‘பழைய கழிதலும், புதியன புகுதலும்’என்ற அடிப்படையில், புதுமையை வரவேற்கும் விதமாக போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
சூரியனுக்கு நன்றி சொல்லி பொங்கல் வைப்பது, விவசாயத்துக்கு உதவிய மாடுகளுக்கு நன்றி சொல்வது, ஜல்லிக்கட்டு, உறவுகளைக் காண்பது என கிராமங்களில் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை களைகட்ட துவங்கியுள்ளது. தமிழகத்தில் வரும் 14-ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. அதற்கு முந்தைய நாளான இன்று போகி பண்டிகை. இந்நாளில் வீடுகளை சுத்தம் செய்து பழைய பொருட்கள் அனைத்தையும் தீயிட்டு எரிப்பது நம் அனைவருக்கும் அறிந்த ஒன்று. இருப்பினும், நம் முன்னோர்கள் கடைபிடிக்கும் ஒரு சில பழக்க வழக்கங்கள் இன்றைய நவீன உலகில் மறைந்து வருகின்றனர். அவற்றை கடைபிடிப்பது என்பது இந்நாளில் மிகவும் அவசியமான ஒன்றாகும்.
போகிப் பண்டிகை
‘பழைய கழிதலும், புதியன புகுதலும்’என்ற அடிப்படையில், புதுமையை வரவேற்கும் விதமாக போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பழையவற்றையும், உபயோகமற்றவையும் விட்டெறியும் நாளாகக் கருதப்படுகிறது. அதன்படி, வீட்டின் முற்றம், வைக்கோல் போர், உள்ளிட்ட பகுதிகளில் வேப்பிலை கொத்து, சிறுகண்பீலை பூ, ஆவாரம் பூ கொத்து ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து செறுகி வைத்து கொண்டாடி வருகின்றனர்.
போகம் என்றால் இன்பம், மகிழ்ச்சி என்கிற பொருள்படுகிறது. போகம் என்கிற சொல்லுக்கு அதிபதியாக விளங்குபவர் இந்திர பகவான். விவசாயிகளுக்கு மழையைப் பொழியும் இந்திர பகவானை சிறப்பிக்கும் விழாவாக போகி பண்டிகை கொண்டாடப்பட்டது.
இருப்பினும், போகி பண்டிகையில் இந்த 5 விஷயங்களும் மறக்காமல் கடைபிடிப்பது அவசியம்.
மருத்துவ முறைகளை கடைபிடிப்பது அவசியம்:
மழைக்காலம் முடிந்து குளிர் உச்சமாகும் காலம் என்பதால் அதிகம் நோய்க்கிருமிகள் பரவும் ஆபத்து உள்ளது. அதுவும் நோய்த்தொற்று பரவும் இந்த சூழலில் பாரம்பர்யமாக நாம் செய்து வரும் மருத்துவ முறைகளை கடைப்பிடிக்க வேண்டும். குறிப்பாக வீடு முழுக்க மஞ்சள்,சாணம் தெளித்து சாம்பிராணி, குங்கிலிய தூபம் போட்டு சூழலை சுத்தமாக்கலாம்.
தெய்வ வழிபாடு:
போகியில் வீட்டு தெய்வங்களை வழிபடும் வழக்கம் நம்மிடம் உண்டு. அதனால் நம் முன்னோர்களை குலதெய்வ கோயிலுக்குச் சென்றோ, நடுவீட்டில் விளக்கேற்றியோ வழிபடலாம். கன்னிப்பெண்கள் இறந்து போய் இருந்தால் அவர்களை சீலைக்காரியாக வழிபடும் வழக்கம் இன்றும் உண்டு.
மூலிகைக் காப்பான்கள்:
வீட்டு வாசலில், பின் வாசலில் மூலிகைக் காப்பான்களை கட்டி வைக்கலாம். இந்த மூலிகைக் காப்பான்களில் கட்டாயம் மாவிலை, நொச்சி, வேம்பு, ஆவாரம், மஞ்சள் கொத்து, சிறுபீளை, தும்பை, பிரண்டை, துளசி இருக்க வேண்டும். இது சிறந்த நோய்த்தடுப்பானாக இருந்து உங்களையும் உங்கள் கால்நடைகளையும் பாதுகாக்கும்.
உணவு:
இந்நாளில் நிலக்கடலை உருண்டை, போளி, ஒப்பிட்டு, வடை, சோமாசு, பாயசம், மொச்சை, சிறுதானியங்கள், பருப்பு வகைகள் இவற்றுடன் 'நிலைப்பொங்கல்' வைத்து வீட்டு தெய்வங்களை வணங்கும் வழக்கம் இன்றும் கொங்கு பகுதியில் உள்ளது. இந்நாளில் எல்லோரும் குலசாமிகளை, கன்னி தெய்வங்களை வணங்குவது நலம் அளிக்கும்.
புத்தகங்களைப் பராமரிப்பு:
இந்நாளில் புத்தகங்களைப் பராமரிக்கும் பணியைச் செய்யலாம்.ஏடு எடுக்கும் தினம் என்று முன்னாளில்
கடைப்பிடிக்க நாள் இது. இந்நாளில் பழைய ஓலைச் சுவடிகளை எடுத்து பழைய சிதைந்த ஏடுகளை நீக்கி விட்டு புதிய ஏடுகளைச் சேர்ப்பார்கள்.
இந்த பொங்கல் திருநாட்களில் மஞ்சள், கரும்பு, புதுப்பானை, புதுநெல், வெல்லம், நெய், கும்மி, மஞ்சுவிரட்டு என்று தீராத உணவும் செல்வமும் உங்களின் வாழ்வில் என்று நிறைந்திருக்கட்டும்.