காணும் பொங்கல் நாளில்...இப்படி ஒரு விரதமா...? திருமணம் ஆகாதவர்களுக்கு நடக்கும் அற்புதம்!

By manimegalai aFirst Published Jan 16, 2022, 6:42 AM IST
Highlights

காணும் பொங்கல், தமிழகத்தில் சாதி, மதம், பேதம் இன்றி அனைவராலும் கொண்டப்படும்  சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். 

தமிழர்களின் பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தின் அடையாளமாகத் திகழும் பொங்கல் திருநாள். இந்த தை திருநாளில் விதைத்த நெற்பயிரை அறுவடை செய்து பயன்பெறுவதுடன், வேளாண் தொழிலுக்கு வந்தனை செய்து கொண்டாடி மகிழ்வர். இந்த தை திருநாள் நான்கு நாட்கள் கொண்டாடப்படும். முதல், நாள் போகி பண்டிகை, இரண்டாம் நாள் தை பொங்கல், மூன்றாம் நாள் மாட்டுப்பொங்கல், நான்காம் நாள் காணும் பொங்கல் ஆகும்.

போகி, பழமையான பொருட்களை தீயிட்டு அழித்து, ‘பழைய கழிதலும், புதியன புகுதலும்’என்ற அடிப்படையில், புதுமையை வரவேற்கும் விதமாக போகிப் பண்டிகையை கொண்டாடுகின்றனர். இரண்டாம், நாளான பொங்கல் திருநாளில் நம் வீட்டில் சர்க்கரை பொங்கல் வைத்து, சூரிய பகவானிடம் வழிபட்டு உண்பது வழக்கம். மூன்றாம் நாளில்  மக்களின் வாழ்வில் ஒன்றிய பசுவுக்கு நன்றி தெரிவித்து, பசுக்களை வணங்கி வழிபடும் நாளாகக் கொண்டாடுகின்றனர். இந்நாளில், மாடுகளை குளிப்பாட்டி, சந்தனம், குங்குமம். சலங்கை கட்டி மாடுகளுக்கு அலங்காரம் செய்து, மாடுகளை பொங்கல் உண்ண வைத்து வழிபடுவது வழக்கம். காணும் பொங்கலுக்கு கன்னிப் பொங்கல், கணுப் பண்டிகை என்கிற பெயர்களும் உண்டு.  இந்த திருநாளானது, தமிழகத்தில் சாதி, மதம், பேதம் இன்றி அனைவராலும் கொண்டப்படும்  சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். இந்த திருநாளில் உறவினர்களுடன் ஒன்று கூடி கொண்டாடி மகிழ்வர். காணும் பொங்கல் நாளில் கிராமங்களில் மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டு,சருக்குமரம் ஏறுதல் போன்று பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் களைகட்டும். ஜல்லிக்கட்டு விளையாட்டு உலகம் முழுவது புகழ் வாய்ந்த ஒன்றாகும்.


 குறிப்பாக திருமணமாகாதவர்களுக்கு  உகந்த நாள்:

இந்த நாளில், மஞ்சள் நீராட்டு விழா நடைபெறும், அப்போது திருமணமாகாத கன்னி பெண்கள் தங்களுக்கு விருப்பமான ஆண்கள் மீது  தண்ணீர் ஊற்றி தன்னுடைய விருப்பத்தை அவர்களிடம் தெரிவிப்பார். பின்னர், எல்லோரும் கும்மியடித்து பாட்டு பாடிக்கொண்டே தங்கள் ஊரில் உள்ள ஆற்றங்கரை, குளக்கரை, ஏரிக்கரை என ஏதாவது ஒரு நீர்நிலையை நோக்கிச் செல்வார்கள். அந்நாளில் திருமணமாகாத கன்னி பெண்கள், மார்கழி மாதம் முழுவதும் விரதம் இருந்து தனக்கு நல்ல கணவர் கிடைக்க வேண்டும் என்று பொங்கல் வைத்து வழிபாடு செய்வர். அதுமட்டுமின்றி, பொங்கல் பானையில் கட்டிய புது மஞ்சள் கொத்தினை எடுத்து வயது முதிர்ந்த தீர்க்க சுமங்கலிகள் ஐந்து பேரின் கைகளில் அதை கொடுத்து அவர்களிடம் ஆசீர்வாதம்  பெற்றுக்கொள்வார்கள்.

 உடன்பிறந்த சகோதரர்களின் நல்வரவு:

இந்த நோன்பானது உடன்பிறந்த சகோதரர்களுக்காக, காணும் பொங்கலன்று பெண்கள் செய்யும் ஒரு வகை நோன்பு ஆகும். இதன் கீழ் உடன்பிறந்த சகோதரர்களின் வாழ்க்கை நலமாக இருக்கும்படியும், திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் ஆக வேண்டும்என்றும், அவர்களது சகோதரிகள் வேண்டிக் கொள்வார்கள். அண்ணன்களுக்காக இந்த நோன்பை செய்ய விரும்பும் சகோரதிரிகள், ஆற்றங்கரையிலோ அல்லது வீட்டின் மொட்டை மாடியிலோ கோலமிட்டு, இரண்டு வாழை இலைகளை கிழக்கு நோக்கி பார்த்தபடி வைத்து, ஐந்து வகை சாதங்களை சமைத்து வைத்து தத்தம் சகோதரர்களுக்காக வேண்டிக்கொண்டு, பின் தீபமேற்றி ஆரத்தி கரைத்து ஆற்றில் வழிபட வேண்டும். அதுமட்டுமின்றி, திருமணமான உடன்பிறத்தவர்களை வீட்டிற்கு அழைத்து அந்நாளில், கிராமத்தின் எல்லையில் உள்ள கோவில்களில் பொங்கல் வைத்து வழிபாடு செய்வது வழக்கம். காணும் பொங்கல் நாளில், உறவினர்களுடன் கூடி  மகிழ்வதுதான் சிறப்பு. ஆனால், தற்போது கரோனா பரவல் மின்னல் வேகத்தில் இருப்பதால் குறிப்பிட்ட சில உறவுகளுடன் பாதுகாப்பாக கொண்டாடுவதே சிறந்தது ஆகும்.
 

click me!