
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம், ஒலவக்கோடு பகுதியில் ஏ.டி.எம். மையம் ஒன்று உள்ளது. இந்த மையத்துக்கு சென்ற வாடிக்கையாளர்கள் பணம் வரவில்லை என்று வங்கியில் புகார் கூறி வந்தனர்.
இதனை அடுத்து, வங்கி அதிகாரிகள், தொழில்நுட்ப குழுவை அனுப்பி, ஏ.டி.எம். எந்திரத்தை கழற்றி சோதனை செய்தது. அப்போது பணம் வைக்கும் டிஸ்க்-ல் திரவம் இருந்துள்ளது. ஏ.டி.எம். எந்திரத்துக்குள் எப்படி திரவம் வந்தது என்ற சந்தேகத்தோடு, அதனை தொட்டு முகர்ந்து பார்த்துள்ளனர். அப்போது சிறுநீர் வாடை வீசியது. இதனை அடுத்து, அந்த திரவத்தை, ஆய்வகத்துக்கு அனுப்பி சோதனையிட்டனர் வங்கி அதிகாரிகள்.
சோதனையில், அது மனித சிறுநீர் என்று தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து, ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, அதிகாலை நேரத்தில், ஏ.டி.எம். மையத்துக்கு வந்த வாலிபர் ஒருவர், பணம் எடுக்க கார்டை பயன்படுத்தினார். ஆனால், பணம் வரவில்லை என்று தெரிகிறது. இதனால், அவர் பணம் வரும் துவாரத்தில் சிறுநீர் கழித்துள்ளார். இந்த காட்சிகள் அனைத்தும் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
இது குறித்து வங்கி அதிகாரிகள், பாலக்காடு தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இதையடுத்து, ஏ.டி.எம். எந்திரத்தில் சிறுநீர் கழித்த வாலிபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், காடாங்கோடை சேர்ந்த தீனு என்பது தெரியவந்தது. ஏ.டி.எம். கார்டு எந்திரத்தில் அவரது தகவல் பதிவாகி இருந்ததை வைத்து, அந்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். தனக்கு பணம் கிடைக்காத ஆத்திரத்தில் ஏ.டி.எம். எந்திரத்தில் சிறுநீர் கழித்ததாக வாலிபர் கூறியுள்ளார்.