’கணுப்பிடி' எப்போது வைக்க வேண்டும்? அண்ணன், தம்பி நலம் பெருக வழிபடும் பெண்களின் கவனத்திற்கு..

By Pani MonishaFirst Published Jan 14, 2023, 12:37 PM IST
Highlights

உடன்பிறந்தோர் நலனுக்காக விரதம் இருக்கும் பெண்கள் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. 

கலைநிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் என திருவிழாவை மிஞ்சும் கொண்டாட்டங்கள் பொங்கல் பண்டிகையில் தான் உண்டு. இந்த ஆண்டு பொங்கல் விழா ஜனவரி 15ஆம் தேதி அன்று கொண்டாடப்படவுள்ளது. பொங்கலுக்கு மறுதினம் கணுப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனை கணுப்பிடி பொங்கல் என்றும் அழைப்பார்கள். 

திருமணமான பெண்களுக்கு பெற்றோரும், சகோதரர்களும் பூப்பொங்கல் சீர் வழங்கி வாழ்த்துவர். இந்த சீரை பெற்றுக் கொள்ளும் பெண்கள் உடன்பிறந்த சகோதரர்களின் நலனுக்காக நோன்பிருந்து கணுப்பிடி வைப்பதையே கணு பண்டிகை என்கிறார்கள். திருமணமான பெண்களுக்கு கணுப் பண்டிகை ஒரு வரப்பிரசாதம். பொங்கல் பானையில் கட்டியுள்ள புதிய மஞ்சளை வயது மூத்தத் தீர்க்க சுமங்கலிகள் ஐவரின் கைகளில் கொடுத்து ஆசி பெற வேண்டும். இந்த மஞ்சளை கல்லில் உரசி முகம், பாதம் ஆகிய இடங்களில் பூசுவதும் காணும் பொங்கல் வழக்கம் என்கிறார்கள் பெரியவர்கள். சிலர் இந்த மஞ்சளை கணவனிடம் கொடுத்து நெற்றியில் வைத்து விட சொல்வார்கள். 

கணுப்பிடி வைப்பது எப்படி? 

கிழக்கு திசையில் வாழை இலையின் நுனி இருக்குமாறு இரண்டு இலைகளை ஆற்றங்கரையிலோ அல்லது வீட்டு மொட்டை மாடியிலோ வைத்து கணுப்பிடி தயார் செய்ய வேண்டும். இதைச் செய்வதற்கு முன்னர் அந்த இடத்தை தூய்மையாக்கி, கோலமிட்டு செம்மண் பூசி கொள்வது அவசியம். 

இதையும் படிங்க: Pongal 2023: இந்த ஆண்டு பொங்கல் வைக்க சரியான நேரம் எப்போது? இதோ முழுதகவல்கள்!

இந்த பண்டிகைக்கு சில முக்கியமான சடங்குகளை பின்பற்ற வேண்டும். முதல் தினத்தில் பொங்கல் விழாவில் செய்த சாதத்தை சிறிதளவு மிச்சம் வைத்து கணுப்பிடிக்கு எடுத்துக் கொள்வதே மரபு. மிச்சம் வைத்துள்ள சாதத்தில் மஞ்சள், குங்குமம் ஆகியவற்றை கலந்து மஞ்சள் சாதம், வெள்ளை சாதம், சிவப்பு சாதம் என வெவ்வேறாக தயார் செய்து கொள்ள வேண்டும். பழுப்பு நிற சாதமாக சர்க்கரைப் பொங்கலை பயன்படுத்தலாம். 

எப்படி படைக்க வேண்டும்? 

தயார் செய்த அனைத்து வகை சாதனங்களையும் ஏழு வகை அல்லது ஒன்பது வகை என ஒற்றைப்படையில் வருமாறு இலைகளில் மூன்று வரிசைகளாக படைக்க வேண்டும். அதன் பிறகு பூஜைகள் மேற்கொண்டு ஆரத்தி எடுத்து பெண்கள் வணங்குவார்கள். இத்துடன் சடங்குகள் நிறைவேறவில்லை. வெற்றிலை, பாக்கு, உதிரிப்பூக்கள், பழம், தேங்காய், கரும்பு, முனை முறியாத அரிசியால் செய்த மஞ்சள் அட்சதை போன்றவை ஒரு தட்டில் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றொரு தட்டில் ஆரத்தி கரைத்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். 

