கிண்டலா பண்றீங்க கிண்டல்...? "அடுத்து இதுதான் நடக்கும்"..! அரசியல் ஜாதகத்தை அசால்ட்டா சொல்லி அடிக்கும் தமிழிசை...!

By ezhil mozhiFirst Published Mar 7, 2019, 3:06 PM IST
Highlights

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் என்ன சொல்கிறாரோ...அது தான் தமிழகத்தில் நடந்து வருகிறது என்ற பரவலான கருத்து மக்கள் மத்தியில் தீயாய் பரவி வருகிறது.
 

தமிழக ஜாதகம் தமிழிழை கையிலா..? அடுத்து இதுதான் நடக்கும்..! 

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் என்ன சொல்கிறாரோ... அது தான் தமிழகத்தில் நடந்து வருகிறது என்ற பரவலான கருத்து மக்கள் மத்தியில் தீயாய் பரவி வருகிறது.

ஆரம்பத்தில் மாவட்ட மருத்துவ அணி செயலாளராக இருந்து, காங்கிரஸ் ஆளும் கட்சியாக இருந்த போதும், தன் தந்தை காங்கிரசில் பலம் மிக்கவராக இருந்தும் கூட, தமிழகத்தில் தாமரை மலர வைக்க வேண்டும் என அன்று முதல் இன்று வரை அயராது பாடுபட்டு வருகிறார்.

வாரிசு அரசியலுக்கு கொஞ்சம் கூட முக்கியத்துவம் கொடுக்காமல், தந்தை காங்கிரசில் இருந்தால், தானும் இருக்க வேண்டுமா என எண்ணி
பாஜகவிற்காக பெருமளவு போராடி, இன்று தமிழக பாஜக தலைவராக உள்ளார்  என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே... 

கேலியும் கிண்டலும்

உருவத்தை வைத்து ஒருவரை கிண்டல் செய்யும் பழக்கம் உடையவர்கள் மனிதராய் பிறந்ததற்கே அருகதை இல்லை என்றே கூறலாம். ஒரு பெண் தலைவரின் உண்மையான உழைப்பை பாராட்டவில்லை என்றாலும், அவரின் உருவத்தை தமிழன் டா தமிழன் டா என மார்தட்டிக்கொள்ளும் இதே தமிழர்களில் பலரும் கிண்டல் செய்து, மீம்ஸ் உருவாக்கி சமுக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தனர். இத்தனையும் எளிதாக எடுத்துக்கொண்டு, மீம்ஸ் குறித்து எனக்கு மன வருத்தம் இருந்தாலும் குடும்பத்தார் மற்றும் தொண்டர்கள் கொடுக்கும் உற்சாகத்தோடு பயணிக்கிறேன் என தமிழிசை ஏற்கனவே பதிவிட்டு இருந்தார்.

இந்த இடத்தில் நினைவு கூற கூடிய ஒரு விஷயம் என்ன வென்றால், அமெரிக்க அதிபர் டிரம்ப் பற்றி தான். அவர் அதிபர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட போது, அவருடைய சில சைகைகள் மற்றும் உருவத்தை வைத்து உலக மக்களே கிண்டல் செய்தனர். ஆனால் தேர்தல் முடிவுகள் திறமைக்கு இடம் கொடுத்து விட்டது. அமெரிக்க அதிபராக தேர்வாகி டிரம்ப் உலகத்தை ஆட்டி படைக்கிறார். அந்த வகையில் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு பாராளுமன்ற உறுப்பினராக தமிழிசை தேர்வானாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.

இவருடைய அரசியல் வாழ்க்கையில், ஒரு நாள் கூட ஓய்வு எடுக்காமல் உழைத்து வரும் தமிழிசை.. காலை 4 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் பேட்டி கொடுப்பார். காலை உணவு திருச்சி விமான நிலையம்... மதிய உணவு மதுரை.. இரவு கன்னியாகுமரி.. என அனைத்து வேலையையும் பம்பரம் போன்று சுழன்று செய்துட்டு கடைசியில் நள்ளிரவில் வீடு திரும்பி, மீண்டும் காலை 5 மணிக்கெல்லாம் அரசியல் பயணம் தொடரும்.

