பெண்களுக்கும் வழுக்கை விழுது.. அது ஏன் தெரியுமா..? முக்கிய காரணம் இதுதான்..!

By Kalai Selvi  |  First Published Jun 24, 2024, 12:28 PM IST

மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கத்தால் முடி உதிர்வு ஏற்படும். ஆனால், இது தவிர முடி உதிர்தலுக்கு பல காரணங்களும் உள்ளன. அவை..


பொதுவாகவே, பெண்கள் பலர் முடி நீளமாக இருந்தாலும் சரி குட்டையாக இருந்தாலும் சரி, முடி வலுவாகவும் அடர்த்தியாகவும் இருக்க வேண்டும் என்று தான் விரும்புவார்கள். ஆனால், இன்றைய காலகட்டத்தில் மோசமான வாழ்க்கை முறை காரணமாக முடி உதிர்தல் பிரச்சனை அதிகரித்து வருகிறது. 

நிபுணர்களின் கூற்றுப்படி ஒரு நாளைக்கு 50 முதல் 100 முடிகள் உதிர்ந்தால் அது இயலபானது. ஏனெனில், அது புதிதாக வளரும் முடியால் மாற்றப்படுகிறது. ஆனால் சில பெண்களுக்கோ அளவுக்கு அதிகமாக முடி உதிரும். இதனால் அவர்களின் தலையில் வழுக்கை வர ஆரம்பிக்கும். இது பெண் வழுக்கை என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு வகையான முடி உதிர்தல். இது பெரும்பாலும் பெண்களை பாதிக்கிறது.

Latest Videos

undefined

ஆண் பெண் வழுக்கைக்கு வித்தியாசம் என்ன?: 
ஆண்களுக்கு முடி உதிர்ந்தால் அவர்களின் முடி கோடு குறைய ஆரம்பிக்கும். அதாவது, முடி உதிர்வு பிரச்சனையானது அவர்களுக்கு தலையின் முன்புறத்தில் இருந்து தொடங்கி, பின்னோக்கி செல்லும். இறுதியில் சிறிது சிறிதாக வழுக்கை வர தொடங்குகிறது.

பெண்களுக்கு இந்த பிரச்சனையானது அவர்களின் உச்சி வகுடு பகுதியில் இருந்து தொடங்குகிறது. சில நேரங்களில் தலை முழுவதும் தோன்றும் மற்றும் நெற்றி பொட்டுகளிலும் முடி உதிரும். இந்த பிரச்சனை வயதுக்கு ஏற்ப அதிகரிக்க தொடங்குகிறது.

பெண்களுக்கு ஏற்படும் வழுக்கையின் வகைகள்:
பெண்களுக்கு வழுக்கை ஏற்பட்டால் அவர்களுக்கு முடி வளரும் காலமும் மற்றும் வேகமும் சிறிது சிறிதாக குறையும். இதனால் அவர்களின் மயிர்க்கால்கள் சுருங்குவதால் அதிலிருந்து வளரும் முடியானது மெல்லியதாகவும், எளிதில் உடையக் கூடியதாகவும் இருக்கும். இதனால் மச்ச பெண்களை காட்டிலும் இவர்களுக்கு முடி அதிகமாகவே உதிரும். எனவே, பெண்களுக்கு ஏற்படும் வழுக்கையை, முடி உதிரும் வேகம் மற்றும் இடத்தை பொறுத்து மூன்று வகைகளாக பிரிக்கலாம் அவை..

ஒன்று - உச்சிவகிடு பகுதியில் எப்போதும் அடர்த்தி குறைவாகவே இருக்கும்.
இரண்டு - உச்சிவகிடு பகுதியில் எப்போதும் அடர்த்தி குறைவாகவே இருந்தாலும், மற்ற பகுதிகளில் பொதுவான அடர்த்தி இருக்கும்.
மூன்று - இந்த வகையானது ரொம்பவே மோசமானது என்றே சொல்லலாம். ஏனெனில், சில பெண்களின் உச்சந்தலையில் உள்ள மொத்த முடியின் அடர்த்தியும் குறைந்து, உச்சந்தலையின் மேல் பகுதி வெளிப்படையாகவே தெரியும். இதுதான் பெண்களின் முற்றிய வழுக்கை நிலை ஆகும்.

பெண்களுக்கு வழுக்கைக்கு வருவதற்கு காரணங்கள் என்ன?:

  • பெண்களுக்கு வழுக்கை வருவதற்கு முதற்காரணம் மரபணு தான். அதாவது, உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு ஏற்கனவே இந்த பிரச்சனை இருந்தால், இந்த நிலை உங்களுக்கும் ஏற்படும்.
  • பெண்களுக்கு 50 வயதை அடையும் போது இந்த வழுக்கை மேலும் அதிகரிக்க ஆரம்பிக்கின்றது. அதுமட்டுமின்றி, மாதவிடாய் நின்ற பிறகு அதுவும் அதிகமாகிறது. எனவே, ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றமும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
  • உங்களுக்கு ஏதேனும் கடுமையான தொற்று காய்ச்சல் இருந்தால் முடி உதிர்வு அதிகமாக ஏற்படும் மற்றும் நீங்கள் ஏதேனும் அறுவை சிகிச்சை செய்திருந்தால் கூட இந்த பிரச்சனை அதிகரிக்கும்.
  • தீவிரமான அல்லது நீண்ட கால மன அழுத்தத்தால் கூட முடி உதிர்வு பிரச்சனை அதிகரிக்கும்.
  • இரும்பு சத்து, துத்தநாகம், புரதம் மற்றும் பயோடின் குறைபாடுகள் உட்பட்ட பல ஊட்டச்சத்துக்கள் உடலில் இல்லாததினால் கூட முடி உதிர்தல் ஏற்படும்.
  • அதுமட்டுமின்றி, மகப்பேறு காலத்தில் பெண்களுக்கு ஈஸ்டரோஜன் சுரப்பு அளவு குறைவாக இருப்பதால், அது அதிக முடி உதிர்வுக்கு வழிவகுக்கும்.
  • முடியை இறுக்கமாக கட்டினால் கூட முடி உதிர்வுக்கு வழிவகுக்கும். அதுமட்டுமின்றி, கடுமையான இரசாயனங்களால் முடிக்கு சிகிச்சை அளித்தால் அதிக முடி உதிர்வு ஏற்படும்.
click me!