ஒரு நிறுவனம் மட்டுமே தப்பித்தது: மற்ற அனைத்து கார் நிறுவனங்களின் விற்பனையும் பலத்த அடி..

By Selvanayagam PFirst Published Dec 2, 2019, 10:20 PM IST
Highlights

கடந்த நவம்பர் மாதத்தில் ஹூண்டாய் நிறுவனத்தை தவிர்த்து பெரும்பாலான கார் தயாரிப்பு நிறுவனங்களின் விற்பனை பலத்த சரிவை சந்தித்துள்ளது. 
இந்த ஆண்டு கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு போதாத காலம் போல் தெரிகிறது. 

கடந்த ஆண்டு இறுதி முதலே கார் விற்பனை நிலவரம் நாளுக்கு நாள் மோசமாகி வந்தது. கடந்த செப்டம்பர் வரையிலான 11 மாதங்களில் கார் விற்பனை தொடர் சரிவை சந்தித்து வந்தது. 

இதனால் கார் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது கையிருப்பை குறைத்தன. இருந்தாலும் விற்பனை தொடர்ந்து மோசமாக இருந்ததால் வேறுவழியில்லாமல் உற்பத்தி குறைப்பு நடவடிக்கையை கையில் எடுத்தன.  

இந்த சூழ்நிலையில் கடந்த அக்டோபர் மாதத்தில் கார் விற்பனை சிறப்பாக இருந்தது. பி.எஸ்.4 கார்கள் கையிருப்பை காலி செய்ய வேண்டிய நெருக்கடி மற்றும் பண்டிகை காலத்தில் விற்பனை அதிகரிக்கும் நோக்கில் கார் தயாரிப்பு நிறுவனங்கள் சலுகைகளை அள்ளி வழங்கின. 

இதனால் அந்த மாதத்தில் கார் விற்பனை படுஜோராக இருந்தது. இந்நிலையில், கடந்த நவம்பர் மாதத்தில் மீண்டும் கார் விற்பனை மந்தகதியை அடைந்தது. இதனால் கார் தயாரிப்பு நிறுவனங்கள் விழிபிதுங்கி உள்ளன.


2019 நவம்பர் மாதத்தில் ஹூண்டாய் நிறுவனத்தை தவிர்த்து பெரும்பாலான முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களின் விற்பனை கடும் சரிவை சந்தித்துள்ளது. 

மாருதி சுசுகி நிறுவனம் கடந்த மாதம் மொத்தம் 1.39 லட்சம் கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. இது சென்ற ஆண்டின் இது மாதத்தை காட்டிலும் 3 சதவீதம் குறைவாகும். மகிந்திரா நிறுவனம் கடந்த மாதத்தில் 14,600 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. 

இது சென்ற ஆண்டின் இதே மாதத்தை காட்டிலும் 10 சதவீதம் குறைவாகும். மேலும் டாடா மோட்டார்ஸ் (39 சதவீதம்) மற்றும் ஹோண்டா (50 சதவீதம்) ஆகிய நிறுவனங்களின் விற்பனையும் வீழ்ச்சி கண்டுள்ளது. அதேசமயம் ஹூண்டாய் நிறுவனத்தின் கார் விற்பனை 2 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.

click me!