அதிகாலையில் குளிப்பவரா நீங்கள்? அப்படினா? இத கட்டாயம் கடைபிடிங்கோ...

By manimegalai aFirst Published Jan 11, 2022, 7:30 AM IST
Highlights

காலையில் எழும்போது உடலில் வெப்பம் அதிகமாக இருக்கும். அதனை குறைப்பதற்கு குளிப்பது அவசியமானது. அப்போது, நீங்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

உடல் சூட்டை தணிப்பதற்கு குளியல் போடுவது அவசியமானது. பொதுவாக காலையில் எழும்போது உடலில் வெப்பம் அதிகமாக இருக்கும். அதனை குறைப்பதற்கு குளிப்பது அவசியமானது. ஒரு சிலர் காலை, மாலை என இரண்டு முறை நன்றாக குளித்தால் கூட அவர்களுடைய உடல் வெப்பம் குறையாது. அதற்கு குளியல் முறையை சரியாக பின்பற்றாதது தான் காரணமாக அமையும்.

குளிப்பது எப்படி?

குளிப்பதற்கு சாதாரண நீரைத்தான் பயன்படுத்த வேண்டும். நிறைய பேர் குளிக்கும்போது முதலில் தலையில் தான் தண்ணீரை ஊற்றுவார்கள். அது தவறான பழக்கம். ஏனெனில், தலையில் சட்டென்று ஊற்றும்போது வெப்ப நிலை மாறுபடும். தண்ணீரின் குளிர்ச்சியும், உடல் வெப்பநிலையும் மாறுபடும். அதனை உடல் ஏற்க வேண்டும். தலையில் தண்ணீரை ஊற்றுவதற்கு பதிலாக காலில் ஊற்ற வேண்டும். பிறகு தொடை, இடுப்பு பகுதியில் ஊற்றிவிட்டு மேல் நோக்கி முன்னேற வேண்டும். அப்படி கீழிருந்து மேலாக உடலில் தண்ணீரை ஊற்றி குளிக்கும்போது உடலில் உள்ள வெப்பமானது மூக்கு, கண்கள் வழியாக வெளியேறும். ஆனால் தலையில் ஊற்றி குளிக்கும்போது உடலில் உள்ள வெப்பம் வேறு பாகங்கள் வழியாக வெளியேறுவதற்கு வாய்ப்பு இல்லாமல் தலையில் தங்கி உடல் சூட்டை அதிகப்படுத்திவிடும்.

ஏரி, குளம் போன்ற நீர் நிலைகளில் குளிக்கும்போது முதலில் கால்கள் தான் தண்ணீரில் நனையும். அதன் பிறகு முழங்கால், தொடை, இடுப்பு, மார்பகம் நீரில் நனைந்து இறுதியாக தலை நீரில் மூழ்கும். அத்தகைய குளியல் முறையை முன்னோர்கள் கடைப்பிடித்தார்கள். ஆனால் இப்போது குளங்கள், ஆறுகள், ஏரிகள், கிணறுகள் போன்ற நீர்நிலைகளில் குளிப்பது அரிதாகிக்கொண்டிருக்கிறது. அவற்றில் குளிக்கும்போது குளியல் நேரமும் அதிகரிக்கும். அது உடல் சூடு தணிவதற்கு ஒரு வகையில் காரணமாக அமையும். வீட்டு குளியலறையில் குளிக்கும்போது தண்ணீர் சிக்கனத்தை கடைப்பிடிக்க வேண்டியிருக்கும். சிலர் குறைவான நீரையே குளியலுக்கு பயன்படுத்துவார்கள்.

அதனால், உடலில் படிந்திருக்கும் அழுக்குகள், வியர்வைகளை போக்குவதற்கு அதிக வாசனை கொண்ட ரசாயனங்கள் கலந்த சோப்பை உபயோகிப்பார்கள். அதில் உள்ள ரசாயனங்கள் சிலருக்கு ஒத்துக்கொள்ளாது. உடல் முழுவதும் நன்றாக தேய்த்து குளிக்காதபோது அழுக்கு அப்படியே இருக்கும் இடங்களில் சரும வியாதிகள் ஏற்படக்கூடும். முதுகு, இடுப்பு, பின்னங்கால்கள், நக இடுக்குகள் போன்ற பகுதிகளில் நன்றாக தேய்த்து குளிக்க வேண்டும். குளியல் என்பது உடலை குளிர்விப்பதாகவும், உடலில் படிந்திருக்கும் அழுக்குகளை நீக்குவதாகவும் இருக்க வேண்டும் எனவே, இது போன்ற பழக்க வழக்கங்கள் உடல் சூட்டை அதிகப்படுத்தி உடலுக்கு பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.

உடல் உறுப்புகள் நன்றாக இயங்குவதற்கு உடல் வெப்பநிலை சீராக இருக்க வேண்டும். அதனை கட்டுக்குள் வைத்துக்கொள்வதில் குளியலுக்கு முக்கிய பங்கு உண்டு. உடல் உறுப்புகளில் சூடு ஏறிக்கொண்டே இருக்கும். இருப்பினும் உடலில் உள்ள இயற்கை தன்மைகளால் சூடு தானாகவே இயல்பு நிலைக்கு மாறிவிடும். பொதுவாகவே ஒரு சில மின்னணு சாதனங்கள் சீராக செயல்படுவதற்கு குளிர்ச்சியான சூழல் அவசியமானதாக இருக்கிறது. இல்லாவிட்டால் இயல்பாக நிலவும் வெப்பநிலையும், அறையின் வெப்ப நிலையும் ஒன்று சேர்ந்து அதிக வெப்பத்தை உண்டாக்கி மின்னணு சாதனங்களின் இயக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். அதனால்தான் மின்னணு சாதனங்கள், தகவல் தொடர்பு சாதனங்கள் இருக்கும் அறையில் குளிர்சாதனங்களை பொருத்தி சீரான வெப்பநிலையை பராமரிக்கிறார்கள். உயிரற்ற மின் சாதனங்களுக்கே சீரான வெப்பநிலை தேவைப்படும்போது மனிதனுக்கு சொல்லத் தேவையே இல்லை.

மனித உடலில் வெப்ப நிலை மாறுபடுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அசைவ உணவுகள், துரித உணவுகள் உடலில் உள்ள ஆற்றலை அதிகமாக செலவு செய்ய வைப்பதோடு உடலையும் சூடாக்கிவிடுகின்றன. வழக்கமான உடல் இயக்கத்தின் போது உண்டாகும் சூட்டை தணித்துக் கொள்ளும் உடல் இதுபோன்ற செயற்கை சூட்டை சரி செய்வதற்கு கூடுதலாக ஆற்றலை செலவிட நேரிடும். ஒரு கட்டத்தில் சூட்டை தணிக்க முடியாதபோது, உடலில் சூடு நிரந்தரமாக தங்கி விடும். அதன் தாக்கமாக உடலில் பல்வேறு வியாதிகள் ஏற்படக்கூடும். உணவு பழக்கங்களும் உடல் சூட்டுக்கு காரணமாகின்றன.
 

click me!