சென்னைவாசிகளே உஷார் அடுத்த 2 நாட்களுக்கு வெளுத்து வாங்கப்போகும் மழை..!

By Thiraviaraj RMFirst Published Oct 17, 2020, 5:23 PM IST
Highlights

சென்னை மற்றும் புறநகர்  பகுதியில் அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 

சென்னை மற்றும் புறநகர்  பகுதியில் அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்தது. நேற்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்தது. இன்று காலையிலும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

கிண்டி, ஆலந்தூர், சைதாப்பேட்டை, மயிலாப்பூர், சென்ட்ரல், தண்டையார்பேட்டை, ராயபுரம், வண்ணாரப்பேட்டை, பாரிமுனை, பூக்கடை, காசிமேடு, பெரம்பூர், திருவிக நகர், வியாசர்பாடி, புளியந்தோப்பு, கொளத்தூர் உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது. புறநகர் பகுதிகளான தாம்பரம், அம்பத்தூர், ஆவடி, பல்லாவரம், பம்மல், புழல், செங்குன்றம், திருவொற்றியூர் மணலி மாதவரம் உள்ளிட்ட இடங்களில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது. தவிர, திருத்தணி, மாமல்லபுரம், இசிஆர், ஓஎம்ஆர், கூடுவாஞ்சேரி, திருத்தணி சுற்றுவட்டார பகுதிகளில் நள்ளிரவில் இடியுடன் லேசான மழை பெய்தது. கடந்த 24 மணி நேரத்தில் சின்னகல்லார், பாபநாசம், வால்பாறை, பெருஞ்சாணி, பேச்சிபாறை, சித்தாறு, தென்காசி உள்ளிட்ட இடங்களில் அதிக மழை பெய்துள்ளது.

இந்நிலையில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி, நாகை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மட்டும் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யும்.

click me!