ளதால் இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒரு வேலை மற்றும் தொழிலை அமைத்துக் கொடுப்பதில் முக்கியப் பங்கு பெற்றவராக சனி அமைகிறார். ஆக இவ்வுலகில் சனி பகவான் அனுக்கிரகம் இல்லாமல் யாரும் வேலையோ தொழிலோ செய்ய முடியாது எனபது மட்டும் உண்மையாகும். 

11ம் இடம் என்பது தொழில் அல்லது வேலை மூலம் கிடைக்கும் ஊதியம் அல்லது சம்பளம் அல்லது லாபம் இவற்றைக் குறிப்பிடுவதேயாகும். மேலும் 11ம் இடம் என்பது ஜோதிட சாஸ்த்திரத்தில் ஒருவரது எண்ணம் ஆசை அபிலாஷை அத்தனையையும் பூர்த்தி செய்யும் இடமாகும். எனவே சனியானவர் எந்த ஒரு சின்ன விஷயமானாலும் அது நடப்பதற்கும் அதனால் மகிழ்ச்சி லாபம் அடைவதற்கும் காரணமாகிறார். எனவே சனி பகவான் அனுகூலம் இல்லாமல் எந்த ஒரு ஜீவனும் மகிழ்ச்சியாகவும் சந்தோஷகரமாகவும் இருக்க முடியாது. 

நவக்கிரகங்களில் சனிபகவான் மட்டுமே ஒரு ராசியிலிருந்து அடுத்த ராசிக்கு மெதுவாக அதிகக் காலம் எடுத்து செல்வதாலேயே அவர் “மந்தன்” என்று அழைக்கப்படுகிறார். “மந்தன்” என்றால் “மெதுவாக” என்று அர்த்தம், அதனால் தான் சனிதசை காலங்களில் எந்த ஒரு விஷயமும் உடனடியாக நடக்கவிடாமல் மெதுவாக சற்று காலம் தாழ்த்தி கஷ்டப்பட்டு அந்தக் காரியத்தை பூர்த்தி செய்வார். அதனாலேயே சனி பகவானுகு “மந்தன்” என்றொரு பெயரும் உண்டு.

சனி பகவானுக்கு மந்தன், மூடவன், நீலன் காரி, முதுமகன், பினிமுகன், சாயாபுத்திரன் என்று பல பெயர்கள் உண்டு.

சனி பகவான் தான் இருக்கும் இடத்தைப் பலப்படுத்துவார் என்றும், பார்க்கும் இடத்தைக் கெடுப்பார் என்றும் பொதுப்பலன்களாகக் குறிப்பிடப்படுகிறது. இருப்பினும் சனியானவர் 3, 7, 10, ஆகிய பார்வை மூலம் மற்ற ராசிகளைப் பார்வை இடுவார். இதில் 7, 10ம் பார்வைகள் சுமாராகவும் 3ம் பார்வையாக பார்வையிடுவது சற்று கொடுரமானது என்றும் குறிப்பிடப்படுகிறது.

சனி பகவானின் பார்வைக்கு சக்தி அதிகம், அவரது பார்வை பட்டாலே தீங்கு நேரிடும் என்று கூறப்படுகிறது. ஒரு முறை கயிலாயத்தில் விநாயகருடைய சதூர்த்தியான விநாயகருடைய பிறந்த நாள் சீரும் சிறப்புமாக நடைபெற்று வந்தது. இந்த விழாவிற்கு தேவர்களும் முனிவர்களும் ஞானிகளும் கயிலாயம் சென்றார்கள். சனி பகவானும் அங்கு செல்ல விரும்பி தன் தாயிடம் அனுமதி கேட்க அவர் தாயான சாயாதேவி அங்கு செல்ல விடாமல் தடுக்க சனிபகவான் யாருக்கும் தெரியாமல் கயிலாயம் சென்று விநாயகருடைய சதூர்த்தி விழாவை கண்டுகளிக்கிறார்.

அதன்பிறகு விநாயகருடைய தலை துண்டாடப்படுகிறது. அதற்கு பதிலாக யானைத் தலை பொருத்தப்படுகிறது. தனது மூத்த மகன் தலை துண்டானதற்குக் காரணம் சனிபகவான் தான் காரணம் என்று கருதி பார்வதி தேவி சனிபகவானின் கால் மூடமாகட்டும் என்று சாபமிடுகிறார். பதிலுக்கு சனியின் தாயான சாயாதேவி கோபப்பட்டு விநாயகப் பெருமாளின் வயிறு பெருகட்டும் என்று பதில் சாபமிட விநாயகரின் வயிறு பெரியதாகி அவரால் மெதுவாகத்தான் நடக்க முடியும் என்ற நிலை வந்ததாகக் கூறப்படுகிறது. சனியின் காலும் முடமனாதாகக் கூறப்படுகிறது. 

