யாகம் நடத்தியதால் பெய்த மழையின் அளவு எவ்வளவு..! கணக்கு கேட்கும் கருப்பணசாமி..!

By ezhil mozhiFirst Published May 9, 2019, 2:48 PM IST
Highlights

சுட்டெரிக்கும் கோடை வெயிலில் இருந்து தாக்கத்தை தணித்துக்கொள்ள ஏற்றவாறு தற்போது தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது

யாகம் நடத்தியதால் பெய்த மழையின் அளவு எவ்வளவு..!

சுட்டெரிக்கும் கோடை வெயிலில் இருந்து தாக்கத்தை தணித்துக்கொள்ள ஏற்றவாறு தற்போது தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதற்கிடையில் கோவில்களில் யாகம் நடத்தியதால் எவ்வளவு மழை எந்த இடத்தில் பெய்தது என இந்து அறநிலையத்துறைக்கு ஒருவர் மனு அளித்து விவரம் கேட்டுள்ள சம்பவம் அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது.

மழை வர வேண்டி, இந்து கோவில்களில் ராகங்கள், யாகம்,பிரார்த்தனை நடத்தும்படி அறநிலையத்துறை கோவில்களுக்கு ஆணையிட்டு இருந்தது. அதன்படி பல கோவில்களில் யாகங்கள் நடத்தப்பட்டது. ஒரு சில தரப்பினர் ஆதரவு தெரிவித்தாலும் ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். எந்த அதிகாரத்தின் கீழ் இவ்வாறு யாகம் நடத்த அறநிலையத்துறை ஆணையிட்டுள்ளது என்ற கேள்வியும் எழுந்தது.

இதற்கிடையில் கருப்பணசாமி என்ற ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஒருவர் அறநிலையத்துறைக்கு மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் யாகம் செய்தால் மழை வரும் என்ற விதி குறித்த அரசாணையின் நகல் இருந்தால் அதை அனுப்பி வைக்க வேண்டும் என்றும், மேலும் கோவில்களில் யாகம் நடத்தியதால் இதுவரை எவ்வளவு மழை பெய்துள்ளது? எந்தெந்த ஊரில் மழை பெய்துள்ளது? என்ற விவரத்தையும் தெரிவிக்க வேண்டும் என கேட்டுள்ளார்.

கோவில்களில் யாகம் நடத்த தேவையான செலவு எவ்வளவு ஆனது என்ற கேள்வியும் முன்வைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருவதால் யாகம் நடத்தியதால்தான் மழை வருகிறது என்று, பக்தர்கள் தெரிவிக்கின்றனர். அதற்கு உதாரணமாக தற்போது திருவண்ணாமலையில் வருண யாகம் முடிந்தவுடன் பயங்கர மழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!