நகரத்தார்களின் சர்வதேச மாநாடு... சென்னையில் இன்று தொடங்கி வைக்கிறார் நிர்மலா சீதாராமன்..!

By Thiraviaraj RMFirst Published Jul 19, 2019, 12:55 PM IST
Highlights

நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் மூன்று நாள் மாநாட்டை சென்னையில் இன்று தொடங்கி வைக்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் மூன்று நாள் மாநாட்டை சென்னையில் இன்று தொடங்கி வைக்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

ஐயாயிரத்து நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒரு சமூகம் நாட்டுக்கோட்டை நகரத்தார்கள். காலத்திற்கேற்ற புதிய பரிமாணமும், எந்தச் சூழ்நிலையிலும் தமது சமூகம் வளர்த்து பெருமை காத்த இவர்களது பரிணாம வளர்ச்சியும் அபாரமானது.

காணிகாணியாய்த் தேடி, கோடி கோடியாய் தருமம் செய்த சமூகம் என்று நகரத்தார் சமூகத்தை இன்று வரையிலும் பாராட்டுகிறார்கள். மூவேந்தர்களின் ஆட்சி முடிந்து, பிற மதத்தவர்களின் ஆட்சி ஏற்பட்ட பின்னரும் சைவ சமய நம்பிக்கையை மட்டுமே உறுதியாக கொண்டது நகரத்தார் சமூகம். எந்த மத மாற்றத்தையும் ஏற்காது தனித்து நின்ற சமூகம் இன்று வரையிலும் தங்களின் பண்பாட்டுப் பதிவுகளை அவர்களின் வாழ்வியலோடு தக்க வைத்து கொண்டிருக்கிறார்கள். சோழ மன்னனுக்கு முடி சூட்டும் உரிமை நகரத்தாருக்கு மட்டுமே இருந்தது. நகரத்தார் தம்பதியுடன் வந்து தான் மன்னனுக்கு முடி சூட்ட வேண்டும் என்பதிலிருந்து நகரத்தார்களின் பெருமையை அறியலாம்.
 
இன்று பிரம்மாண்டமாக வீற்றிருக்கும் ஆலயங்கள், பாடசாலைகள், பசுமடங்கள், சத்திரங்கள், மருத்துவமனைகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் என்று காசி முதல் இராமேஸ்வரம் வரை இவர்களின் அறப்பணி இல்லாத இடம் இல்லை எனும்படி எல்லா இடங்களிலும் நாட்டுக் கோட்டை நகரத்தார்களின் பங்களிப்பு பயன் தந்து கொண்டிருக்கிறது. மக்கள் தொகையால் சிறிய சமூகமே ஆனாலும், இன்று வரையிலும் அவர்களுக்குள்ளான பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் அடுத்த தலைமுறைக்கும் தாங்கி பிடித்து வருகிறார்கள். 

நகரத்தார் சமூகத்தினரின் இந்த வளர்ச்சியானது ஏதோ ஐம்பது, நூறு ஆண்டுகளில் வந்ததல்ல. கடந்த பல நூற்றாண்டுகளாகவே வணிகத் துறையில் நகரத்தார் சமூகத்தினர் தலை சிறந்து வருவதாலேயே இன்றைக்கும் அந்தத் துறையில் கொடிகட்டிப் பறக்கிறார்கள். குறிப்பாக, 17, 18-ம் நூற்றாண்டுகளில் இந்த சமூகம் கண்ட மிகப் பெரிய மாற்றமே இன்றைய நவீன வணிக உலகில் முன்னணியில் இருக்கத் தேவையான அறிவையும் அனுபவத்தையும் தந்திருக்கிறது. 
 
இந்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தொடர்ந்து நடைபெற்று வரும் நகரத்தார்களின் சர்வதேச வர்த்தக மாநாடு இன்று முதல் 21ம் தேதி வரையில் சென்னை ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலில் நடக்கவிருக்கிறது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் துவக்கி வைக்கும் இந்த மாநாடு நகரத்தார்களின் சங்கமிப்பாக இருக்கும். அவர்களின் உறவுகளைப் புதுப்பித்துக் கொள்ளவும், கடல் கடந்து பொருளீட்டிக் கொண்டிருக்கும் நகரத்தார்களின் அனுபவங்களைப் பகிர்ந்துக் கொள்ளவும் வாய்ப்பாகவும் இருக்கும்.
 இன்றைய தலைமுறையினர் பிரமிக்கும் நகரத்தார்களின் கட்டமைப்பு, கட்டடக்கலை, திட்டமிடுதல், அனுபவங்கள் எல்லாம் அடுத்த தலைமுறையினருக்கும் கொண்டு செல்லும் முயற்சியாக இருக்கும் இந்த மாநாட்டில், வழிகாட்டுதலும், அனுபவ பகிர்வுகளோடு இந்த மூன்று நாட்களுக்கும் திருவிழாவாகவே கொண்டாட இருக்கிறது நகரத்தார் சமூகம்.

click me!