தினமும் சம்பாதிக்கும் 150 ரூபாயில் வியக்க வைத்த பழ வியாபாரி... ஆனந்த கண்ணீர் வடிக்க அங்கீகாரம்..!

Published : Jan 28, 2020, 06:01 PM ISTUpdated : Jan 28, 2020, 06:03 PM IST
தினமும் சம்பாதிக்கும் 150 ரூபாயில் வியக்க வைத்த பழ வியாபாரி...  ஆனந்த கண்ணீர் வடிக்க அங்கீகாரம்..!

சுருக்கம்

மொழி தெரியாததால் பதில் சொல்ல முடியவில்லை. அந்த தம்பதி இவரிடம் பழம் வாங்காமல் சென்றுவிட்டனர். அப்போது முதல் தனது கிராமத்து குழந்தைகள் படித்து முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தில் கல்விக்கு உதவி வருவதாக ஹஜப்பா கூறினார். 

மத்திய அரசு வழங்கும் உயரிய விருதுகளை சாதாரண பாமரனும்  பெற முடியும் என நிரூபித்துக் காட்டியிருக்கிறார் பழ வியாபாரி ஒருவர். அவர் இந்த விருதை சாதாரணமாக பெறவில்லை. அவர் பத்மஸ்ரீ விருது பெற அப்படி என்ன தான் செய்தார்..! இதோ...

இந்த ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருதுகளை மத்திய அரசு கடந்த 25-ந்தேதி அறிவித்திருந்தது. 7 பேருக்கு பத்ம விபூஷண் விருது, 16 பேருக்கு பத்ம பூஷண், 118 பேருக்கு பத்மஸ்ரீ என மொத்தம் 141 பேருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் பிரபலமில்லாத, சாதனை புரிந்தவர்களின் பெயர்கள் இருந்தன. அவர்களில் ஒருவர் கர்நாடக மாநிலம் தட்சிணா கன்னடா பகுதியை சேர்ந்தவர். இவருடைய பெயர் வரரேகலா ஹஜப்பா.

இவர் சாதாரண பழ வியாபாரி. படிக்கும் வாய்ப்பை இழந்தவர். இவர் பள்ளிக்கூடமே இல்லாத, தனது கிராமத்தில் உள்ள குழந்தைகள் படிக்கும் வாய்ப்பை இழக்க கூடாது என கருதினார். இதற்காகவே தெருத்தெருவாக சென்று ஆரஞ்சு பழங்கள் விற்பனை செய்வதன் மூலம் தினமும் கிடைக்கும் 150 ரூபாயை சேமித்து வைத்ததில் ஒரு பள்ளிக்கு நிலத்தை வாங்கினார்.

2000-ம் ஆண்டில்தான் முதல் முறையாக அந்த கிராமத்தில் ஹஜப்பாவின் முயற்சியால் பள்ளி அமைக்கப்பட்டது. இதில் பல ஏழை மாணவர்கள் படித்து வருகின்றனர். தொடர்ந்து ஏழை குழந்தைகளின் படிப்புக்கு இவர் உதவி வருகிறார். ஏழ்மையான நிலையிலும் இவர் செய்துவரும் சேவையை பாராட்டி மத்திய அரசு ஹஜப்பாவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி உள்ளது.

ஹஜப்பா ஒரு முறை ஆரஞ்சு பழ வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு தம்பதி இவரிடம் பழத்தின் விலையை கேட்டுள்ளனர். இவருக்கு மொழி தெரியாததால் பதில் சொல்ல முடியவில்லை. அந்த தம்பதி இவரிடம் பழம் வாங்காமல் சென்றுவிட்டனர். அப்போது முதல் தனது கிராமத்து குழந்தைகள் படித்து முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தில் கல்விக்கு உதவி வருவதாக ஹஜப்பா கூறினார். இவர் பள்ளி ஆசிரியர் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான குடிநீரை காய்ச்சி தரும் வேலை மற்றும் வகுப்பறைகளை சத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

கடந்த 25-ந்தேதி ரேசன் கடையில் வரிசையில்  நின்றபோது அவருக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்திருப்பதை அதிகாரிகள் அவரிடம் தெரிவித்தனர். முதலில் அவர் இதை நம்பவில்லை. பின்னர் அதிகாரிகள் விருது அறிவிக்கப்பட்டதை எடுத்துக் கூறியதும் மகிழ்ச்சியடைந்த அவர் என்னைப் போன்ற சாதாரணமானவர்களுக்கும் நாட்டின் உயரிய விருதுகள் தேடி வருவது சந்தோஷமாக இருப்பதாக ஆனந்த கண்ணீர் வடித்தார். இதுபோன்றவர்கள் இன்னும் நம் கண்ணுக்கு தெரியாமல் இருக்கிறார்கள். அவர்களை தேடி பிடித்து இதுபோன்ற விருதுகள் வழங்கினால் விருதுக்கும் பெருமை. இதுபோன்ற விருதுகளால் நிறைய சமூக ஆர்வலர்களை உருவாக்க முடியும். ஹஜப்பாவை நாமும் வாழ்த்துவோம்.

-தெ.பாலமுருகன்

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

முடி வளர்ச்சியை தூண்டும் 8 உணவுகள்
ஒரு துண்டு கிவி பழம் வாரி வழங்கும் நன்மைகள்