Good sleeping: நிம்மதியான தூக்கத்திற்கு உதவும் சிம்பிளான 5 டிப்ஸ் இதோ! நிபுணர்கள் அட்வைஸ்...

By Anija KannanFirst Published Jan 26, 2022, 2:27 PM IST
Highlights

நவீன கால மாற்றத்தால், உறக்கமின்மை என்பது மிக பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. அதனை சரி செய்ய சில எளிய வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

நவீன கால மாற்றத்தால், உறக்கமின்மை என்பது மிக பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.  உலகில் பெரும்பாலோருக்கு ஏற்படும் ஆரோக்கிய பிரச்சினைகளில் தூக்கமின்மை முதலிடம் பிடிக்கிறது. உடலுக்கு ஓய்வு கொடுப்பதன் மூலம், மீண்டும் புத்துணர்வோடு செயல்படுவதற்கு மூளை தன்னைத்தானே புதுப்பித்து கொள்ளும், ஓரு இயற்கையான வழிதான் தூக்கம். ஒருவருடைய உடல் உழைப்பு, தூங்கும் விதம், சுற்றுச்சூழல், உடல்நலம், மனநலத்தைப் பொறுத்து தூக்கம் அமைகிறது.

பொதுவாக ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு ஆறிலிருந்து எட்டு மணி நேரத் தூக்கம் அவசியம், தூக்கம் குறையும்போது உடலின் நலமும் உள்ளத்தின் நலமும் பாதிக்கப்படுகின்றன.  இளம் வயதில் தேவையான அளவுக்கு தூங்காதவர்களுக்கு நாற்பது வயதிலேயே ஞாபக மறதி வந்துவிடுகிறது. தேவையில்லாமல் கோபம் வருகிறது. எதிர்படுபவர்களிடம் எல்லாம் எரிந்து விழுந்து அவர்களுடைய தூக்கத்தையும் கெடுத்து விடுகிறார்கள். 

ஒருவருக்கு தொடர்ந்து தூக்கம் கெடும்போது பசி குறையும். அஜீரணம் தலைகாட்டும். உணவின் அளவு குறையும். உடல் எடை குறையும். பணியில் ஆர்வம் குறையும். பகல் முழுவதிலும் தூக்க கலக்கத்தில் இருப்பார்கள். மேலும் இது நினைவாற்றல் குறைபாடுகள், பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி, நீரிழிவு நோய்க்கான ஆபத்து, இதய நோய் ஆபத்து, உயர் இரத்த அழுத்தம் மற்றும் சில சமயங்களில் குறைந்த செக்ஸ் டிரைவ் ஆகிய சிக்கல்களை ஏற்படுத்தலாம் என்று மருத்துவர் கூறுகின்றனர்.

இது தொடர்பாக மருத்துவ ஆய்வாளர்கள் சமீபத்தில் நடத்திய கருத்துக்கணிப்பில், இந்தியர்களில் 64%  பேர் போதுமான அளவு தூங்கவில்லை என்றும், 51% பேர் வரை தாங்கள் 4-6 மணி நேரம் மட்டுமே தூங்குவதாகவும், 10% பேர் 4 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, ஒருவர் நிம்மதியான தூக்கத்தை பெறுவது அவசியம். அதற்காக வழிமுறைகள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் எழுவதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள். உங்களுக்கு எப்போது தூக்கம் வருவதுபோல் தோன்றுகிறதோ அப்போது உடனே போய் தூங்கிவிடுங்கள். அந்த தூக்கத்தை அலட்சியப்படுத்தாதீர்கள். அதேபோன்று, பகல் தூக்கத்துக்கு அரை மணி நேரம் போதும்.
 
காலை எழுந்ததும் 30 - 60 நிமிடங்களுக்குள் சூரிய ஒளியை பார்க்க வேண்டும். அவ்வாறு சூரியன் மறைவுக்கு முன்பும் செய்ய வேண்டும். ஒருவேளை சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்துவிட்டால் 30-60 நிமிடங்களுக்குள் செயற்கை ஒளியை பாருங்கள். சூரியன் வந்ததும் சூரிய வெளிச்சத்தை பாருங்கள்.

நீங்கள் உறங்கும் அறையை குளிர்ச்சியாகவும், இருட்டாகவும் வைக்கவும். அதேபோன்று, தூங்குவதற்கு 8-10 மணி நேரம் வரை கஃபைன் உணவு அல்லது காஃபி குடிப்பதை தவிருங்கள். 

உங்களுக்கு தூக்கத்தில் தொந்தரவு, தூக்கமின்மை கோளாறு , தூங்கும்போது பதட்டம் போன்ற பிரச்சனைகள் இருந்தால் உங்கள் மனதை வசியம் செய்யக் கூடிய சில பயிற்சிகளை செய்யுங்கள். உங்களை ஆழ்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் விஷயங்களில் கவனம் செலுத்துங்கள்.

எனவே, காலையில் எழுந்துகொள்ளும் நேரமும் இரவில் படுக்கப்போகும் நேரத்தையும் கட்டுக்குள் கொண்டு வரவேண்டும். தூக்கப் பிரச்சனை உள்ளவர்கள் மாலையிலும் உடற்பயிற்சி செய்தால் இரவில் நல்ல தூக்கம் வரும். சீக்கிரமே தூங்கி, சீக்கிரமே விழிக்கிற பழக்கம் ஆரோக்கியமாக வாழ வழிவகுக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எனவே, மேற்கூறிய வழிமுறைகளை பின்பற்றி நிம்மதியான ஆழ்ந்த தூக்கத்தினை பெறுங்கள்.
 

click me!