மறுபடியும் ஒரு ஊரடங்கு வேண்டாம் என்றால், இதையெல்லாம் செய்யுங்க..! கர்நாடக முதல்வர் எச்சரிக்கை

By karthikeyan VFirst Published Jun 25, 2020, 10:03 PM IST
Highlights

கர்நாடகாவில் மற்றொரு ஊரடங்கு வேண்டாம் என்று நினைத்தால், மக்கள் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றி நடக்க வேண்டும் என முதல்வர் எடியூரப்பா எச்சரித்துள்ளார்.
 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. தேசியளவில் இதுவரை 4 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி ஆகிய மாநிலங்களில் தான் பாதிப்பு மிகக்கடுமையாக உள்ளது. 

தமிழ்நாட்டில் இன்று அதிகபட்சமாக 3509 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 70977ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 47650 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு, தமிழ்நாட்டுடன் ஒப்பிடுகையில் மிகக்குறைவு. கர்நாடகாவில் 6 லட்சத்துக்கும் அதிகமான பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது. 

கர்நாடகாவில் தமிழ்நாடு அளவிற்கு வைரஸ் பரவல் தீவிரமாக இல்லை. எனவே 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று முதல் நடத்தப்படுகின்றன. பெங்களூருவில் கடந்த சில தினங்களாக, தினமும் 200-300 பேருக்கு தொற்று உறுதியாவதால் பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து கொண்டிருக்கிறது. 

எனவே பெங்களூரு நகரின் முக்கிய பகுதியான கேஆர் மார்க்கெட் உள்ளிட்ட சில பகுதிகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் தரப்பில் கொரோனாவை தடுக்க என்னதான் நடவடிக்கை எடுத்தாலும் மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் எதையும் சாதிக்க முடியாது. எனவே தமிழகம் உள்ளிட்ட எல்லா மாநில அரசுகளும், அரசின் நடவடிக்கைகளுக்கு  மக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றன. 

கொரோனா பரவல் கர்நாடகாவில் அதிகரிக்க தொடங்கிய இந்த வேளையில், மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதற்காக முதல்வர் எடியூரப்பா எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இன்று செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதல்வர் எடியூரப்பா, கொரோனாவை தடுக்க மாநில அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துவருகிறது. கர்நாடகாவில் மீண்டுமொரு ஊரடங்கு அமல்படுத்தக்கூடாது என்றால் கர்நாடக மக்கள், தனிமனித இடைவெளி உள்ளிட்ட அரசின் அனைத்து வழிகாட்டு விதிமுறைகளையும் பின்பற்றி நடக்க வேண்டும் என எச்சரித்துள்ளார். 

தனிமனித இடைவெளி, முகக்கவசம் உள்ளிட்ட விதிமுறைகளை மக்கள் கடுமையாக பின்பற்றவில்லையென்றால், மற்றுமொரு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என எடியூரப்பா எச்சரித்துள்ளார். 

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் கடுமையானதன் விளைவாகத்தான் மறுபடியும், ஜூன் 30ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

click me!