கணுப்பிடியாக படைத்த சாத வகைகளில் மஞ்சள் அட்சதையையும், உதிரி பூக்களையும் இட்டு “கணுப்பிடி வைத்தேன். காக்கைப் பிடி வைத்தேன். காக்கைக்கு எல்லாம் கல்யாணமாம் கல்யாணம்’’ என கிராமப்புறங்களில் பாடுவார்கள். இந்த சடங்கு முடிந்த பிறகு தேங்காய் உடைத்து, சூடம் பற்ற வைத்து கணுப்பிடி படையல் வைத்த இலைகளையும், சூரிய பகவானையும் மனதார வணங்கி ஆரத்தி செய்வார்கள். கணுப்பிடி வைத்த சாதம் புனிதத்தன்மை கொண்டது என்பதால் நாய், பூனை போன்ற விலங்குகள் எச்சில் செய்யாமல் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். 

இதையும் படிங்க: Sugarcane benefits: பொங்கல் அப்போ சாப்புடுற கரும்புல இவ்வளவு நன்மையா? இது தெரிஞ்சா கட்டாயம் சாப்பிடுவீங்க!

கணுப்பிடி நேரம்! 

கணுப்பிடி வைக்கும் நேரம் அதிகாலையில் ராகு, எமகண்டம் இல்லாத நேரமாக இருக்க வேண்டும். ஜனவரி 16ஆம் தேதி அன்று அதிகாலை 5. 40 மணி முதல் 6. 40 மணிக்குள் வைக்கலாம். 

கணுப்பிடி வைத்த பெண்கள் அன்றைய தினம் இரவில் உண்ணமாட்டார்களாம். இந்த நோன்பை உடன் பிறந்தவர்கள் நலனுக்காகவும், அவர்களுடைய வம்சவிருத்திக்காகவும் பெண்கள் செய்கின்றனர். திருமணமாகி புகுந்த வீட்டுக்கு சென்ற பெண்களும் இந்த நோன்பை கடைபிடிக்கின்றனர். இந்த பண்டிகையின் மற்றொரு சிறப்பே திருமணமான பெண்களுக்கு பிறந்த வீட்டு சீராக பணமோ, துணியோ பிறந்த வீட்டிலிருந்து அனுப்பி வைப்பார்கள். பெண்களின் பிறந்தவீட்டுகாரர்கள் வசதி படைத்தவர்களாக இருந்தால் தங்க அணிகலன் கூட சீராக கொடுப்பார்கள். 

இந்த பண்டிகையில் பிறந்த வீட்டு சீர் வருவதால் பெண்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமான பிறகும் தனக்காக தன்னுடைய சகோதரி விரதம் இருப்பது உடன்பிறந்தோருக்கும் மகிழ்ச்சியளிக்கும். புகுந்த வீட்டிற்கு சென்ற பெண் அங்கு எந்த கவலையும் இன்றி சிறப்புமாக வாழ்கிறாள் என்பதை உடன்பிறந்தானின் நலனுக்காக மேற்கொள்ளும் இந்த விரதம் மூலம் முந்தைய காலங்களில் அறிந்துள்ளனர். அப்படி அவள் புகுந்த வீட்டில் மகிழ்ச்சியாக இருந்தால்தான் சகோதரர்களும் பிறந்த வீடும் சுபிட்சமாகவும், ஐஸ்வர்ய கடாட்சத்துடன் இருக்கும் என்பது ஐதீகம்.இந்த கணுப்பண்டிகையில் உடன்பிறந்தோருக்காக நோன்பிருந்து பிறந்த வீடும், புகுந்த வீடும் செழிப்புற சிறப்பாக வழிபடும் பெண்களை வாழ்த்துவோம். 

இதையும் படிங்க: Pongal wishes 2023: பொங்கல் அன்று உள்ளம் மகிழும் மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் வாழ்த்துகள்!

click me!