
உத்தரப்பிரதேசத்தில் உள்ள டாக்டர்கள் கண்டிப்பாக 2 ஆண்டுகள் கிராமத்தில் தங்கி சேவை செய்ய வேண்டும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
முதல்வர்ஆதித்யநாத்
உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்று, முதல்வராக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்றுள்ளார். இவர் பதவி ஏற்றதில் இருந்து அதிரடியாக பல உத்தரவுகளையும், நடவடிக்கைகளையும் எடுத்து மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்துள்ளார்.
திடீர் அறிவிப்புகள்
பசுவதைக்கு தடை, சட்டவிரோத இறைச்சிக்கடைகளுக்கு தடை, விவசாயிகளின் பயிர்கடன் தள்ளுபடி, அரசு ஊழியர்களுக்கு ஒழுக்கநெறி என பல அறிவிப்புகளை முதல்வர் ஆதித்யநாத் வெளியிட்டார்.
புதிய கட்டிடம்
இந்நிலையில், லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைகழகத்தில் புதிதாக கட்டப்பட்ட ஒரு 56 படுக்கைககள் கொண்ட நவீன அறுவை சிகிச்சை அரங்கை முதல்வர் ஆதித்யநாத் நேற்று முன்தினம் திறந்து வைத்தார்.
உணர்வுப்பூர்வமாக அனுகுங்கள்
அப்போது டாக்டர்கள் மத்தியில் முதல்வர் ஆதித்யநாத் பேசுகையில், “ நோயளிகளுக்கும், மருத்துவர்களுக்கும், பணியாளர்களுக்கும் இடையே அடிக்கடி கைகலப்புகளும், தகராறும் நடப்பது தொடர்ந்து வருகிறது. அதேசமயம், டாக்டர்களும் அரசிடம் சம்பளம் பெற்றுக்கொண்டு தனியாக மருத்துவமனை நடத்தியும் சம்பாதித்து வருகிறார்கள். இதற்கு டாக்டர்கள் நோயாளிகளை மிகவும் உணர்வுப்பூர்வமாக அனுகாததே காரணமாகும்.
நோயாளிகளிடம் அன்பு
நோயாளிகளை உணர்வுப்பூர்வமாகவும், மனிதத்தன்மையுடனும், அன்பாகவும் டாக்டர்கள் அணுகினாலே நோய் பாதி குணமாகிவிடும். டாக்டர்களை பார்த்தால் கசாப்பு கடைக்காரர்களைப் பார்ப்பது போல் பார்க்கும் மக்களின் மனநிலையை மாற்ற வேண்டும்.
கிராமங்களில் 2 ஆண்டு சேவை
பெரும்பாலான டாக்டர்கள் படிப்பு முடித்தவுடன், நகர்புறங்களில் சேவை செய்ய விரும்புகிறார்கள். ஆனால், நான் கேட்டுக்கொள்வது எல்லாம், மருத்துவப்படிப்பு முடித்தவுடன் கிராமங்களில் சென்று 2 ஆண்டுகள் மருத்துவச் சேவை செய்ய வேண்டும்.
அரசு செலவு
உங்கள் படிப்புக்காக அரசாங்கம் செலவு செய்கிறது என்பதை டாக்டர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆதலால், மக்களுக்கு பொறுப்புள்ளவர்களாக டாக்டர்கள் நடக்க வேண்டும்.
முறையாக பராமரியுங்கள்
அரசு மருத்துவமனையில் உள்ள நவீன தொழில்நுட்ப வசதிகள் தனியார் மருத்துவமனையில் கூட இல்லை. ஆனால், அந்த நவீன கருவிகளையும், உபகரணங்களையும் முறையாக பராமரிப்பதில்லை. தனியார் மருத்துவமனையில் இதுபோன்ற நவீன கருவிகளை குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பயன்படுத்துகிறார்கள், ஆனால், அரசு மருத்துவமனையில் ஒரு ஆண்டு பயன்படுத்திவிட்டாலே அனைத்தும் மோசமான நிலைக்கு வந்துவிடுகிறது. மக்கள் பணத்தில் வாங்கப்பட்ட இந்த கருவிகளை ஏன் முறையாக பராமரிக்க கூடாது?. இதற்கு ஏன் முறையாக காப்பீடு செய்யக்கூடாது?. மக்களை ஏமாற்றினால், நமது தேசப்பற்று மீது சந்தேகத்தை எழுப்பிவிடும்’’ என்று தெரிவித்தார்.