இவ்வாறாக உழைத்து வரும் பாஜக தமிழக தலைவர் தமிழிசை கணிக்கும் சில விஷயங்கள் தான் தமிழகத்தில் நடந்து வருகிறது என்பதை கவனித்தது உண்டா..? அவ்வாறு சொன்ன விஷயங்களில் நடந்த சில விஷயங்களை என்ன என்பதை பார்க்கலாம்.  
 
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, சசிகலா முதல்வராக முயற்சி செய்த போது... சசிகலா முதல்வராக முடியாது என அன்றே சொல்லி இருந்தார். அதிமுக இரட்டை இலை சின்னம் தினகரனுக்கு கிடையாது. தினகரன் அதிமுக பொதுச்செயலாளராக பதிவி ஏற்க முடியாது என்றார்.. அதன்படி தான் நடந்து வந்தது 

எதிர்க்கட்சி தலைவரால் ஆட்சியை கலைக்க முடியாது என்றார்... திமுக தலைவர் ஸ்டாலின் இன்றளவும் முயற்சி செய்கிறார்..ஆனால் முடியவில்லை...

அதிமுக ஆட்சியையையோ... எடப்பாடியின் முதல்வர் பதவியையோ யாராலும் அகற்ற முடியாது என்று அன்றே கூறினார். 

திருவாரூர் இடைத்தேர்தல் நடக்காது என கூறினார். அவ்வாறே ஆனது.

தமிழகத்தில் வலுவான கூட்டணி அமையும் என்றார். அதன்படியே அதிமுக தலைமையில் பாஜக, பாமக, புதிய தமிழகம் கட்சியுடன் கூட்டணி வைத்து உள்ளது. தற்போது தேமுதிகவுடன்  பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. 

பிரதமர் வேட்பாளர்..! 

இதே போன்று காங்கிரஸ் உடனான மெகா கூட்டணி அமைக்க உள்ளோம் என சந்திரபாபு மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின்,விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி என அனைத்தும் கட்சியும் ஓரணியில் திரண்டன. அப்போது, தமிழிசை சொன்னது ஒன்றே ஒன்று தான் ... காங்கிரஸ் பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்வி கேட்டாலே கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டு பிரிந்து விடுவார்கள் என்றார். அதற்கு ஏற்றவாறு, பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்திதான் என திமுக தலைவர் ஸ்டாலின் கூட்டத்தில் பேச...

கூட்டணியில் இருந்த ஆம் ஆத்மி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ்  இவர்கள் இருவரும் தனித்து போட்டி இடுவதாக அறிவித்தனர். ஆனாலும் மம்தா பானர்ஜியுடன் காங்கிரஸ் பேச்சு வார்த்தை நடத்தி ஓரணியில்  திரண்டு வர பாடுபட்டு வருகிறது. இவை எல்லாம் பார்க்கும் போது, இதுவரை தமிழிசை சொன்ன சில விஷயங்கள் அப்படியே நடந்துள்ளது என்றே தெரிய வந்துள்ளது.

அதே வேளையில், ஆர் கே நகர் தேர்தலின் போது, நோட்டாவை விட குறைவான எண்ணைக்கையில் பாஜக வாக்கு எண்ணிக்கை பெரும் என்பதை நினைத்து பார்த்து இருக்க மாட்டார். இன்னொன்று "தமிழகத்தில் தாமரை மலருமா என்பதே..? இதற்கு பதில் தேர்தல் வரை காத்திருக்க வேண்டும். 

ஆக மொத்தத்தில் தன் சொந்த கட்சியை விட, மற்ற கட்சிகள் குறித்து சொல்லிய பல விஷயம் அப்படியே  நடந்து வருகிறது என்பதை  இந்த பதிவின் மூலம் பார்த்தோம்..அடுத்து தமிழகத்தில் தாமரை மலருமா..? என்பது மட்டும் தான் தெரியாத  புதிராக உள்ளது. அதையும் பொறுத்திருந்து பார்க்கலாம். 

click me!