
உத்தரபிரதேச மாநிலத்தில் பசு பாதுகாவர்கள் எனக்கூறி வன்முறையில் ஈடுபடுபவர்களும், சட்டத்தை மதிக்காதவர்களும் மாநிலத்தை விட்டு வெளியேறிக் கொள்ளலாம் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உத்தரபிரதேச மாநில முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் பதவி ஏற்றுக் கொண்டதில் இருந்தது பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். அவரது நடவடிக்கைகளுக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்வி வருகிறது.
முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இரண்டாவது முறையாக கோரக்பூர் பகுதிக்கு பயணம் மேற்கொண்டார். அங்கு பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய அவர், பசு பாதுகாவலர்கள் என்று கூறிக்கொண்டு பிறரை தாக்குபவர்களுக்கும், சட்டத்தை மீறி, சட்டத்தை கையில் எடுத்துக் கொள்பவர்களும் தப்பிக்க முடியாது என எச்சரித்தார்.
உத்தரபிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தபின்னர் சட்டவிரோதமாக செயல்பட்ட இறைச்சி கூடங்கள் மூடப்பட்டது, அப்போது ஒரு கும்பல் இறைச்சி கடைகளை எரித்து வன்முறையில் ஈடுபட்டது இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று யோகி எச்சரிக்கை விடுத்தார்.
உத்தரபிரதேச மாநிலத்தை சிறந்த மாநிலமாக்க முயற்சி மேற்கொள்வதாகவும், மக்களின் கனவுகளை நிறைவேற்றும் பணியில் இறங்கியுள்ளதாகவும் யோகி தெரிவித்தார்.
சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் சமரசம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்றும், சட்டத்தை மீறுபவர்கள் யாரும் தப்ப முடியாது என்றும் எச்சரித்தார்.
உத்தரபிரதேசத்தில் பாஜக அரசின் செயல்பாடு குறித்து கருத்துத் தெரிவித்த யோகி ஆதித்யநாத், மாநிலத்தில் 24 மணி நேரம் மின்சாரமும், தரமான சாலைகளும் உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
என்னுடைய மாநிலத்தில் எந்தஒரு விவசாயியும் தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட மாட்டார்கள் என உறுதியளித்தார்.