உலகம் முழுவதும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது: பிரதமர் மோடி வேதனை!

By Manikanda Prabu  |  First Published Oct 13, 2023, 2:34 PM IST

உலகம் முழுவதும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி வேதனை தெரிவித்துள்ளார்


ஜி20 மாநாட்டை தலமையேற்று இந்தியா அதனை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. இந்த நிலையில், தலைநகர் டெல்லியில் ஜி20 நாடாளுமன்ற சபாநாயகர்கள் உச்சிமாநாடு (பி20) தொடங்கியுள்ளது. இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் கருப்பொருளுக்கு ஏற்ப, 9ஆவது பி20 உச்சி மாநாட்டின் கருப்பொருள் “ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலத்திற்கான நாடாளுமன்றங்கள்” என வைக்கப்பட்டுள்ளது.

 இந்த நிகழ்வில் ஜி20 உறுப்பு நாடுகளின் நாடாளுமன்ற சபாநாயகர்கள் மற்றும் அழைப்பாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். 2023ஆம் ஆண்டு ஜி20 உச்சி மாநாட்டில் உறுப்பினராகியுள்ள ஆப்பிரிக்க  நாடுகளின் நாடாளுமன்றம் முதல் முறையாக இக்கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளது.

Tap to resize

Latest Videos

இந்த பி20 உச்சிமாநாட்டின் கருப்பொருள் அமர்வுகள், பொது டிஜிட்டல் தளங்கள் மூலம் மக்களின் வாழ்க்கையில் மாற்றம்; பெண்கள் தலைமையிலான வளர்ச்சி; நிலையான வளர்ச்சி இலக்குகளை விரைவுபடுத்துதல்; நிலையான எரிசக்தி மாற்றம் ஆகிய நான்கு தலைப்புகளில் கவனம் செலுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் உள்ள யசோபூமியில் 9ஆவது ஜி20 நாடாளுமன்ற சபாநாயகர்கள் உச்சிமாநாட்டை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், உலகம் முழுவதும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்தார்.

அமலாக்கத்துறை கைதுக்கு எதிராக முறையீடு: சஞ்சய் சிங் மனுவை விசாரிக்கும் டெல்லி உயர் நீதிமன்றம்!

2001ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தின் மீதான தாக்குதலை நினைவுகூர்ந்த பிரதமர் நரேந்திர மோடி, உலகம் முழுவதும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது, ஆனால் இன்னும் ஒரே மாதிரியான வரையறையில் உடன்பாடு ஏற்படவில்லை என்று கூறினார்.

இன்று உலகம் எதிர்கொள்ளும் மோதல்கள் யாருக்கும் பயனளிக்காது என்று எச்சரித்த பிரதமர், உலகம் மனிதனை மையமாகக் கொண்ட அணுகுமுறையுடன் முன்னேற வேண்டும் என்று வலியுறுத்தினார். உலகளாவிய நம்பிக்கையின் பாதையில் உள்ள தடைகளை நாம் அகற்ற வேண்டும் என்றும் அவர் கூறினார். அமைதி, சகோதரத்துவத்துடன், ஒன்றாக முன்னேற வேண்டிய நேரம் இது என்றும் பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார்.

இஸ்ரேல் மீதான ஹமாஸ் அமைபினரின் தாக்குதல் 7ஆவது நாளாக இன்றும் தொடர்ந்து வரும் நிலையில், பிரதமர் மோடி இந்த கருத்தை தெரிவித்துள்ளார். “இந்தியா பல ஆண்டுகளாக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை எதிர்கொண்டு வருகிறது, பயங்கரவாதிகள் ஆயிரக்கணக்கான அப்பாவிகளைக் கொன்றுள்ளனர். பயங்கரவாதம் எவ்வளவு பெரிய சவால் என்பதை உலகம் இப்போது உணர்ந்துள்ளது, அது மனிதகுலத்திற்கு எதிரானது.” என்று பிரதமர் மோடி கூறினார்.

click me!