ஈஸ்வர பட்டம் பெற்றவர், ஒருவர் சனிபகவான். இன்னொருவர் இராவனேஸ்வரன் ஆவார். இப்படிப்பட்ட இராவணன் தன் மகன் இந்திரஜித் பிறக்கும் நேரத்தில் எல்லாக் கிரகங்களும் இந்திரஜித்தின் ஜாதகத்தில் அவனது லக்னத்திற்கு 11ம் இடத்தில் அமரும் வகையில் நிலை நிறுத்தினார். பொதுவாக ஜோதிடதிதில் 11ம் இடம் என்பது ஒருவரது எண்ணம், ஆசை, அபிலாஷை, விருப்பம் பூர்த்தியாகும் இடமாகும். 11ம் இடத்தில் அமர்ந்த சனி இந்திரஜித் ஜாதகத்தில் தன் காலை 12ம் இடத்தில் நீட்டினார். 12ம் இடம் என்பது விரையம், நஷ்டம், அற்ப ஆயுள் இவற்றை ஜோதிட சாஸ்த்திரம் குறிக்கும். இங்கு 12ம் கட்டத்தில் சனி பகவான் காலை நீட்டியதைக் கண்ட இராவணன் அவர் மேல் கோபம் கொண்டு சனி பகவான் காலை துண்டித்துவிட்டார். அதனால் “சனி முடவன்” என்று அழைக்கப்படுகிறார். 

ஒரு முறை சனி சகோதரரான யமனுடன் ஏற்பட்ட சண்டையில் யமன் சனி பகவானின் காலை உடைத்ததால் சனி பகவான் கால் முடமனாதாக கூறப்படுகிறது. 

காலவ முனிவரின் சாபத்தாலும் சனிபகவானின் கண் குருடாகவும் கால்கள் முடமாகியதாகவும் கூறப்படுகிறது. 

ஆக பார்வதி தேவியின் சாபத்தால் கால் முடமானது என்றும், இராவணன் கால்களை வெட்டியதால் கால் முடமானது என்றும் யமன் உடைத்ததால் கால் ஊனமானது என்றும் காலவ முனிவரின் சாபத்தால் கால் ஊனமானது என்றும் பல்வேறு புராணக் கதைகள் கூறப்படுகிறது. 

எனவே சனியின் கால்கள் பாதிக்கப்பட்டதால் அவரால் நடக்கமுடியவில்லை என்றும் அதனால் ஒரு இராசியைக் கடக்க அதிகக் காலம் எடுத்துக் கொள்வதால் அதாவது மெதுவாகச் செல்வதால் “மந்தன்” என்றும் “முடவன்” என்றும் பல பெயர்களால் அழைக்கப்படுகிறார். 

கோச்சாரத்தில் சனி பகவான்

சனி கோச்சாரத்தில் ஒருவரது ராசிக்கு 3,6,10,11ம் இடங்களில் சஞ்சரிக்கும் காலங்களில் மட்டுமே நற்பலன்களை அளிப்பார் என்றும் 5,9ம் இடங்களில் சஞ்சரிக்கும் காலங்கள் சற்று சுமாரான பலன்கள் என்றும் 1,2,4,7,8,12ம் ஆகிய இடங்களில் சஞ்சரிக்கும் காலங்கள் சிறப்பானது என்றும் ஜோதிட சாஸ்த்திரத்தில் குறிப்பிடப்படுகிறது.

சனி பகவான் ஒவ்வொருவரது ஜாதகத்திலும் அதாவது ராசிக்கு முன்பின் சஞ்சரிக்கும் காலங்களை எழரைச்சனி என்ற பெயரால் அழைக்கப்படுகிறார். இதில் ராசியில் அவர் சஞ்சரிக்கும் 2½ ஆண்டுகள் “ஜென்மச்சனி” என்றும் ராசிக்கு 12ம் இடத்தில் சஞ்சரிக்கும் 2½ ஆண்டுகளை “விரையச்சனி” என்றும் ராசிக்கு 2ம் இடமான குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் 2½ ஆண்டுகள் “குடும்பச் சனி” என்றும் குறிப்பிடுவர். ஆக மொத்தம் 7½ ஆண்டுகளை அவர் ஒரு ராசியில் முன்பின் சஞ்சரிக்கும் காலத்தில் ஒரு மனிதனின் வாழ்க்கையில் பங்கு கொள்வார். 

அடுத்து ஒருவரது ராசிக்கு 4ம் இடத்தில் கோச்சாரத்தில் சஞ்சாரம் செய்யும் 2½ ஆண்டுகள் காலத்தை “அர்த்தாஷ்டமச்சனி” என்ற பெயரால் அழைக்கப்படுகிறார். 

அடுத்து ஒருவரது ராசிக்கு 7ம் இடத்தில் கோட்சாரத்தில் சஞ்சாரம் செய்யும் 2½ ஆண்டுகள் காலத்தை “கண்டச்சனி” என்ற பெயரால் அழைக்கப்பட்டு மனித வாழ்வை ஆட்கொள்கிறார். 

அடுத்து ஒருவரது ராசிக்கு 8ம் இடத்தில் கோட்சாரத்தில் சஞ்சாரம் செய்யும் 2½ ஆண்டுகள் காலத்தை “அஷ்டமச்சனி” என்ற பெயரால் அழைக்கப்பட்டு மனித வாழ்வை இயக்குபவராகிறார். 

ஆக “எழரைச்சனி” என்ற பெயரால் 7½ ஆண்டுகள் “அர்த்தாஷ்டமச் சனி” 2½ ஆண்டுகள் “கண்டச்சனி” 2½ ஆண்டுகள் “அஷ்டமச்சனி” 2½ ஆண்டுகள் என்று அவரது சுற்று சுமார் 30 ஆண்டுகளில் சராசரியாக 15 ஆண்டுகளை இவரே ஒரு மனிதனுக்கான காலத்தை எடுத்துக் கொண்டு அவனை முழுமையாக ஆட்சி செலுத்துகிறார்.

