ஈரோடு மஞ்சளுக்கு புவிசார் குறியீடு அந்தஸ்து … விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி !!

By Selvanayagam PFirst Published Mar 8, 2019, 10:49 AM IST
Highlights

ஈரோடு மஞ்சளுக்கு மத்திய அரசின் புவிசார் குறியீடு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது தமிழக விவசாயிகளிடையே பெரு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.
 

ஒரு குறிப்பிட்ட பகுதியில் தனித்துவமாகத் தயாரிக்கப்படும் பொருளுக்கோ அல்லது தனித்துவமாக விளையும் பொருளுக்கோ  மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது. 

மகாராஷ்டிரா மாநிலத்தின் வைகான் மஞ்சள், ஒடிசாவின் கந்தமால் மலை மஞ்சள் போன்றவற்றுக்கு ஏற்கனவே புவிசார் குறியீடு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. தற்போது ஈரோடு மஞ்சளுக்கும் புவிசார் குறியீடு அந்தஸ்து கிடைத்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் காவிரி மற்றும் பவானி ஆற்றுப் பாசன மூலம் சுமார் 1 லட்சம் ஏக்கரில் மஞ்சள் பயிரிடப்பட்டு வருகிறது. ஈரோடு ரக மஞ்சளில் காட்மின் என்ற வேதிப் பொருள் அதிகளவில் இருப்பதால் இது புற்று நோயை உண்டாக்கும் செல்களைஅழிக்கும் தன்மை வாய்ந்தது. 

இந்நிலையில், ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்கம் சார்பில், ஈரோடு மஞ்சளுக்கு புவிசார் குறியீடு வழங்கக் கோரி விண்ணப்பிக்கப்பட்டது.அதில், சங்க காலத்திலிருந்து மஞ்சள் பயிரிடும் பழக்கம்  தமிழகத்தில் இருந்து வருவதாகவும், மருத்துவகுணம் நிறைந்த மஞ்சள், ஈரோடு மாவட்டத்தில் அதிகளவில் பயிரிடப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்ட புவிசார் குறியீடு பதிவு துறை, ஈரோடு மஞ்சளுக்கு புவிசார்குறியீடு அந்தஸ்தை வழங்கியுள்ளது. இதற்கான சான்றிதழ் மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர் கள் சங்கத்திடம் வழங்கப்பட்டது.

இதன்மூலம் உள்நாட்டுச் சந்தை மட்டுமில்லாமல் வெளிநாட்டுச் சந்தையிலும் ஈரோடு மஞ்சளுக்கு அதிக விலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் வணிகர்கள் தெரிவித்துள்ளனர். 

பல்வேறு மருத்துவச் சிறப்புகளையும் மஞ்சள் கொண்டுள்ளதால், இயற்கை மருத்துவத்திலும் இது பரிந்துரை செய்யப்படுகிறது. மஞ்சளுக்கு இத்தகைய அங்கீகாரம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று விவசாயிகளும்,  வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.

click me!