Cinnamon Tea For Diabetes : தினமும் காலை சர்க்கரை நோயாளிகள் இலவங்கப்பட்டை டீ குடித்து வந்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி இங்கு காணலாம்.
தற்போது சர்க்கரை நோய் என்பது ஒரு பொதுவான பிரச்சனையாகி விட்டது. பெரும்பாலானோருக்கு இந்த நோய் உள்ளது. சர்க்கரை நோயானது உடலில் குளுக்கோஸின் அளவு அதிகரிக்கும் போது ஏற்படுகிறது. ஒரு நபருக்கு சர்க்கரை நோய் வந்தால் உடலில் பல நோய்களும் வர ஆரம்பிக்கும். இருந்தபோதிலும் சிறந்த வாழ்க்கை, முறை உணவு வழக்கம் உடற்பயிற்சி ஆகியவற்றின் உதவியுடன் சர்க்கரை நோயை சுலபமாக கட்டுப்படுத்தி விடலாம்.
எனவே, சர்க்கரை நோயாளிகள் தங்களது வாழ்க்கை முறையை சரியாக பராமரிப்பது மிகவும் அவசியம். ஏனெனில், சிறிய கவனக் குறைவு கூட அவர்களது இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்யும். அந்தவகையில், சர்க்கரை நோயாளிகள் தங்களது நாளை எப்படி தொடங்குகிறார்கள் என்பது மிகவும் அவசியம். ஏனெனில், அவர்களது ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க இது முக்கிய பங்கு வகிக்கிறது.
பொதுவாகவே நாம் ஒவ்வொருவரும் தினமும் காலை எழுந்தவுடன் ஒரு கப் டீ அல்லது காபியுடன் தான் நம்முடைய நாளை தொடங்குவதை விரும்புவோம். ஆனால் சர்க்கரை நோயாளிகள் சர்க்கரை உள்ள டீயை குடிப்பது அவர்களது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. இத்தகைய சூழ்நிலையில், சர்க்கரை நோயாளிகளில் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவும் டீயை பற்றி உங்களுக்கு தெரியுமா? அந்த டீ சர்க்கரை நோயாளிகளுக்கு வரப் பிரசாதமாக கருதப்படுகிறது. அது வேறு ஏதும் இல்லைங்க இலவங்கப்பட்டை டீ தான். ஆம்,
இலவங்கப்பட்டை டீ ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது என்று பல ஆய்வுகள் சொல்லுகின்றன. முக்கியமாக, சர்க்கரை நோயாளிகள் சாப்பிட்ட பிறகும் சர்க்கரையை கட்டுப்படுத்த இலவங்கப்பட்டை டீ உதவுகிறது. எனவே, இப்போது சர்க்கரை நோயாளிகளுக்கு இலவங்கப்பட்டை டீயின் நன்மைகள் மற்றும் அது தயாரிக்கும் முறை பற்றி இங்கு பார்க்கலாம்.
இதையும் படிங்க: உங்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால் 5 சப்ளிமெண்ட்ஸ் எடுக்கக்கூடாது!
சர்க்கரை நோயாளிகளுக்கு லவங்கப்பட்டை டீ நன்மைகள்:
இலவங்கப்பட்டை சமையலறையில் பயன்படுத்தப்படும் ஒரு அற்புதமான மசாலா பொருள் ஆகும். இதில் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள், ஆக்ஸிஜனேற்றிகள், பாலிபினோலிக் மற்றும் நீரிழிவு எதிர்ப்பு பண்புகளும் உள்ளன. எனவே சர்க்கரை நோயாளிகள் இலவங்கப்பட்டை டீ குடித்து வந்தால் இன்சுலின் எதிர்ப்பின் சிக்கலை சுலபமாக சமாளித்து விடலாம். மேலும் இந்த டீ இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தவும், ரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்கவும் பெரிதும் உதவுகிறது. கூடுதலாக இலவங்கப்பட்டை டீயானது உடலில் இருக்கும் கொழுப்பை குறைக்கவும், உணவில் இருந்து கிடைக்கும் ஆற்றலை சிறந்த முறையில் வளர்ச்சிதை மாற்றம் செய்து அதை மீண்டும் உடலுக்கு ஆற்றலாக பயன்படுத்தவும் உதவுகின்றது. அதுமட்டுமின்றி சர்க்கரை நோயாளிகளுக்கு உடல் எடை அதிகரிப்பது ஒரு பெரிய பிரச்சனை என்பதால், அதை சுலபமாக குறைக்க இந்த டீ மிகவும் நன்மை பயக்கும். அதுமட்டுமல்லாமல் இலவங்கப்பட்டை பிபி மற்றும் கொலஸ்ட்ரால் பிரச்சனையை சரி செய்யவும் உதவுகிறது. கூடுதலாக இந்த டீ மனநிலையை புதுப்பிக்கவும் செய்கிறது.
இதையும் படிங்க: சர்க்கரை நோயாளிகளுக்கான '5' ஸ்பெஷல் ட்ரிங்க்ஸ்; வெறும் வயிற்றில் குடிங்க!
இலவங்கப்பட்டை டீ தயாரிப்பது எப்படி?
தேவையான பொருட்கள் :
இலவங்கப்பட்டை - 1
எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்
தண்ணீர் - 2 கிளாஸ்
தயாரிக்கும் முறை:
முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள். பிறகு அதில் இலவங்கப்பட்டை போட்டு நன்றாக கொதிக்க வைக்கவும். தண்ணீர் பாதியாக வந்தவுடன் அதை வடிக்கட்டி அதில் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கொள்ளுங்கள். அவ்வளவுதான் இலவங்கப்பட்டை டீ தயார்.
முக்கிய குறிப்பு: இலவங்கப்பட்டை டீ சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது என்றாலும் மருத்துவரிடம் ஆலோசித்த பின்னரே குடிக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.