2023 புத்தாண்டுக்கு அன்பிற்குரியவருக்கு பரிசளிக்க சிறந்த ஐடியாக்கள்- இதோ..!!

By Dinesh TGFirst Published Dec 30, 2022, 9:16 AM IST
Highlights

இன்னும் சில நாட்களில் புத்தாண்டு பிறக்கவுள்ளது. அதை முன்னிட்டு நம்மில் பலர் நெருக்கமானவர்களுக்கும் நண்பர்களுக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் பரிசு கொடுக்க விரும்புவோம். இந்த புத்தாண்டுக்கு பரிசு தருவதற்காக சில வித்தியாசமான பொருட்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன. விரிவாக பார்க்கலாம்.
 

அனைவரும் இணைந்து இணக்கமாக கொண்டாடும் பண்டிகைகளில் ஒன்று புத்தாண்டு. நமது வாழ்க்கையில் புதிய தொடக்கங்கள் மற்றும் மகிழ்ச்சியான தருணங்கள் அமைந்திட கொண்டாட்டங்கள் வித்திடுகின்றன. பொதுவாக புத்தாண்டு தினத்தில் நமக்கு வேண்டியவர்களுக்கு பரிசளிப்பது பலருடைய வழக்கம். அந்த வகையில் வரும் 2023-ம் ஆண்டுக்கு என்று பரிசு வழங்க விரும்புபவர்கள் மங்களகரமானதாகவும் சிறப்பானதாகவும் பரிசுப் பொருட்களை தேர்வு செய்யலாம். உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் தனிப்பட்ட மற்றும் பயனுள்ள பரிசுப் பொருட்களை வழங்குவது குறித்து முடிவு செய்திருந்தால், இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள்.

பரிசு பெறுபவரின் விருப்பம்

புத்தாண்டுக்கு பரிசு தருவது என்று முடிவு செய்துவிட்டால், பல பொருட்கள் நம் நினைவுக்கு வரும். இருப்பினும், நீங்கள் பரிசை வாங்கும் நபரின் விருப்பங்களை கருத்தில் கொண்டு பரிசை வழங்குவது முக்கியம். இதன்மூலம் பரிசு அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். சீரற்ற பொருட்களை வழங்குவது அந்த நபரை தவறாக மதிப்பதாகிவிடும். பரிசுகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை, எனவே அவற்றை வாங்குவதற்கு முன் நீங்கள் சிந்திக்க வேண்டும்.

கேக்ஸ் மற்றும் பிஸ்கட்டுகள்

புத்தாண்டு தினத்தில் பலரும் இனிப்புகளை பரிமாறிக்கொள்வது வழக்கம். அது புதிய விஷயத்தின் தொடக்கம் என்பதால், இனிப்பு உணவுகளுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், நீங்கள் பரிசு வழங்கும் நபரின் விருப்பத்தை அறிந்திருக்கவில்லை என்றால் கேக்ஸ் மற்றும் பிஸ்கட்டுகள் வழங்குவது பொதுவான தேர்வாகும். அதனால் இந்த தேர்வு தவறாகிவிடாது. உங்கள் அன்புக்குரியவர்களுக்கு கேக்குகள் மற்றும் பிஸ்கட்டுகளைக் கொண்ட பரிசுப் பெட்டியை தயார் செய்யலாம். இதன்மூலம் உங்களிடம் இருந்து பரிசு பெறுபவர்களுக்கு புத்தாண்டு மிகவும் மகிழ்ச்சியான தொடக்கமாக அமையும்.

பூக்கள்

இவ்வுலகத்தில் பூக்கள் என்பது நேர்மறையான ஆற்றலை வழங்கக்கூடிய பொருளாக கருதப்படுகிறது. அதனால் புத்தாண்டு நாளில் உங்களுடைய அன்பிற்குரியவருக்கு பூக்களை வழங்குவது, அவர்களுக்கு நேர்மறையான எண்ணங்களை ஏற்படுத்துகிறது. நீங்கள் புத்தாண்டுக்கு என்று பார்ட்டி ஏதாவது ஏற்பாடு செய்தாலும், வருகிற விருந்தினர்களுக்கு பூச்செண்டு தரலாம். இது புத்தாண்டுக்குரிய சிறப்பான பரிசாக அமையும். அதனால் உங்கள் அன்பிற்குரியவருக்கு பிடித்த பூக்களை தொகுத்து பூச்செண்டாக்கி தரலாம். 

நறுமண மெழுகுவர்த்திகள்

மனநிலையை புதுப்பிக்க வாசனை மெழுகுவர்த்திகள் பெரிதும் உதவுகிறது. இதன்மூலம் நீங்கள் உங்களை உற்சாகமாகவும் புத்துணர்ச்சியுடனும் உணரலாம். அதனால் எந்தவித தயக்கமும் இல்லாமல் அன்புக்குரியவர்களுக்கு வாசனை மெழுகுவர்த்திகளை பரிசளிக்கலாம். தற்போது அவை வெவ்வேறு வண்ணங்களிலும் வடிவங்களிலும் விற்பனைக்கு கிடைக்கின்றன. எனவே அவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பது கடினம் அல்ல. கவர்ச்சியான மெழுகுவர்த்தி பெட்டிகளை விற்கும் சில பிராண்டுகள் உள்ளன. அதை வாங்கி அன்பிற்குரியவர்களுக்கு பரிசளிக்கலாம்.

நிதி நெருக்கடியை விரட்டும்; தாம்பத்தியத்தை சிறக்கவைக்கும் குங்குமப்பூ..!!

உலர் பழங்கள்

விடுமுறை நாட்களில் உலர் பழங்கள் மற்றும் பிற ஊட்டச்சத்து பொருட்களை பரிசளிப்பது அன்புக்குரியவர்களுக்கு ஆரோக்கியத்தை பரிசாக வழங்குவதற்கு சமமாகும். அதற்கு என்று அக்ரூட் பருப்புகள், உப்பு சேர்க்கப்பட்ட பாதாம், முந்திரி, பிஸ்தா, திராட்சை மற்றும் பிற சத்தான உலர் பழங்களை வாங்கி பரிசாக பேக் செய்து கொடுக்கலாம். மேலும் பேக்கேஜை இனிமையாக்க சில டார்க் சாக்லேட்டுகளையும் அந்த பெட்டிக்குள் வைக்கலாம்.

செடிகள்

ஒருவேளை மேலே கூறப்பட்ட பொருட்களை பரிசாக வழங்க விருப்பமில்லை என்றால், பூத்தொட்டிகளில் வைத்து பயனுள்ள செடிகள் அல்லது மரக்கன்றுகளை பரிசாக வழங்கலாம். இதை அவர்கள் தங்களுடைய நிலப்பகுதியில் புத்தாண்டு அன்று நட்டுவைத்து அன்றாடம் தண்ணீர் ஊற்றி வளர்த்து வருவார்கள். ஒருநாள் அதன்மூலம் பயன் கிடைக்கும் போது, உங்களை நினைத்துக் கொள்வார்கள். இது அவர்களுடைய காலம் முடிந்தும் நினைவில் நிற்கக்கூடிய பரிசு என்பது குறிப்பிடத்தக்கது.

click me!