
கிரகங்களின் மாற்றங்களை வைத்து ஒருவரது வாழ்வின் நன்மை, தீமை கணிக்கப்படுகிறது. நவகிரக வழிபாடு என்பது எவ்வளவு முக்கியம் என்பதை பலரும் அறிவதில்லை. உங்கள் ராசிக்கு எந்த கிரகம், தற்போது உங்களை ஆட்டி படைக்கிறது என்பதை தெரிந்து கொண்டு, அதற்கேற்ற பூஜை செய்து வழிபட்டால் நன்மை பெறலாம்.
ஜோதிடத்தின் படி, நவக்கிரங்களில், சந்திரன், தினமும் மாறும் கிரகம் ஆகும். குரு வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பெயர்ச்சியாகும். சூரியன், சுக்கிரன், புதன், செவ்வாய் போன்றவை மாதம் ஒருமுறை மாறும் கிரகம் ஆகும். ராகு, கேது ஒன்றரை வருடத்திற்கு ஒரு முறை பெயர்ச்சியாகும்.
அதேபோன்று, மெதுவாக நகரும் சனி கிரகம் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே, தனது ராசியை மாற்றிவிடுகிறது. இறுதியில், சனி பகவான் 12 ராசிகளை சுற்றி வர 30 ஆண்டு காலம் ஆகும். எனவே, நவக்கிரங்களில் சனிபகவான் அதிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கிரகமாக கருதப்படுகிறார்.
எனவே, இந்த நவகிரகங்களை எந்தெந்த கிழமையில் வழிபடுவது? என்னென்ன நன்மைகளை தரும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
சூரிய பகவான்:
முதலாவதாக, நவ கிரகத்தில் முதல் கிரகமாக இருக்கும், சூரிய பகவானை ஞாயிற்றுக் கிழமை வழிபட்டு வருபவர்களுக்கு வாழ்க்கையில் எல்லா வளமும், நலமும் கிடைக்கும். தினசரி சூரிய நமஸ்காரம் செய்து வருபவர்களுக்கு வாழ்க்கையில் தோல்வி என்பதே ஏற்படாது. சீரான சிந்தனையும், தெளிவான முடிவு எடுக்கும் திறன் வளர கூடிய அற்புத ஆற்றலைப் பெறுவார்கள்.
சந்திர பகவான்:
மனதிற்கு அதிபதியாக இருக்கும் சந்திர பகவானை திங்கட்கிழமை தோறும் வழிபட்டு வருபவர்களுக்கு எல்லா நன்மைகளும் கிடைக்கும். திங்கட் கிழமை காலையில், குளித்து விட்டு கோவிலுக்கு சென்று, சந்திர பகவான் மந்திரங்களை உச்சரித்து அவரை வழிபட்டு வந்தால், தீராத வினையெல்லாம் தீருமாம்.
செவ்வாய் பகவான்:
செவ்வாய்க் கிழமையில் செவ்வாய் பகவானை வழிபட்டு வருபவர்களுக்கு தைரியம் அதிகரிக்கும். திருமண தடைகள் அகலவும், சொந்த வீடு அமையவும் வழிபட வேண்டிய கிரகம் செவ்வாய் பகவான் ஆகும்.
புதன் பகவான்:
புதன் கிழமையில் புத பகவானை வழிபட்டு வந்தால் நல்ல அறிவாற்றலும் பெருகும். கல்வி கற்கும் மாணவர்கள் கண்டிப்பாக புதன் கிழமையில், புதன் பகவானுக்கு பச்சை வஸ்திரம் சாற்றி வழிபட்டு வந்தால் படித்தது மறந்து போகாது. அது மட்டுமல்லாமல், அவர்களுக்கு படிக்கும் பொழுது கவனம் சிதறாமல் மனம் ஒருமுகப்படும்.
குரு பகவான்:
வியாழன் கிழமையில் குரு பகவானை வழிபட்டு வருபவர்களுக்கு குழந்தை பாக்கியமும், செல்வ செழிப்பும் ஏற்படும். நீண்ட நாட்களாக குழந்தைப்பேறு இல்லாதவர்கள் தொடர்ந்து வியாழக்கிழமையில் குரு வழிபாடு செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.
சுக்கிர பகவான்:
வெள்ளிக்கிழமையில் சுக்கிர பகவானை வழிபட்டு வர எல்லா வளமும், நலமும் உண்டாகும். திருமண யோகம் கிடைக்க, சுக்கிர பகவானை வழிபட வேண்டும். குழந்தை பாக்கியம், கடன் தொல்லை நீங்க, வீடு, மனை, சொத்துக்கள் போன்ற சுகபோக வாழ்க்கைக்கு தேவையான அத்தனை சம்பத்துக்களையும் பெறுவதற்கு சுக்கிர வழிபாடு செய்து வருவது நல்லது.
சனி பகவான்:
கிரங்கங்களில் முக்கியமாக கருதப்படும், சனி பகவானை சனிக் கிழமைகளில் வழிபாடு செய்துவர ஆயுள் பலம் பெருகும். நீதியின் கடவுளான சனிபகவான் வழிபாடு, சனிக்கிழமையில் தொடர்ந்து மேற்கொள்வது எல்லையில்லா நன்மை தரும்.
ராகு மற்றும் கேது பகவான்:
நிழல் கிரகங்களாக செயல்படும், ராகு மற்றும் கேது பகவான் வழிபாட்டிற்கென தனிப்பட்ட ஒரு கிழமை கிடையாது. எந்த கிழமை வேண்டுமானாலும், இராகு கேது பகவான் வழிபட்டால் வாழ்வில் நல்ல பலன்கள் ஏற்படும். இவர்கள் பெயர், புகழ், பதவி போன்றவையும் அடையும் யோகம் பெறுவார்கள்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.