ஏழரைச் சனி

எழரைச் சனி 3 பிரிவுகளைக் கொண்டது, அதாவது விரையச்சனி, ஜென்மச்சனி, குடும்பச்சனி ஆகும்.

விரையச்சனி

ஒருவரது ஜாதகத்தில் அவரது ராசிக்கு 12வது இடத்தில் சனி பகவான் கோட்சாரத்தில் சஞ்சரிக்கும் காலங்களில் உடல் ஆரோக்யக் குறைவு தேவைய்ற்ற செலவினங்கள் அலைச்சல்கள் வீண் பிரச்சனைகள் அதனால் தேவையற்ற மனக்குழப்பங்கள் ஏற்படும். உறவினர்களை இழக்க நேரிடும். நிம்மதியற்ற தூக்கம் ஏற்படும். தேவையில்லாமல் கடன் வாங்கி வட்டி கட்ட வேண்டிய ஏற்படும். இருக்கும் பொருட்கள் கையை விட்டுப் போகும்.

ஜென்மச்சனி

ஒருவரது பிறந்த ராசியில் கோச்சாரம் சனி சஞ்சாரம் செய்யும் காலங்களில் எதிலும் பிடிப்பின்மை. அலைச்சல் அவமானம் உடல் ஆரோக்யக் குறைவு தேவையற்ற மனக்குழப்பம் மன தைரியம் இன்மை எதிலும் மகிழ்ச்சியில்லாமல் இருத்தல் பயத்துடனே வாழ்க்கை நடத்துதல் நண்பர்களால் உறவினர்களால் தேவையற்ற பிரச்சனைகள் வேலையில் நிம்மதியின்மை குழந்தைகளால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும்.

குடும்பச்சனி

ஒருவரது ஜனன ஜாதகத்தில் ராசிக்கு 2ம் இடத்தில் கோச்சாரத்தில் சனி சஞ்சரிக்கும் சுமார் 2½ ஆண்டுகளில் குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகள் வீண் விவாதங்கள் கல்வியில் தடை, கணவன் மனைவி ஒற்றுமை குறைவு கொடுத்த பணம் வராமல் போகுதல், பொருளாதார நெருக்கடி தேவையற்ற பிரச்சனைகள் வார்த்தைகளால் குடும்பம் சிதறுதல் குடும்பத்தில் புதுவரவால் நிம்மதியற்ற சூழ்நிலை ஏற்படும். 

அர்த்தாஷ்டமச் சனி

ஒருவரது ஜாதகத்தில் ராசிக்கு 4ம் இடத்தில் சனி சஞ்சரிக்கும் சுமார் 2½ ஆண்டுகளில் அடிக்கடி உடல் ஆரோக்யக் குறைவு வேலை அல்லது தொழிலில் தேவையற்ற பிரச்சனைகள், தாயாரின் உடல் நலன் பாதிப்பு, குழந்தைகள் பிரிதல், அவர்களால் தேவையற்றப் பிரச்சனைகள், வீடு, மனை, சொத்து, வண்டி வாகனங்களில் தேவையில்லாத பிரச்சனைகள், தேவையற்ற அலைச்சல்கள் எப்பொழுதும் டென்சனுடனே வாழும் சூழ்நிலை ஏற்பட்டு விலகும்.

கண்டச்சனி

ஜாதகத்தில் ஒருவரது அவரது ராசிக்கு 7ம் இடத்தில் கோச்சாரத்தில் சஞ்சரிக்கும் 2 ½ ஆண்டுகளில் உயிருக்குக் கண்டம், கணவன் மனைவி உறவில் தேவையற்ற பிரச்சனைகள், உடல் ஆரோக்யக் குறைவு, உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைதல், சுய தொழில்களில் பிரச்சனை கூட்டுத் தொழில்களில் பார்ட்னர்களால் தேவையற்ற வீண் பிரச்சனைகள், நிம்மதியில்லாத பிரச்சனை, வெளிநாடு செல்வதில் தடை, வீண் விரையம் ஏற்படும்.

அஷ்டமச் சனி

ஜனன ராசிக்கு 8ம் இடத்தில் கோச்சாரத்தில் சனி சஞ்சரிக்கும் சுமார் 2 ½ ஆண்டுகளில் விபத்து ஆப்ரேஷன், அசிங்கம், அவமானம், துன்பம், துயரம், கஷ்டம், வேதனை, வலி அரசாங்கத்தால் வேதனை, நெருங்கிய உறவினர்களை இழத்தல், உடல் ஆரோக்யக் குறைவு வேலையில் பிரச்சனை எடுத்த காரியம் பூர்த்தியாவதில் தடை குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்படும். 

இப்படியாக சனியானவர் ஒருவர் ஜாதகத்தில் 30 ஆண்டுகளில் சுமார் 15 ஆண்டுகள் அவரது கட்டுப்பாட்டில் வைத்து நற்பலங்களையோ கெடுபலன்களையோ அவரது ஜாதகப்படி கொடுக்க வல்லவராகிறார்.

