
தடுப்பூசிகளின் மூலம் கொரோனா வைரஸ் பரவும் வீரியத்தைப் பெரும்பகுதி நாம் குறைக்க முடிகிறது. இருப்பினும், இந்த தடுப்பூசியானது குழந்தைகள் மற்றும் கருவுற்ற பெண்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாகவே சிலரால் பார்க்கப்படுகிறது. தொற்றுநோய்க்கு மத்தியில் ஒரு குழந்தையை பெற்றெடுப்பது குறித்து திட்டமிடுவது மிகவும் அவசியமான ஒரு முடிவாக இருக்கும் அதே வேளையில் குழந்தை பெறுவது பற்றிய கருத்துக்கள் நபருக்கு நபர் வேறுபடவும் செய்கிறது.
கொரோனா தொற்றுநோய் காலத்தில் ஒவ்வொருவரும் எப்படியெல்லாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது குறித்த கவலைகள் எவ்வளவு பரவலாக இருக்கிறதோ அவ்வளவு பரவலாக அது தொடர்பான குழப்பமும், தவறான எண்ணங்களும் நிலவி வருகிறது.
கொரோனா தடுப்பூசிகள் எடுத்துக்கொண்டதிலிருந்து, குறைந்தது 8 வார காலத்திற்குக் கருவுறுதலைத் தவிர்க்குமாறும், கரோனா தடுப்பூசிகள் கர்ப்பிணிகளுக்கு வழங்குவது நல்லது அல்ல என்றும் ஒரு தரப்பு மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே சமயம் மற்றொரு தரப்பினர், கரோனா தடுப்பூசிகள் போடுவதற்கும் கருச்சிதைவிற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று கூறி வருகின்றனர்.
மகப்பேறு மருத்துவ நிபுணர்கள், கொரோனா காலத்தில் மகப்பேறு குறித்த சில கட்டுக்கதைகளுக்கு விளக்கம் அளித்துள்ளனர். அவற்றை ஒவ்வொன்றாக கீழே பார்க்கலாம்.
கர்ப்பிணிப் பெண்கள் தடுப்பூசி போடுவதை தாமதப்படுத்தலாமா?
மற்றவர்களை விட கர்ப்பிணிப் பெண்கள் தான் ஒவ்வாமை மற்றும் தொற்றுநோய்களுக்கு அதிகம் ஆளாகிறார்கள். கூடுதல் பாதுகாப்பை உறுதிசெய்ய விரும்புவார்கள் தடுப்பூசி போடுவது நல்லது.
கொரோனா காரணமாக கர்ப்பகால சிக்கல்கள் எப்போதுமே இருக்கும் :
கர்ப்பிணிப் பெண்களைப் பொறுத்தவரை, கொரோனா அவர்களின் ஆரோக்கியத்திற்கு நேரடியாக எம்மாதிரியான பெரிய அளவிலான சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை. கர்ப்பிணித் தாய்மார்களிடமிருந்து அவர்களின் குழந்தைகளுக்கு வைரஸ் பரவுமா என்பதைக் காட்ட எந்த ஆய்வறிக்கைகளும் இல்லை. இருப்பினும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது, தாய்மார்கள் மாஸ்க் அணிந்து கொள்ளலாம், குழந்தை பராமரிப்பின் போது அடிக்கடி கைகளைக் கழுவலாம். ஒருவேளை நீங்கள் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், பதற்றம் அடைய வேண்டாம். கூடிய விரைவில் சிகிச்சை பெற தொடங்கவும்.
கர்ப்பிணிகளுக்கு என்று தனிப்பட்ட தடுப்பூசிகள் ஏதேனும் உள்ளதா?
உலகின் பல்வேறு நாடுகளும் அவர்கள் கண்டுபிடித்த தடுப்பூசிகளை மக்களுக்குப் பயன்படுத்தி வருகின்றனர், இவற்றுள் கர்ப்பிணிகளுக்கு என்று தனிப்பட்ட தடுப்பூசிகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
கர்ப்பமாக இருந்தால், கொரோனா தொற்று ஏற்படாதா?
மற்றவர்களை விட, கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவே இருக்கும் மற்றும் வைரஸ், பாக்டீரியா தொற்றுக்கு அவர்கள் எளிதில் ஆளாகலாம். எனவே நீங்கள் கர்ப்பிணிப் பெண்ணாக இருந்தாலும் கூட மற்றவர்களை போலவே மாஸ்க் அணிவது, சானிடைசர்களைப் பயன்படுத்துவது போன்ற வழக்கமான கொரோனா நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும், மேலும் தடுப்பூசியும் கட்டாயம் போட வேண்டும்.
கொரோனா தடுப்பூசியானது மாதவிடாய் சுழற்சியில் மாற்றங்களை ஏற்படுத்தும் :
கொரோனா தடுப்பூசி உங்கள் மாதவிடாய் சுழற்சியில் எந்த விளைவையும் ஏற்படுத்தாது, நீங்கள் கர்ப்பமாக இல்லாத பட்சத்தில். தடுப்பூசி போட்டதால் மாதவிடாய் கோளாறுகள் ஏற்பட்டதாக இதுவரை எந்த புகாரும் இல்லை. எனவே பெண்கள் அனைவரும் தடுப்பூசி போடுவது பாதுகாப்பானதே ஆகும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.