உஷார்..! காட்டு காட்டுன்னு காட்டப்போகும் மழை...மீனவர்களுக்கு எச்சரிக்கை..!

By ezhil mozhiFirst Published Oct 22, 2019, 6:03 PM IST
Highlights

வடதமிழகம், தெற்கு ஆந்திராவையொட்டிய வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் தமிழகம், ஆந்திரா, புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் மாநிலம் முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையைப் பொறுத்தவரைக் காலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்கிறது, 

தமிழகத்தில் 22ஆம் தேதி வரை கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் தற்போது வங்ககடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை உள்ளிட்ட 4 மாவட்டங்ளுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலட்ர் எச்சரிக்கை விடுத்தது, அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம் பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளதுடன், மேற்கண்ட நான்கு மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட நிர்வாகம் அங்குள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் எதிர்பார்த்த அளவிற்கு மழை பெய்யவில்லை. நேற்றிரவு அதிக அளவில் மழை கொட்டி தீர்க்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் லேசானது முதல் மிதமான மழையே பெய்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தபடி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக இந்த நான்கு மாவட்டங்களையும் சிவப்பு நிறத்தால் குறியீட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது அது ரெட்அலர்ட் என்றும் இது ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் அல்ல என்றும் 4 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மட்டுமே, அதாவது 21 சென்டிமீட்டர் அல்லது அதற்கும் அதிகமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கும் என குறிப்பிட்டிருந்தது. ஆனால் எதிர்பார்த்தபடி மழை இல்லை. 

இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதாவது, வடதமிழகம், தெற்கு ஆந்திராவையொட்டிய வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் தமிழகம், ஆந்திரா, புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஏற்கனவே அரபிக்கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது. இதன்காரணமாக அரபிக்கடல், தென்மேற்கு வங்கக்கடல் பகுதியான ஆந்திராவில் கடல் சீற்றத்துடன் காணப்படும். எனவே மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு இந்திய வானிலை ஆய்வுமையம் எச்சரித்துள்ளது.

click me!