
நாட்டில் இனி அனைத்து ரெயில்களிலும் 22 ரெயில் பெட்டிகள் இருக்கும் வகையில் தரம் மேம்படுத்தப்படும் என மத்திய ரெயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.
புது டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மேலும் தெரிவித்ததாவது-
நாட்டில் இயங்கும் அனைத்து ரெயில்களிலும் 22 பயணிகள் பெட்டிகள் இணைக்கப்படும். இதன் மூலம் ஒரு ரெயில் நிலையத்தில் இருந்து எந்த ஒரு ரெயிலையும் எந்த பாதையிலும் திருப்பி விட முடியும் . இதனால் காலதாமதம் தவிர்க்கப்படும். இதற்கான பணிகளை பொறியியல் துறை அலுவலகம் மேற்கொண்டுவருகிறது.
தொடக்கத்தில் 300 ரெயில்களில் இவ்வாறு தரம் உயர்த்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தற்போது ரெயில்களில் 12, 16, 18, 22 அல்லது 26 ரெயில் பெட்டிகள் இடம்பெற்றுள்ளன. இவ்வாறு ரெயில்களில் வேறு வேறு எண்ணிக்கையிலான பெட்டிகள் உள்ளதால், அந்த அந்த ஊர்களுக்கு அதே ரயிலை மட்டுமே இயக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் காலதாமதம் ஆகிறது. ஒரு ரெயில் பெட்டியில் பழுது ஏற்பட்டாலும் அதை சரிசெய்த பிறகே அந்த ரெயிலை இயக்க வேண்டிய நிலை உள்ளது.
எல்லா ரெயில்களிலும் 22 பெட்டிகளை இணைப்பதால் அதற்கு தகுந்தாற்போல் ரெயில் நிலைய மேடைகள் விரிவாக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.