சனியானவர் கெடுபலன்களைக் கொடுத்தாலும் அவரது ஜாதகப்படி 7½ சனிக் காலங்களில் சிலருக்கு உயர்கல்வி, பட்டம், படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்யம் சொத்து வீடு, வண்டி வாகனங்கள் வெளிநாட்டு யோகம் ஆகிய நற்பலன்களையும் அளிக்க வல்லவராவர். ஆக 7½ சனியில் அவர் கெடுபலன்கள் மட்டுமல்ல நற்பலன்களையும் ஒருவரது ஜாதகத்தில் அவர் அமர்ந்திருக்கும் நிலையை வைத்து அளிக்கவல்லவராவர்.

சனியானவர், கருணாமுர்த்தியாவார். அவர் அளவற்ற செல்வமும் எல்லையற்ற மகிழ்ச்சியையும் அவரவர் வினைக்கேற்ப வாரிவழங்குவதில் வல்லவர். அவரே சிவன், அவரே சனீஸ்வரன் அவரே நவக்கிரகங்களில் முதன்மையானவர். 

புரணாத்தில் சனி பகவானின் பிறப்பு

“மரிசி” என்ற மகரிஷியின் புதல்வர் காசயப்ப முனிவர் ஆவார். காசயப்பருக்கு 13 மனைவிகள் உண்டு. அவரது மூத்த மனைவி அதிதியின் வயிற்றில் உதித்தவரே சூரிய பகவான் ஆவார். சூரிய பகவானுக்கும் தேவதச்சனா விசுவகர்மாவின் மகளான ஸ்முக்ஞா தேவி என்ற உஷா தேவிக்கும் திருமணம் நடந்தது. அவர்களுக்கு முதல் குழந்தையாக “சிரார்த்த தேவன்” என்னும் வைவஸ்தமனு புத்திரனாகப் பிறந்தார். அதன் பின் யமன் என்ற ஆணும் யமுனை என்ற பெண்ணும் இரட்டைக் குழந்தைகளாகப் பிறந்தனர். 

சூரியனது வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததால் அதனை பொறுக்க முடியாத ஸ்முக்ஞா தேவி என்ற உஷா தேவி தன்னைப் போலவே தன் நிழலைப் பெண்ணாக உருவாக்கி அவளுக்கு “சாயாதேவி” என்று பெயரிட்டு சூரியனுடன் வாழ்ந்து (ப்ரத்யுஷா) வருமாறு கூறி தன் பிள்ளைகளையும் அவளிடம் ஒப்படைத்துவிட்டு தன் தந்தை வீடு சென்றாள். அதன் பிறகு அவள் ஒரு குதிரை உருவம் கொண்டு தவம் செய்து வந்தாள்.

“சாயாதேவியும்” ஆரம்பத்தில் உஷாதேவியின் குழந்தைகளை தன் குழந்தைகளாகப் பாராட்டி சீராட்டி போற்றி வளர்த்து வந்தாள். இந்நிலையில் சாயா தேவிக்கு ச்ருதச்வரஸம் கருத கர்மா என்ற இரண்டு ஆண் குழந்தைகளும் தபதி என்ற பெண் குழந்தையும் பிறக்க சாயாதேவி ஆனவள் தன் குழந்தைகளையேப் பெரிதாக அன்பு பாராடி நடத்தி உஷா தேவியின் குழந்தைகளிடம் பாரபட்சம் காண்பிக்க ஆரம்பித்தாள். இதைக் கண்டு மனம் உடைந்து கோபம் கொண்ட உஷாதேவியின் புதல்வனான யமன் நாங்கள் என்ன பாவம் செய்தோம் என்றும் கோபம் கொண்டு தன்னுடைய சிற்றன்னையான சாயாதேவியை உதைக்க தன் காலைத் தூக்கினான். அதுகண்டு தன்னை உதைக்க வந்த யமனின் கால்கள் அழுகி விழட்டும் என்று சாயாதேவி சாபம் கொடுத்தாள்.

இந்த விஷயம் சூரிய பகவானுக்குத் தெரியவர அவர் தான் பெற்ற பிள்ளையையே ஒரு தாய் சாபம் தருவாளா என்று ஐயம் கொண்டு சாயாதேவியை அவர் தீர விசாரிக்க அவள் தான் உஷாதேவி அல்ல என்றும் சாயாதேவி என்றும் நடந்த உண்மை விவரங்களை எடுத்துக் கூறினாள். 

இதைக் கேட்ட சூரிய பகவான் தானும் குதிரை உருகொண்டு உஷா தேவியைச் தேடிச் சென்று ஒன்று சேர்ந்தார். அவர்களுக்கு அசுவினி தேவர்கள் என்ற இருவர் அதன் பின் பிறந்தார்கள், பின்னாளில் அவர்கள் தேவர்களுக்கு வைத்தியர் ஆனார்கள். 

சூரியனுக்கும் உஷா தேவிக்கும் முதலில் பிறந்த சிரார்த்த தேவன் வலுவான தவமியற்றி மன வந்தரத்துக்கு மனு ஆகும் பேறு பெற்றான். 

இரட்டையர்களாகப் பிறந்த யமனும் கடுமையான தவம் இயற்றி தென் திசைக்கு அதிபதியாக சத்தியத்துக்கும் தர்மத்துக்கும் புறம்பாமல் நடக்காமலும் பிதுர்க்களுக்கெல்லாம் தலைவனாகவும் ஆனார்.

