
ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிக்கு ரூ 48 கோடி இழப்பு ஏற்படுத்திய அளிக்கப்பட்ட புகாரையடுத்து, பிரபல செய்தி சேனலான என்.டி.டி.வி.யின் அதிபர் பிரணாய் ராய் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று அதிரடியாக சோதனை நடத்தினர்.
ஆங்கில செய்தி சேனலான என்.டி.டி.வி குழுத்தை பிரணாய் ராய், அவரின் மனைவிராதிகா ஆகியோர் நடத்தி வருகின்றனர். மேலும், இவர்கள் சொந்தமாக ஆர்.ஆர்.பி.ஆர். என்ற பங்கு நிறுவனத்தையும் நடத்தி வருகின்றனர்.
இந்த நிறுவனத்தால், தனியார் வங்கியான ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிக்கு ரூ. 48 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த வங்கி சி.பி.ஐ. அமைப்பிடம் புகார் அளித்திருந்தது. அந்தபுகாரின் அடிப்படையில் என்.டி.டி.வி அதிபர் பிரணாய் ராய் இல்லம், அவருக்குச் சொந்தமான இடங்களில் நேற்று சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
இது குறித்து சி.பி.ஐ. எஸ்.பி. சுஜித் குமார் கூறுகையில், “ ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி தங்களுக்கு ரூ. 48 கோடி இழப்பு ஏற்பட என்.டி.டி.வி. நிறுவனத்தின் அதிபர், அவரின் மனைவி காரணம் எனபுகார் அளித்து இருந்தது. அதன்அடிப்படையில் பிரணாய்ராய், அவரின் மனைவி ராதிகா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களுக்கு சொந்தமாக டெல்லி, டேராடூனில் உள்ள இல்லங்கள், இடங்களில் சோதனை நடத்தினோம்’’ என்று தெரிவித்தார்.
இந்நிலையில், போலியான குற்றச்சாட்டின் அடிப்படையிலும், கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் வகையில் இந்த தேடுதல் நடந்துள்ளது என என்.டி.டி.வி கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து என்.டி.டி.வி. வௌியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது-
போலியான, பழைய குற்றச்சாட்டுக்களையும் அடிப்படையாக வைத்து, சி.பி.ஐ. அமைப்பு, என்.டி.டி.வி.யையும், அதன் உரிமையாளர்களையும் சோதனை என்ற பெயரில் துன்புறுத்தியுள்ளது. இந்த குற்றச்சாட்டுக்கு எதிராக என்.டி.டி.வி. தொடர்ந்து போராடி, குற்றமற்றவர்கள் என்று நிரூபிக்கும்.
இந்த சோதனை நடவடிக்கையால், நாங்கள் அடங்கிவிடோமாட்டோம். நாட்டில் உள்ள ஜனநாயகத்தையும், பேச்சுரிமையையும் அப்பட்டமாக மீறும் செயலாகும். ஊடகங்களை அழிக்க முயற்சிக்கும் நபர்களுக்கு, ஒன்றை கூறுகிறோம். அவ்வாறு அழிக்க நினைத்தால், அனைவரும் ஒன்று திரண்டு நிற்போம். நாட்டுக்காக போராடி, இந்தசக்திகளை கடந்து வருவோம்’’ எனத் தெரிவித்துள்ளது.
பாக்ஸ் மேட்டர்......
அரசியல் தலையீடு கிடையாது-வெங்கையா நாயுடு
என்.டி.டி.வி. அதிபர் பிரணாய் ராய் இல்லத்தில் சி.பி.ஐ. நடத்திய சோதனையில் அரசியல் தலையீடு இருக்கிறது என்ற குற்றச்சாட்டை மத்திய அமைச்சர்வெங்கையாநாயுடு மறுத்துள்ளார். அவர் கூறுகையில், “ என்.டி.டி.வி அதிபர்பிரணாய் ராய் இல்லத்தில் சி.பி.ஐ. நடத்திய ரெய்டில் அரசியல் தலையீடு இல்லை. சட்டத்தின் அடிப்படையில்தான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
யாராவது சிறிய தவறு செய்திருக்கலாம். அவர்கள் ஊடகத்தைச் சார்ந்திருக்கிறார்கள் என்பதற்காக அரசு பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. அதிகாரிகள் அவர்களின் கடமையைச் செய்துள்ளனர். சி.பி.ஐ. அமைப்புக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடந்துள்ளது’’ எனத் தெரிவித்தார்.