Mothers Day 2023: ஒவ்வொரு அம்மாவும் கொண்டாடப்பட வேண்டியவர்! அன்னையர் தின வரலாற்று முக்கியத்துவம் தெரியுமா?

By Ma riya  |  First Published May 12, 2023, 4:35 PM IST

Mothers Day 2023 | இந்தாண்டின் அன்னையர் தினம் வருகின்ற 14ஆம் தேதி, ஞாயிற்றுகிழமை அன்று கொண்டாடப்படுகிறது. 


இந்த உலகில் நமக்கு எத்தனையோ உறவுகள் கிடைத்தாலும் தாய் என்ற உறவுக்கு ஈடில்லை. தாயில்லா வீட்டில் ஒரு அமைதி கூடி கொண்டிருக்கும். ஒரு வீட்டில் எல்லாரையும் இணைக்கும் மையப்புள்ளியாக அம்மா தான் இருப்பார். அப்பாவிடம் சொல்ல முடியாததை அம்மாவிடம் சொல்லி அனுப்பும் பிள்ளைகளாக தான் நாமும் சிறுவயதில் இருந்திருப்போம். 

ஒரு குழந்தையின் பசித்த வயிற்றை அறிந்து உணவு கொடுக்கும் அன்புள்ளம் கொண்டவள், தாயன்றி வேறு யாராக இருக்க முடியும். ஓய்வே இல்லாமல் உழைக்கும் அவளின் பாதம் சரணடைந்து, அவளுக்கு நன்றி செலுத்தவும், அவள் செய்யும் ஒவ்வொரு விஷயத்தையும் அங்கீகாரம் செய்யவும் அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. எளிமையாக சொன்னால் தாய்க்கு பாராட்டு, அன்பை செலுத்துவதற்கான நாள் தான் 'அன்னையர் தினம்'. தாயின் கடின உழைப்பு, தியாகம், அர்ப்பணிப்பு ஆகியவற்றை அங்கீகரிக்க வேண்டிய நேரம் இது.

Tap to resize

Latest Videos

அன்னையர் தினம் 2023: எப்போது?

 இந்தாண்டில் அன்னையர் தினம் வரும் மே 14ஆம் தேதி கொண்டப்படுகிறது. கடந்தாண்டு 2022இல் மே 8ஆம் தேதி அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது. 

அன்னையர் தின வரலாறு

அன்னையர் தினத்தின் வரலாறு பண்டைய காலங்களிலிருந்து தொடங்குகிறது. கிரேக்கர்களும், ரோமானியர்களும் தாய் தெய்வங்களான ரியா, சைபலின் நினைவாக திருவிழாக்களை கொண்டாடினர். ஆனால் அன்னையர் தினத்தின் உருவாக்கம் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவில் தான் ஆரம்பித்தது. இது அன்னா ஜார்விஸால் என்பவரால் தொடங்கப்பட்டது. அவர் தனது தாயார் 'ஆன் ரீவ்ஸ் ஜார்விஸ்' மற்றும் அனைத்து அன்னையர்களின் கடின உழைப்பு, அவர்கள் தங்கள் குழந்தைகளுக்காக செய்த தியாகங்களை கௌரவிக்க விரும்பினார். 1905ஆம் ஆண்டு காலமான தனது தாயாரின் நினைவாக தேசிய விடுமுறையை நிறுவுவதற்கான பிரச்சாரத்தைத் தொடங்கினார். 

1914 ஆம் ஆண்டு, அமெரிக்காவின் 28வது ஜனாதிபதியாக இருந்த உட்ரோ வில்சன், மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையை அன்னையர் தினமாகக் குறிக்கும் பிரகடனத்தில் கையெழுத்திட்டார். ஒரு மகனின் பாசத்தின் பரிசாக தான் 'அன்னையர் தினம்' உருவானது.  இந்த நாள் அமெரிக்காவில் அதிகாரப்பூர்வ விடுமுறையாக மாறியது. இதைத் தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கும் பரவியது.  

