
ரொமான்டிக் வாரத்தின் 6 வது நாளான இன்று பிப்ரவரி 12-ம் தேதி தழுவுதல் தினம்.பிப்ரவரி 14ஆம் தேதி வாலண்டைன்ஸ் டே காதலர் தினம் கொண்டாடப்படுகிறது.
தழுவுதல் தினம், என்றவுடன் குஷி படத்தில் S. J. சூர்யா இயக்கத்தில், விஜய் நடிப்பில் வெளிவந்த கட்டிப்பிடி... கட்டிப்பிடிடா..கண்ணால கண்டபடி.. கட்டிப்பிடிடா என்ற பாடல் வரிதான் ஞாபகம் வருகிறது. அதோடு, கமல்ஹாசன் அவர்கள் ''வசூல் ராஜா எம்பிபிஎஸ்'' திரைப்படத்தில் கட்டிப்பிடி வைத்தியம் சொல்லி தந்த மகான். தமிழ் சினிமாவில் இன்னும் ஏகப்பட்ட கட்டிப்பிடி வைத்தியங்கள் உள்ளன. பிக் பாஸ் பிரபலம் சினேகன், கட்டிப்பிடி வைத்தியத்தில் பிரபலமானவர்.
பிக் பாஸ் சீசன்1-ல் கலந்துகொண்ட பாடலாசிரியரான இவர் சக போட்டியாளர்களை அடிக்கடி கட்டிப்பிடித்து பெரும் சர்ச்சையை கிளப்பினார். அதைப் போன்றுதான் பிக் பாஸ் சீசன்5-ல், அபிஷேக் ராஜா மற்றும் அபிநய் போன்றோர் சினேகன் இடத்தை பிடித்ததாக மீம்ஸுகள் வலம் வந்தன.பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கூட கட்டிப்பிடி வைத்தியம், என்பது ஒரு அன்பின் பரிமாற்றம் என்பதை மீண்டும் ஒரு முறை எடுத்துரைத்தார்.
அதேபோன்று, பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியில் நடைபெற்ற,பட்டிக்காடா பட்டணமா என்ற டாஸ்கில் இடம், பொருள், ஏவல் அறிந்து செயல்படுபவர்கள் கிராமத்து மக்களா? நகரத்து மக்களா? என்ற தலைப்பில் பிக்பாஸ் போட்டியாளர்கள் இரண்டு அணிகளாகப் பிரிந்து விவாதித்தனர்.
அப்போது, ஐக்கி பெர்ரி பிக்பாஸ் நிகழ்ச்சியை சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்ப்பதால் பிரியங்கா சக போட்டியாளர்களை பாசத்துடன் கட்டிப் பிடிப்பது சிலரை முகம் சுழிக்க வைக்கும் என்று வாதிட்டார். இதற்கு பதில் கொடுத்த பிரியங்கா, ’11 வயதில் இருந்தே, பிறரை கட்டிப்பிடித்து என்னுடைய பாசத்தை வெளிப்படுத்துவேன். அதுவும் சைடா இல்ல நேருக்கு நேர் இருக்கமாக கட்டிப் பிடிப்பது தான் என்னுடைய வழக்கம் என்று பதில் அளித்தார். கமல் சாரே கட்டிப்பிடி வைத்தியத்தை பற்றி தெளிவுபடுத்தியிருக்கிறார். அப்படி இருக்கும்போது பாசத்துடன் கட்டிப் பிடிப்பது எப்படி தவறாகும் என்று மீண்டும் ஒருமுறை உரக்க சொன்னார்.
மனிதன் ஆரோக்கியமாக வாழ்வதற்கு உணவும், உடற்பயிற்சியும் தேவையான ஒன்று. இதையும் தாண்டி மன நிம்மதி மற்றும் சந்தோஷத்திற்கு, காதலிப்பது என்பது ஆரோக்கியமான ஒன்றாக மாறிவிட்டது. அந்தவகையில் கட்டிப்பிடித்தல் மற்றும் முத்தமிடுதல் என்பது காமத்தை மட்டுமே சார்ந்தது அல்ல, அது உண்மையான அன்பை வெளிப்படுத்தும் விதங்களிலும் அமையலாம்.
எனவே, நெருக்கம் என்பது எல்லோருக்கும் ஒரே மாதிரி பொருந்துவதில்லை. இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எந்த கட்டுப்பாடுகளும் இல்லை. உங்களது அன்பை உள்ளுக்குள் வைத்துக் கொள்வதால் எந்த பயனும் இல்லை. அதனை அணைப்பது, முத்தமிடுதல், வருடுதல், கையை பிடித்துக் கொள்வது போன்ற வகைகளில் வெளிப்படுத்தினால் இருவருக்குமே அது அருமருந்தாகும். அப்புறம் உங்களது இணையிடம் இருந்து வரும் பதில் நடவடிக்கையைப் பார்த்து அசந்தேப் போவீர்கள்.
நோய்களிலிருந்து பாதுகாக்கும் கட்டிப்பிடி வைத்தியம்:
கட்டிப்பிடித்தல் மூலம் நம் அன்புக்குரியவர் மேல், நமக்கு அன்பும் அக்கறையும் ஏற்படும். இதன் மூலம் மூளை நன்கு செயல்படுவதால், நோய்களுக்கு எதிராகவும் போராட உதவுகிறது.
மன அழுத்தத்தில் முக்கிய பங்கு:
ஒருவரோடு ஒருவர் நெருக்கமாக இல்லாத ஜோடிகளை விட, நெருக்கமாக இருக்கும், அடிக்கடி அணைப்பது, முத்தம் இடுவது போன்ற ஜோடிகளுக்கு மன அழுத்தம் குறைவாக இருக்குமாம்.
இதயம் சார்ந்த நோய்கள் வராமல் தடுக்கும்:
மந்தமான மனநிலையிலும், சோகமாக இருப்பவரையும் கட்டிப்பிடிக்கும் போது, அவருக்கு உற்சாகம் கிடைக்கின்றது. இந்நிகழ்வு கவலையில் இருந்து நம்மை விடுபட வைக்கின்றது. குறிப்பாக இதயம் சார்ந்த நோய்கள் வராமல் இருக்க, கட்டிப்பிடித்தல் பெருமளவில் உதவி புரிகின்றது.
உடல்வலி குறையும்:
கட்டிப்பிடி வைத்தியத்தில் உள்ள சுவாரசியம் என்னவென்றால், கட்டிப்பிடிக்கும்போது தசைகள் இலகுவாகி, உடலில் உள்ள வலிகள் குறைகின்றது. இது நமது உடலை ரம்யமாக வைத்துக்கொள்ள உதவுகின்றது. நம்முடைய நரம்பு மண்டலத்தையும் சமமாக வைத்துக்கொள்ள இது பயன்படுகிறது.
இந்த கட்டிப்பிடி வைத்தியத்தை நீங்களும் உங்கள் காதலன், காதலியுடனோ, அன்புக்குரியவர்களுடனோ, உறவுகளுடனோ பரிமாறிக்கொண்டால், உடலையும், மனதையும் மகிழ்ச்சிகரமாக வைத்துக்கொள்ளலாம். வெளி நாடுகளில் இது சாகஸமான ஒன்றாகும். அதில் காம இச்சை கிடையாது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.