
இன்றைய கால கட்டத்தில் பெண்கள்,அனைத்து துறைகளிலும் தடம் பதித்து வருகின்றனர். இருப்பினும், ஆண்களை ஒப்பிடும் போது, பெண்களின் வேலை வாய்ப்பு மிகவும் குறைவாக உள்ளது. இன்றைய கால கட்டத்தில் பெண்கள் தங்களின் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு, ஆண்களைக் காட்டிலும் பெரும் இன்னல்களை சந்திக்க நேரிடுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை கணவன் தொழில் துவங்க நகைகளைத் தருவதற்கு பெண்கள் தயாராக இருக்கும் அதே சமயத்தில், பெண்கள் தொழில் துவங்க குடும்ப சொத்துக்களைப் பயன்படுத்த பெரும்பாலான ஆண்கள் சம்மதிப்பதில்லை. திருமணத்திற்கு முன்பு ''ஆக்டிவாக'' இருக்கும் ஒரு சில பெண்கள் திருமணத்திற்கு பிறகு, கணவர், குழந்தை, மாமனார், மாமியார் கவனிப்பிற்கு சென்று விடுகின்றனர்.
அதுமட்டுமின்றி, தொழில் துவங்க நினைக்கும் பெண்களை சமூகம் கேலி செய்து, பல இடங்களில் அவர்களை முடக்கிவிடுகிறது. தொழில் நிறுவனங்களை இயக்குவதற்கு ஆண்கள்தான் தகுதியானவர்கள் என்ற எண்ணமே இதற்கு முக்கியக் காரணம். இருப்பினும், பெரும்பாலான பெண்கள், தனது கனவுகளை எப்படியாவது அடைந்து விட வேண்டும் என்கிற முனைப்பில் பலவற்றை முயற்சி செய்து வருவார்கள்.அந்த வகையில் தங்களின் வாழ்க்கையில் சிறப்பாக முன்னேற சில வழிமுறைகள் உண்டு. அவை என்னென்ன என்பதை இனி தெரிந்து கொள்வோம்.
அதிகாலையில் எழுவது:
காலை நேரத்தை யார் சிறப்பாக பயன்படுத்தி கொள்கின்றனரோ அவர்கள் தங்களின் வாழ்வில் பெரிய இடத்தை அடைவார்கள். குறிப்பாக காலை நேரத்தில் விரைவாக எழுந்து கொள்ளும் பழக்கம் கொண்ட பெண்கள் தங்களின் வாழ்க்கையில் எண்ணியவற்றை எல்லாம் செய்து முடிக்க கூடிய வல்லமையை பெறுவார்கள். இந்த நல்ல பழக்கத்தை பின்பற்றி வந்தால் நாள் முழுக்க நிம்மதியான உணர்வையும் பெற முடியும்.
திட்டமிடல் :
பொதுவாக பலர் செய்யும் தவறுகளில் ஒன்று, எதையும் திட்டமிடாமல் செய்ய தொடங்குவது தான். ஆம், வாழ்க்கையில் வெற்றி கனியை எட்டிய பல பெண்கள் தனது அடுத்த நாளைக்கான வேலைகளை முன்னாள் இரவே திட்டமிட்டு கொண்டு செயல்படுவார்கள். இப்படி செய்து வருவதால் அடுத்த நாள் செய்ய வேண்டிய எந்த வேலைகளும் தடைபடாது. அதே போன்று அவசரமின்றி, பதட்டப்படாமல் செய்து முடிக்க முடியும்.
நல்ல தூக்கம் :
தனது வாழ்க்கையில் வெற்றி பெற்ற பெண்கள் தங்களது தூக்க நேரத்தை சரியாக வகுத்து கொள்வார்கள். இரவு நேரத்தில் விரைவாக தூங்கும் பழக்கத்தை கடைபிடிப்பார்கள். அதே போன்று அந்த நாள் முழுக்க என்னவெல்லாம் செய்தோம் என்பதை நினைவூட்டி பார்த்து, அதில் தவறுகள் ஏதேனும் இருந்தால் அடுத்த முறை திருத்தி கொள்ள முயற்சிப்பார்கள்.
உடற்பயிற்சி :
உடல் ஆரோக்கியமும், மன ஆரோக்கியமும் மிகவும் முக்கியம் என்பதை வாழ்க்கையில் வெற்றிபெற்ற பெண்கள் தாரக மந்திரமாக கடைபிடித்து வருவார்கள். இது முற்றிலும் உண்மையும் கூட. தினமும் உடற்பயிற்சி செய்து வருதல், சத்தான உணவுகளை சரியான நேரத்திற்கு எடுத்து கொள்ளுதல் போன்ற செயல்களின் மூலம் நமது உடல் ஆரோக்கியமாக இருக்கும். இது தான் வெற்றிக்கு முதல் படியாகும்.
எப்போதும் ‘பாசிட்டிவான" எண்ணம் கொண்டவர்கள்:
நமது வாழ்வில் எல்லா தருணங்களையும் ‘பாசிட்டிவான" நோக்கத்துடன் அணுகுவார்கள். அதேசமயம், சில விஷயங்கள் 'நெகட்டிவாக' செல்லும் பட்சத்தில், அதை ‘பாசிட்டிவாக" கையாள திறன் படைத்தவர்கள்.விடா முயற்சியே வெற்றியை தரும் என்பதை உணர்ந்தவர்கள்.
முதல் பத்து நிமிடங்கள் :
தனது கனவுகளில் வெற்றி காணும் பெண்கள் தங்களின் நாளை தொடங்குவதற்கு முன் அந்த நாளில் என்னென்ன எல்லாம் செய்தாக வேண்டும் என்பதை காலையிலேயே அதற்கென்று10 நிமிடங்கள் ஒதுக்கி திட்டமிட்டு கொள்வார்கள். இப்படி செய்வதால் எந்த வித சிக்கலும் இல்லாமல் எல்லா வேலைகளையும் சீராக செய்து முடிக்க முடியும். அதே போன்று மீதமுள்ள நேரத்தில் தனது அன்பிற்குரியவர்களுடன் செலவிடவும் முடியும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.