
உத்தரப்பிரதேசம் முழுவதும் பெண்களைப் பாதுகாக்க அமைக்கப்பட்டுள்ள "ஆன்ட்டி ரோமியோ" படையின் ரோந்துப்பணி தீவிரமாக்கப்படும். பெண்கள் தங்கள் பாதுகாப்பை பற்றி கவலைப்படத் தேவையில்லை என முதல்வர் ஆதித்யநாத்உறுதியளித்தார்.
பெண்களின் பாதுகாப்புக்காக முதல்வர் ஆதித்யநாத் ‘ஆன்ட்டி ரோமியோ படை’யை உருவாக்கினார். இந்த படையில் போலீசார் இருந்த போதிலும், பெரும்பாலும், ஆதித்யநாத்தின் இந்து யுவ வாஹினி அமைப்பினரே அதிகம் இடம் பெற்று இருந்தனர்.
இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் அப்பாவி இளைஞர்களையும் கைது செய்து, தாக்குவதாக விமர்சனங்களும், குற்றச்சாட்டுகளும் எழுந்தன.
இந்நிலையில், லக்னோவில் நிருபர்களுக்கு முதல்வர் ஆதித்யநாத் நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில், “ மாநிலத்தில் பெண்களின் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்டுள்ள ‘ஆன்ட்டிரோமியோ’ படையின் ரோந்துப்பணி இனி தீவிரமாக்கப்படும். மாநிலத்தில் இருக்கும் எனது சகோதரிகள், மகள்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். யாரும் கவலைப்படத்தேவையில்லை
மத்தியஅரசின் சுத்தமான நகரங்கள் பட்டியலில் மாநிலத்தின் ஒரு நகரம் மட்டுமே இடம் பெற்று இருந்தது. 52 நகரங்களும் மோசமாக பராமரிக்கப்பட்டு வருகின்றன எனவும் பட்டியலில் தெரிவிக்கப்பட்டது. அந்த நிலையை விரைவில் மாற்றுவோம்.
அதேபோல, எனது அரசு சிறந்த நிர்வாகத்துக்கும், மேம்பாட்டுக்கும் முக்கியத்துவம் அளிக்கும். சாதி, மதம் பாராமல் அனைவருக்கும் உகந்த அரசாக செயல்படும்.அதுமட்டுமல்லாமல் நமது பாரம்பரியத்தை யார் பாதுகாக்கவில்லையோ அவர்கள் எதிர்கால சந்ததியினருக்கு தங்களது மதத்தை பாதுகாத்து கொண்டு சேர்க்க முடியாது’’ எனத் தெரிவித்தார்.