
உத்தரபிரதேச மாநிலத்தில் இன்று அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் உயிரிழந்த 17 பேரின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவியும், விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
டெல்லியில் இருந்து உத்தரப் பிரதேச மாநிலத்தின் கோன்டா மாவட்டத்திற்கு பயணிகள் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. தேசிய நெடுஞ்சாலையில் பரேலி அருகே நள்ளிரவு 1 மணியளவில் சென்று கொண்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து எதிரே வந்த லாரி மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.
மோதிய வேகத்தில் பேருந்தும், லாரியும் தீப்பிடித்து எரிய துவங்கின.. இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 20-க்கும் மேற்பட்டோர் அருகாமையிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் 17 பேரின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.
மேலும் படுகாயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கவும் உத்தரவிட்டார்.