யமனுடன் உடன் பிறந்த தங்கை யமுனையானவள் யமுனை நதியாக ஒடுகிறாள். 

சூரியபகவானுக்கும் சாயாதேவிக்கும் பிறந்த மூத்த மகன் சருதச்வரஸ் மேருமலையில் கடும் தவம் இயற்றி ஸாவர்ணி மன்வந்தரத்துக்கு மனுவாகிப் போனார்.

“சருதகர்மா” என்பவரே சனிபகாவன் என்ற பெயரை அடைந்து காசிக்குச் சென்று அங்கு கோயில் ஒன்றை கட்டி அங்கு லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து நெடுங்காலம் தவம் இயற்றி சிவன் சூரிய நாரயணர் வாயுதேவர் இவர்களின் அருள் பெற்று நவக்கிரங்களில் ஒருவராக ஆனார். 

சனிபகவான் எட்டு குதிரைகள் பூட்டிய தேரில் பவனி வருவார். மேல் இரு கைகளில் அம்பையும் வில்லையும், கீழ இரு கைகளில் வாளும் வரத அஸ்தமும் கொண்டு கழுகு வாகனத்தில் காக்கை கொடியில் ஸ்ரீ லெட்சுமி நரசிம்மரை உபாசிப்பவராக வலம் வருகிறார்.

புராணங்களில் சனீஸ்வரர்

சூரிய வம்ச அரசரனான தசரதர் ஒரு முறை ஜோதிடர்களைக் கலந்து ஆலோசிக்கையில் சனியானவர் கார்த்திகை நட்சத்திரத்திலிருந்து ரோகிணி நட்சத்திரத்திற்குப் பெயர்ச்சி அடைவதைக் கேட்டார். இதற்கான பயன் யாது என்று குலகுருவான “வசிஷ்டரை” அணுகித் தசரதன் கேட்டார்.

இதற்கு வசிஷ்டர் சனியானவர் ரோகிணியைப் பிளந்து கொண்டு சென்றால் நாட்டிற்கு 12 ஆண்டுகள் மழை இல்லாமல் கடும் பஞ்சம் ஏற்படும் என்றும், அதனால் மக்கள் மட்டுமில்லாமல் மாராக்களும் கஷ்டப்படும் என்றும் அதனால் இது உலகத்திற்கு கேடுவிளைவிக்கும் என்றும் அதனால் நீ நேரில் சென்று சனியைத் தடுத்தல் வேண்டும் என்று கூறினார். 

உடனே தசரதன் உயர்ந்த தேரில் புறப்பட்டு நட்ச்சத்திர மண்டலத்தை அடைந்து ரோகிணி நட்சத்திரத்திற்கு முன் சென்று அங்கு சூரியனைப் போல் அழகிய தேரில் அமர்ந்து உள்ள சனிபகவானுடன் போருக்குச் செல்ல ஆயுத்தமாகி அவருடன் ஆயுதம் பிரயோகம் செய்ய முற்பட்டார். இதைக் கண்ட சனி பகவான் தன்னைப் பார்த்து எல்லோரும் பயப்படும் பொழுது தன்னை எதிர்க்க துணிந்து நேரிலும் போரிட முனைந்த தசரதனைப் பார்த்து என் பார்வை பட்டாலே சகல உயிர்களும் துன்புறும் காலத்தில் என்னை எதிர்க்கத் துணிந்த உன்னைப் பாராட்டுகிறேன். உனக்கு என்ன வேண்டும் என்று கேட்க அதற்குத் தசரதன் சனிபகவானைப் பலவாறாகத் துதித்து ஸ்தோத்திரம் செய்து அவரை வணங்கிப் பணிந்து தாங்கள் ரோகிணியைக் கடப்பதால் ஏற்படும் 12 வருட பஞ்சம் வராமல் உலகம் நலம் பெற வேண்டும் என்று வரம் கோரினார். சனிபகவானும் அவ்வரங்களைத் தந்து தன்னலம் கருதாத உன் சேவைக்கு மேலும் ஒரு வரம் தருவதாகக் கூறினார். 

அப்படியானால் அடியேன் உங்கள் மீது செய்த ஸ்தோத்திரத்தை யார் அனுதினம் சொல்லி உங்களை வேண்டி வணங்குகிறார்களோ அவர்களைத் தாங்கள் துன்புறுத்தாமல் அவர்களுக்கு நன்மையளிக்க வேண்டும் என்று தசரதர் வேண்ட அப்படியே ஆகட்டும் என்றும் சனிபகவான் வரம் தந்து அருளினார்.

நிடத நாட்டு மன்னனான நணச்சக்கரவர்த்தி விதர்ப்ப நாட்டு அரசனின் மகளான “தமயந்தியை” சுயம்வரம் மூலம் திருமணம் செய்தான். சுயம்வரத்தில் கலந்து கொண்ட மற்ற நாட்டு அரசர்கள் தேவர்கள் இதனால் நளன் மேல் பொறாமை கொண்டு இருந்தனர். அவர்கள் நளனுக்கு துன்பம் இழைக்க வேண்டும் என்று சனீஸ்வரரை வேண்டினார்கள். 