இன்றைய காலக்கட்டத்தில் அன்னையர் தினம் வணிகமயமாக்கப்பட்ட போதிலும், அன்னையர் தினத்தின் நோக்கமே ஒவ்வொரு அன்னைக்கும் மரியாதை செலுத்துவதும், நன்றி செலுத்துவதும் தான். ஒவ்வொரு நாளும் இரவும் பகலும் ஓயாமல் உழைக்கும் அவர்களின் கடின உழைப்பு, தியாகங்கள், நம் வாழ்வில் அவர்கள் வகிக்கும் முக்கிய பங்கை அன்னையர் தினம் நினைவூட்டுகிறது. 

இதையும் படிங்க: வெள்ளரிக்காய் தோல் நீக்காமல் அப்படியே சாப்பிடுவீங்களா? அப்ப முதல்ல இதை தெரிஞ்சிக்கோங்க.!

ஒரு தாய்க்கு..

மேலோட்டமாக பார்க்க வீட்டு வேலைகளை மட்டும் பார்ப்பது லேசான காரியமாக தெரியலாம். ஆனால் வாரத்தில் ஒருநாள் கூட விடுமுறை இல்லாமல் காலை எழுந்தது முதல் சமையல் உள்ளிட்ட பிற வேலைகளை செய்வது லேசான காரியம் இல்லை. உங்களுடைய அன்னையோ, மனைவியோ, தோழியோ வீட்டு வேலை செய்வதாக சொல்லும்போது அதை ஏளனமாக பார்ப்பதை நிறுத்துங்கள். 

சிலர் வீட்டு வேலைகளையும் கவனித்து கொண்டு வேலைக்கும் செல்லும் தாய்மாராக இருக்கிறார்கள். எத்தனை ஆண்களால் இதை செய்யமுடியும்? ஆனால் பெரும்பாலான தாய்மார்களின் தோள்கள் இப்படி தான் சுமை பழகியிருக்கின்றன. அந்த சுமையை பகிர்ந்து கொள்வது தான் அன்னையர் தினத்தின் சிறந்த பரிசாக இருக்க முடியும். 

அன்னையர் தினத்தின் பரிசாக உங்கள் தாய்க்கோ, வாழ்க்கைத் துணைக்கோ பரிசு வழங்க திட்டமிட்டிருந்தால் அவர்களிடமே அவர்களின் தேவையை மறைமுகமாக கேட்டறிந்து உதவுங்கள். வீட்டு உபயோக பொருள்களையே மனைவிக்கோ, தாய்க்கோ வாங்கி கொடுப்பதை நிறுத்துங்கள். பரிசு பொருள் தனித்துவம் வாய்ந்ததாகும், தாயானவளுக்கு பிடித்ததாகவும் இருக்க வேண்டும். ஒருவரை மதிப்பதை அவர்கள் விருப்பங்கள் வழி காணுங்கள். உங்களுடைய விருப்பத்தின் வழியாகவும், வீட்டின் தேவை வழியாகவும் தெரிந்து கொள்ள முயலாதீர்கள்.. உங்கள் அன்னையின் அன்பிற்கு விலை மதிப்பு இல்லை. உங்களின் நேரமும், அன்பான வார்த்தைகளும் தான் அவர்களுக்கு தேவை. முதிய வயதில் அவர்களை தவிக்க விடாமல் கரம் பற்றி கொள்ளுங்கள். சின்ன சின்ன பரிசுகளை கொடுத்து மகிழ்வுற செய்யுங்கள். முன்கூட்டிய அன்னையர் தின வாழ்த்துகள். 

இதையும் படிங்க: ரத்தசோகை முதல் கெட்ட கொழுப்பு வரை.. 'கருப்பு நிற உலர் திராட்சை' உண்பதால் நீங்கும் பிரச்சனைகள்!!

click me!