
தமிழகத்தில் தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தொற்றிலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள முகக்கவசம் மற்றும் தனி மனித இடைவெளியை பின்பற்றுவது கட்டாயமாக்கபட்டுள்ளது. தமிழக அரசின் கொரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றாத பள்ளிகள், கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கடைகள் மற்றும் மக்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
இன்று சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால், அண்ணா ஆர்ச் அருகே போக்குவரத்து காவல்துறையினர் ஏற்பாடு செய்திருந்த கொரோனா விழிப்புணர்வு முகாமையும், விழிப்புணர்வு சைக்கிள் பேரணியையும் தொடங்கிவைத்தார். அப்போது பேசிய மகேஷ் குமார் அகர்வால், “பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து வெளியே செல்லுங்கள். பல நாடுகளிலும் முகக்கவசம் போன்ற விதிமுறைகளை பின்பற்றி கொரோனாவை கட்டுப்படுத்தியுள்ளனர். மாஸ்க் அணியாமல் செல்பவர்களால் மற்றவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. அதனால் தான் காவல்துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர் என தெரிவித்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கொரோனாவை தடுக்க சென்னை காவல்துறையின் அனைத்து பிரிவு போலீசாரும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகவும், கொரோனாவை தடுக்க சுயக்கட்டுப்பாடு தேவை என்பதையும் அறிவுறுத்தினார். இரவு நேர ஊரடங்கிற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர், வாகன சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டினார்.
மேலும், சென்னை மாநகர பேருந்துகளில் பயணிகள் அனைவரும் முகக்கவசம் அணிந்தே பயணிக்க வேண்டும் என்றும், இதுகுறித்து பேருந்துகளில் ஏறி போலீசார் பயணிகளுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார். முகக்கவசம் அணியாமல் பேருந்தில் பயணம் செய்யவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் எச்சரித்தார்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.