சனியும் நளனை பிடிக்கச் சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருந்தார். இருந்தாலும் நளனைப் பிடிக்க முடியவில்லை. நளன் ஒரு முறை இறைவழிபாட்டிற்குச் செல்லுமுன் தன்னுடைய கால்களைச் சுத்தமாகக் கழுவாமல் செல்ல அக்கணத்தில் சனி நளனைப் பிடித்தார். மனித உடலில் கால்களைக் குறிப்பவர் சனி பகவான் ஆவார்.

சனி பிடித்த நிலையில் நளனை “புஷ்கரன்” என்பவன் சூதாட அழைக்க சனி பிடித்த நளன் தான் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் சூதாடி நாடு நகரம் அனைத்தையும் இழந்து உடுத்திய ஆடையுடனும் மனைவியுடனும் காட்டிற்குச் சென்று பல இன்னல்களை அனுபவித்து ஒரு நாளிரவில் காட்டில் தமயந்தியை தனியாகத் தவிக்கவிட்டு நளன் பிரிந்து சென்றான்.

காட்டில் அலைந்து திரிந்த நளன் “கார்க்கோடன்” என்ற சர்ப்பம் காட்டுத் தீயால் சிக்கியதைக் கண்டு அதைக் காப்பாற்றினான். ஆனால் கார்க்கோடான் என்ற அந்தச் சர்ப்பம் நளனைத் தீண்ட அவனது உடல் நீல நிறமாக மாறியது. இந்நிலையில் அயோத்தி மாநகர் சென்ற நளன் அந்த அரசனிடம் தேரோட்டியாக வேலைக்குச் சேர்ந்தான்.

காட்டில் தனியாக இருந்த தமயந்தி நளனைக் காணாது தன் தந்தை நாடு சென்றாள். நளன் உருமாறி வாழ்ந்து வருவதை அறிந்த அவள் தன் கணவனுடன் சேர்ந்து வாழ தன் தந்தையிடம் தனக்கு மறுபடியும் சுயம்வரத்திற்கு ஏற்பாடு செய்யச் சொன்னாள். தந்தையும் சம்மதித்து அயோத்தி அரசனுக்கும் அழைப்பு அனுப்பப்பட அயோத்தி அரசனின் தேரோட்டியாக இருந்த நளன் உண்மைகளைத் தெரிந்து தம் மனைவி தயந்தியுடன் சேர்ந்தாள்.

எனினும் நளன் தெளிவில்லாமல் கலங்கிய மனதுடன் குழப்பத்துடன் இருக்க இதற்கான காரணம் எதுவாக இருக்கும் என நினைத்து நாரதரை அரசவைக்கு அழைத்து விசாரிக்க அவர் நளன் இவ்வளவு நாள் பட்ட கஷ்டத்திற்கு சனிபகவானே காரணம் எனக் கூறி சனிபகவானுக்குப் பரிகாரம் செய்ய தலயாத்திரை செல்ல அறிவுறுத்தினார்.

நளன் அநேக தீர்த்தங்களில் நீராடியும் அநேக ஸ்தலங்களை தரிசனம் செய்தும் அவனது மனக்குழப்பம் தீராத நிலையில் அவன் திருமுதுகுன்றம் என்ற ஸ்தலத்தை அடைந்த பொழுது அங்கு பரத்வாஜ முனிவரை சந்திக்க அவரிடம் நளன் தன் நிலையை விளக்க அவர் நளனிடம் திருநள்ளாறு சென்று திருக்குளத்தில் நீராடி தர்ப்பாரேண்யேஸ்வரர் கோயிலில் உள்ள சனிபகவானை வழிபட்டால் மனக்குழப்பம் தீரும் எனக் கூறினார்.

நளனும் திருநள்ளாறு சென்று தீர்தத்தில் நீராடி சனிபகவானை வழிபட சனிபகவான் நளனிடம் அரசர்களில் உத்தமனே உன்னிடம் பத்தொன்பது ஆண்டுகளாக நான் வசித்து வந்தேன், கார்க்கோடன் என்ற சர்ப்பத்தின் கடும் நஞ்சும் விஷமும் எனக்கு மிக அதிகத் துன்பத்தைக் கொடுத்து மிகுந்த துன்பத்துடன் உன்னுடன் இருந்த நான் இப்பொழுது முதல் உன்னை விட்டு விலகுகிறேன். இவ்வுலகில் யார் உன் பேரைச் சொன்னாலும் அவர்களுக்கு என்னால் எத்தகைய துன்பமும் வராது என்றும் வரம் அளித்து நளனை விட்டுப் பிரிந்தார். 

சனியினால் பிடிக்கப்பட்டவர்கள் நளன் பெயரைச் சொன்னாலும் சரித்தரத்தை வாசித்து வந்தாலும் அவரால் ஏற்படும் துன்பங்கள் விலகும் என்பது புராணமாகும்.

ஒரு முறை சனிபகவான் முழுமுதற் கடவுளான “விநாயகரை” பிடிக்கச் செல்ல விநாயகர் இன்று நாள் நன்றாக இல்லை நாளை வந்து பிடித்துக் கொள் என்று கூற அதற்கு ஒப்புக் கொண்ட சனிபகவானை விநாயகர் தன் முதுகிலே சனியின் கையாலேயே நாளை வந்து பிடிக்கிறேன் என்று எழுதச் சொன்னார். மறுநாள் சனிபகவான் விநாயகரைப் பிடிக்க வரும்பொழுது நாளை வருகிறேன் என்று எழுதிய தன் முதுகைக் காண்பிக்க சனி மறுநாள் வர மறுநாளும் விநாயகர் தன் முதுகை காண்பிக்க இப்படியே பல நாட்கள் சனியினால் விநாயகரைப் பிடிக்க முடியவில்லை. எனவே சனி பிடிக்க முடியாத இருவரில் ஒருவராக விநாயகர் இருப்பதாகக் கூறப்படுகிறது. 

