மார்கழியில் வழிபடலாம் வாங்க... 3ஆம் நாள் பாடல்கள்!

 
Published : Dec 17, 2017, 11:33 PM ISTUpdated : Sep 19, 2018, 01:41 AM IST
மார்கழியில் வழிபடலாம் வாங்க... 3ஆம் நாள் பாடல்கள்!

சுருக்கம்

margazi vazhipadu day 3 songs and explanations

மார்கழி மாதத்தில் அதிகாலை நேரத்தில் கோயில்களுக்குச் சென்று பாடி, வழிபாடு செய்வார்கள். செந்தமிழ்ப் பாக்களான திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களைப் பாடி மகிழ, இறையருள் பெற இதோ ஒரு வாய்ப்பு... இதனை நாமும் பாடுவோமே!
திருப்பாவை- பாசுரம் 3
***
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள்நம் பாவைக்குச் சாற்றிநீ ராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்து
ஓங்கு பெறும்செந் நெல்ஊடு கயலுகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்க குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.

பாசுர விளக்கம்:

இரண்டாம் பாசுரத்தில் நோன்பினைக் கடைப்பிடிக்க என்ன செய்ய வேண்டும், விலக்க வேண்டியவை எவை, மேற்கொள்ள வேண்டியவை எவை என்றெல்லாம் சொன்ன ஆண்டாள், இந்தப் பாசுரத்தில் நோன்பினால் உலகத்துக்கு விளையும் நலன்களை எடுத்துக் கூறுகிறார்.

மகாபலி சக்ரவர்த்தி வார்த்த நீர் கையில் விழுந்தபோதே, ஆகாயம் அளவுக்கு வளர்ந்து தன் திருவடிகளாலே மூன்று உலகங்களையும் அளந்த அந்த உத்தமனின் திருநாமங்களைப் பாடிக் கொண்டு, சுயநலனுடன் எதையும் வேண்டாமல், புருஷோத்தமன் மீது கொண்ட அன்பின் மிகுதியால் நோன்பு நோற்கிறோம்.  

நோன்புக்காக இவ்வாறு சங்கல்பம் செய்துகொண்டு நீராடினால் நாடு எங்கிலும் தீங்கு எதுவும் இல்லாமல் சுபிட்சமாக இருக்க மாதம் மும்மாரி பொழியும். 
அந்த வளமையில், ஆகாயம் அளவுக்கு வளர்ந்து பெருத்துள்ள செந்நெல் பயிர்களின் நடுவே மீன்கள் துள்ள, அழகிய நெய்தலாகிற பூங்குவளை மலரில் விருப்பம் கொண்ட வண்டுகள் மயங்கி உறக்கம் கொள்ள, மாட்டுத் தொழுவத்தில் சலிக்காமல் பொருந்தியிருந்து இரு கைகளாலும் பிடித்து வலிக்க, பசுக்கள் மிகுதியான பாலை வழங்கி, பால் வெள்ளத்தாலே குடங்களை நிறைத்து நீங்காத செல்வம் நிறையும் படி செய்யும். 
பாவாய் நீ எழு என்று ஆண்டாள் நோன்பின் மகிமையை எடுத்துரைக்கிறார். 

***
திருவெம்பாவை - பாடல் 3
***
முத்தன்ன வெண்நகையாய் முன்வந்தெதிரெழுந்தென் 
அத்தன் ஆனந்தன் அமுதன் என்று அள்ளூறித் 
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய் 
பத்துடையீர் ஈசன் பழ அடியீர் பாங்குடையீர் 
புத்தடியோம் புன்மைதீர்த்து ஆட்கொண்டாற் பொல்லாதோ 
எத்தோ நின் அன்புடைமை எல்லோம் அறியோமோ 
சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை 
இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய். 

பாடல் விளக்கம்:

முத்துப் போன்ற ஒளியான புன்னகையை உடையவளே ! எல்லார்க்கும் முன்பாகவே எழுந்திருந்து, "என் அத்தன், ஆனந்தன், அமுதன்" என்று வாய் திளைக்க இனிக்க இனிக்கப் பேசுவாய் ! இன்று என்ன ஆயிற்று உனக்கு ? வந்து கதவைத் திற ! என்று கூறுகிறார்கள் தோழியர்.

அதற்கு, மஞ்சத்தில் படுத்திருப்பவள்,  பத்து குணங்களை உடையவர்களே ! இறைவனின் அடியாகளாய் முதிர்ச்சி பெற்றவர்களே ! என்னிடம் நட்புடையவர்களே ! புதியவளாகிய என்னுடைய குற்றத்தை நீக்கி என்னையும் அடியார் ஆக்கிக்கொண்டால் குற்றமா ? என்று கேட்கிறாள்.

அதற்கு தோழியர்,  நீ இறைவன் பால் வைத்துள்ள அன்பு எங்களுக்குத் தெரியாதா என்ன ? உள்ளம் ஒழுங்கு பட உள்ளவர்கள் நம் சிவபெருமானைப் பாடாது போவாரா என்ன ? எங்களுக்கு இதெல்லாம் தேவை தான் ! என்று கூறுகின்றனர். 
 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

கர்ப்ப காலத்தில் இந்த 7 உணவுகள் கட்டாயம் சாப்பிடனும்?
இந்த '3' விஷயங்களை செய்தால் உடனே குளிங்க - சாணக்கியர்