
மத்திய பிரதேச மாநிலம் கர்கோனில் ராம நவமி ஊர்வலத்தில் ஏற்பட்ட வன்முறையில், காயமடைந்த போலீஸ் அதிகாரி, வாள் கொண்டு தாக்குதல் நடத்த வந்த இளைஞரைத் தடுக்க முயன்றபோது சுடப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.ஏப்ரல் 10 அன்று, ராம நவமி ஊர்வலத்தின் போது ஒலிபெருக்கில் சத்தை குறைப்பது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே கலவரம் ஏற்பட்டது. அப்போது ஊர்வலத்தின் மீது கற்கள் கொண்டு வீசப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் பல வீடுகளுக்கும் வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டன. இதனால் நிலைமையைக் கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.
இந்த மோதலில் மூன்று போலீசார் உட்பட பலரும் காயமடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மருத்துவ அவசரத் தேவைகளைத் தவிர பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. இதுவரை வன்முறை தொடர்பாக 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பொது சொத்துக்களை சேதப்படுத்தியதால் அதனை சீரமைப்பதற்காக, வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளிகளின் வீடுகளை மாநில அரசு இடித்துள்ளது.
இதனைபடுத்து போபாலில் இஸ்லாமிய மதகுருமார்கள் குழு டிஜிபியை சந்தித்தனர். மேலும் செந்த்வா மற்றும் கார்கோனில் ராம நவமி ஊர்வலங்களில் பங்கேற்றவர்கள் மசூதிகளில் காவிக்கொடிகளை ஏற்றியதாகவும், ஆட்சேபகரமான முழக்கங்களை எழுப்பியதாகவும், இது வன்முறைக்கு வழிவகுத்தது என்று தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதையும் மீறி முஸ்லிம்கள் குறிவைக்கப்பட்டு மோதல்களுக்கு குற்றம் சாட்டப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ராம நவமி அன்று நடந்த வகுப்புவாத வன்முறையில் காயமடைந்த கர்கோன் எஸ்பி சித்தார்த்த சவுத்ரி, கலவரக்காரர்களில் ஒருவரிடமிருந்து ஆயுதத்தை பறிக்க முயன்றபோது தான் சுடப்பட்டதாகக் கூறியுள்ளார். மேலும் வன்முறை குறித்து தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றோம். அப்போது அங்கு தாக்குதல் நடந்த கையில் வாளுடன் இருக்கும் இளைஞனை பார்த்து, அவனை பிடிக்க ஒடி சென்றேன். பிறகு அவனை பிடித்து அவன் கையில் இருக்கு ஆயுதத்தை பறிக்க முயன்றபோது, என் கட்டை விரலில் காயம் ஏற்பட்டது என்று அவர் கூறினார்.
மேலும் விரலில் காயமடைந்த போதிலும் விடாமல் மீண்டும் அந்த இளைஞனை பிடிக்க முயன்றபோது, அவரது நண்பர் என்னை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில், என் காலில் காயம் ஏற்பட்டதாக அம்மாவட்ட எஸ்.பி சவுத்ரி தெரிவித்தார். மேலும் காலில் காயமடைந்த எஸ்.பி சவுத்ரிக்கு அறுவை சிகிச்சை தேவையில்லை என்றாலும், அவர் முழு ஓய்வு எடுக்க அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.