இதே போல் ஆஞ்சநேயரையும் சனி பகவான் பிடிக்க வரும்பொழுது ஆஞ்சநேயர் தான் கூப்பிடும் பொழுது வந்து தன்னை பிடிக்கச் சொன்னார். சனியும் ஒப்புக் கொள்ள இலங்கைக்கு பாலம் கட்டும் போது தன் தலையில் வந்து சனி பகவானை அமரச் சொல்ல சனியும் ஒப்புக் கொண்டு அனுமன் தலையில் சனி பகவான் அமர தன் தலைமீது உள்ள சனியை ஆஞ்சநேயர் அமுக்கவே சனிபகவான் திணறினார். தலையை அழுத்தம் பாறாங்கல்லை எடுக்க வேண்டி சனி பகவான் அனுமனைக் கெஞ்ச அப்படியானால் தன்னை மட்டுமல்ல தன் பெயரைச் சொன்னவர்களையும் பிடிக்க மாட்டேன் என்று வரம் அளித்தால் மட்டுமே சனியை விடுவிப்பேன் என்று அனுமன் சொல்ல சனி பகவான் அதற்கு ஒப்புக்கொண்டு வரம் அளித்த பிறகே ஆஞ்சநேயர் அவரை விடுவித்தார். இதனால் ஆஞ்சநேயரை வணங்கினாலும் அனுமன் சாலிசா பாராயணம் செய்தாலும் சனியால் ஏற்படும் தொல்லைகளிருந்து விடுபடலாம் என்று புராணம் கூறப்படுகிறது.

வானியலில் சனி

சூரிய குடும்பத்தில் சனி ஆறாவது கோள் ஆகும். சூரியனை சனிக்கிரகம் சுற்றி வர 29, 5, பூமி ஆண்டுகள் ஆகிறது. சனிக்கோளைச் சுற்றிப் பல வண்ண வளையங்கள் உள்ளன. இது வாயுக்களால் ஆனது ஆகும். இந்த வளையங்களில் ஹைட்ரஜனும் ஹீலியமும் கலந்து காணப்படுகிறது. இந்த வளையங்கள் ஒவ்வொரு காலத்திற்கும் மாறக் கூடியது ஆகும். சனிக் கோளின் நிலவுகள் இந்த வளையங்களின் ஊடாகப் பயணிக்கும், சனிக்கோளின் அற்புதமான இந்த வளையங்கள் பனிக்கட்டி மற்றும் பாறைத் துகள்களால் ஆனது என்று கருதப்படுகிறது. 

அழகிய வண்ண வளையங்கள் மிகுந்த சனிக்கோளாணது மர்மமானது என்றால் அதன் நிலவும் மர்மம் நிறைந்த தாகவே உள்ளது. சனியைச் சுற்றி உள்ள வளையங்களில் சிவப்பு மற்றும் நீல நிறம் பரவிக் கிடக்கிறது. 

சனிக்கு சனியைச் சுற்றி சிறியதும் பெரியதுமான ஏகப்பட்ட நிலவுகள் சுற்றி வருகின்றன. சனியின் மிகப் பெரிய நிலவு டைட்டான் ஆகும். சனியைச் சுற்றி தற்பொழுது 64 நிலவுகள் சுற்றி வருகிறது. இந்த நிலவுகள் எல்லாம் பனி உறைந்தும் குளிர்ச்சியாகவும் இருப்பதாகவும் இவைகளில் தண்ணீர் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர். 

ஜோதிட சாஸ்த்திரத்தில் “சனி” என்றால் குளிர்ச்சி என்று பொருள், எனவே தான் நம் முன்னோர்கள் குளிர்ந்த நீரில் நீராடு என்று குறிப்பிட்டுள்ளார்கள். மேலும் ஜோதிட சாஸ்த்திரத்தில் சனி என்றால் கருப்பு, நீலம், மற்றும் கருநீலம் என்று பெயர்.

விஞ்ஞானிகள் தற்பொழுது சனி மற்றும் அதன் நிலவுகளை ஆராய்ந்து கூறும் கருத்துக்கள் மிகவும் ஒத்துப் போகின்றன. 

சனி சூரியனிடமிருந்து சுமார் 886 மில்லியன் மைல்கள் தொலைவில் உள்ளது, இதன் குறுக்களவு சுமார் 75000 மைல்களாகும். பூமியை விட 100 மடங்கு எடை குறைந்தும், 700 மடங்கு தின்மையுடையதும் ஆகும். 

சனியின் காரகத்துவங்கள்

சனி “ஆயுளுக்குக் காரர்கன்” ஆவார். அத்துடன் “வேலை” அல்லது “தொழில்” இவற்றை அளிப்பதற்கு காரணகர்த்தாவர். “இயற்கை” அல்லது “செயற்கை” மரணம் நெருப்பு, நீர், காற்று ஆகாயத்தால் மரணம் தற்கொலை இவற்றால் ஏற்படும் மரணத்திற்கு காரணகர்த்தாவார். அசிங்கம் அவமானம் துக்கம் கவலை வேதனை துன்பம் துயரம் நம்பிக்கை மோசம் எதிரிகளால் போராட்டம் தீராத மனக்கவலை தீராத நோய் தீர்க்க முடியாத நோய் இவற்றுக்கெல்லாம் சனியே காரணமாவார். மேலும் வழக்கு, திருடு, கொலை, கொள்ளை, பஞ்சம், நிலநடுக்கம், இயற்க்கை சீற்றங்கள் இவற்றுக்கு காரணமாவார். ஆப்ரேஷன், கடன், வட்டி, குண்டு வெடிப்பு அரசாங்கத்தால் தண்டிக்கப்படுதல், கற்பழிப்பு, கெட்ட நடத்தை கெட்ட பெயர் தீராத மனக்குழப்பம்ம் நித்தம் நித்தம் போராட்டங்கள் நிம்மதியற்ற சூழ்நிலைகள் இவற்றுக்கெல்லாம் நவக்கிரகங்களில் சனியும் காரணகர்த்தாவார்.

சனி பகவானால் ஒருவருக்கு ஏற்படும் தொழில்கள்

இரும்பு எஃகு இவை உற்பத்தி மற்றும் விற்பனை சார்ந்த தொழில்கள் நிலக்கரி பெட்ரோல் டீசல் மண்ணென்னய் ஆயில் தோல் ரப்பர் சனல் தொழில்கள் உற்பத்தி மறறும் விற்பனைக்கு சனியே அதிபதியாவார். சிமெண்ட், தகவல் தொடர்பு, மருத்துவம், விஞ்ஞானம் உரம் கெமிக்கல் நிர்வாகம் ஆகிய போன்றவற்றிற்கு சனியே காரணம் ஆவார். எள் உளுந்து மா வாழை கரும்பு சம்பந்தமான விவசாயம் மற்றும் தான்ய வகைகள் பயறுவகைகள் இவற்றிற்கு சனியே அதிபதியாவார். ஏற்றுமதி இறக்குமதி பங்குச்சந்தை, தெருவோர வியாபாரம் அடிமை வேலை இவற்றிற்கு அதிபதி சனியாவார். 

பழைய பொருட்களை வாங்கி விற்கும் புரோக்கர் தொழில் தரகர்கள் அலைந்து திரிந்து செய்யும் அடிமை வேலைகள் கட்டிடம், பெயின்ட், எலக்ட்ரிக் தொழில்கள் சாக்குத் தொழில், நினைவுப் பொருட்கள், நினைவு சின்னங்கள் பழைய கட்டிடங்கள் போன்றவற்றில் வேலையை வழங்குவார். கூலி வேலை பிச்சை எடுத்தல் மூட்டை தூக்குதல் தோட்டி செருப்பு தயாரிப்பு மற்றும் விற்பனை அரக்கு மெழுகுவர்த்தி சுரங்கத் தொழில் போன்றவைகளில் ஈடுபடச் செய்வார்.

ஆடு, மாடு, பசு, எருமை, நாய் மற்றும் வீட்டு வளர்ப்புப் பிராணிகள் தொழில், குப்பை பெருக்குதல், துப்புரவு தொழில்கள், ஆசாரமற்ற தொழில்கள் இவற்றில் சனி பகவான் ஈடுபடச் செய்வார். செங்கல், மணல், சூளை, தார் ரோடு, தச்சு, பிளம்மிங் தொழில்களுக்கு அதிபதியாவார். அரசு வேலைகளில் கீழ்நிலை ஊழியர்கள் துப்புரவு பணியாளர்கள் சுமை தூக்கி வியாபாரம் செய்பவர்கள் பாதுகாவலர்கள் வேலையாட்கள் இவர்களை உருவாக்குபவராக சனி விளங்குகிறார்.

மேலும் மருத்துவம், விஞ்ஞானம், ஜோதிடம், சினிமா, கலைத்துறை ஆடை மற்றும் ஆபரணம், கட்டிடம், பொறியியல் போன்ற துறைகளை ஆள்பவராகவும் அவற்றில் வேலையை உருவாக்குபவராகவும் அவற்றில் பணிபுரியவும் வாய்ப்புகளையும் சந்தர்ப்பங்களையும் உருவாக்குவார்.

இதுபேல் இவர் தன்னுடன் சேரும் கிரகங்களின் தன்மைகேற்ப வேலை மற்றும் தொழில்களை உருவாக்குபவராவார். அத்துடன் பெரும் முதலாளிகளையும் உருவாக்குபவர் இவரேயாவார்.

இதை  க்ளிக் செய்து பாருங்கள்:- பரிகாரம் மற்றும் பரிகார ஸ்தலங்கள்

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Pongal 2026: பொங்கல் எந்த திசையில் பொங்கி வழிந்தால் அதிர்ஷ்டம்? இந்த திசையில் மட்டும் பொங்க கூடாது.!
குளிர்காலத்துல கரண்ட் பில் அதிகமா வருதா? இதோ இந்த சிம்பிள் மேஜிக் பண்ணுங்க.. பாதி காசு மிச்சமாகும்!