
டெல்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று நடந்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக ஜெட்லி தொடர்ந்த அவதூறு வழக்கின் குறுக்கு விசாரணை நடந்தது. அப்போது, மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியும், மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானியும் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி மோதிக்கொண்டனர்.
முறைகேடு குற்றச்சாட்டு
டெல்லி மாநில கிரிக்கெட் சங்கத்தில் அருண் ஜெட்லி கடந்த 2000ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டுவரை தலைவராக இருந்தார். அப்போது பல்வேறு முறைகேடுகளைச் செய்தார் என்று ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதல்வர் அரவிந்த்கெஜ்ரிவால், அவரின் கட்சித் தலைவர்கள் பலர் கடந்த ஆண்டு குற்றம்சாட்டினர். இது தொடர்பாக சமூக வலைதளங்களிலும் எழுதினர்.
அவதூறு வழக்கு
இதையடுத்து, கெஜ்ரிவால், மற்றும் ஆம் ஆத்மி தலைவர்கள் ராகவ் சந்தா, குமார்விஸ்வாஸ், அசுடோஷ், சஞ்சய் சிங், தீபக் பாஜ்பாய் ஆகிய 6 பேர் மீதும் ரூ.10 கோடி கேட்டு மத்தியஅமைச்சர் அருண்ஜெட்லி டெல்லி உயர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு கடந்த ஆண்டு தொடர்ந்தார்.
குறுக்கு விசாரணை
இந்த வழக்கின் குறுக்கு விசாரணை டெல்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று நடந்தது. இதில் கெஜ்ரிவால் சார்பில் மூத்த வழக்கறிஞர் ராம்ஜத் மலானி நேரில் ஆஜராகி வாதாடினார். நீதிமன்ற பதிவாளர் தீபாளி சர்மா முன் நிதிஅமைச்சர் ஜெட்லி நேரில் ஆஜராகினார்.
கடும் கோபம்
குறுக்குவிசாரணை தொடங்கியதில் இருந்தே ஜெட்லிக்கும், ராம்ஜெத் மலானிக்கும்இடையே கடுமையான வாக்குவாதங்கள் நடந்தன.
அப்போது, சர்ச்சைக்குரிய வகையில் அருண் ஜெட்லியைப் பார்த்து ராம்ஜெத்மலானி ‘ஒரு வார்த்தையைக்’ கேட்டார். இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்து, கோபத்தின் உச்சத்துக்கு சென்ற ஜெட்லி, இந்த வார்த்தை கெஜ்ரிவால் உத்தரவுப்படி நீங்கள் பயன்படுத்தினீர்களா? என ராம்ஜெத் மலானியிடம் கேட்டார்.
அவ்வாறு இருந்தால், நான் கெஜ்ரிவாலுக்கு எதிரான எனது குற்றச்சாட்டை தீவிரப்படுத்துவேன். தனிப்பட்ட முறையில் அவதூறு கூற ஒரு வரைமுறை இருக்கிறது என்று ஜெட்லி ஆத்திரத்துடன் பேசினார்
மலானிக்கு கண்டனம்
மேலும், ஜெட்லிக்கு ஆதரவாக வாதாடிய மூத்த வழக்கறிஞர்கள் ராஜீவ் நாயர்,சந்தீப் சேதி ஆகியோர் வாதிடுகையில், “ ராம்ஜெத் மலானி மிகவும் இழிவான கேள்விகளை கேட்கிறார். அவர் பொறுமைகாத்து, வழக்குக்கு தொடர்பான கேள்விகளை மட்டுமே கேட்க வேண்டும். இது அருண்ஜெட்லிக்கும்,கெஜ்ரிவாலுக்கும் இடையிலான வழக்குதான், ராம்ஜெத்மலானிக்கும், ஜெட்லிக்கும்இடையிலான வழக்கு இல்லை’’ எனத் தெரிவித்தனர்.
பயன்படுத்தவில்லை
அப்போது பேசிய மலானி, “ கெஜ்ரிவால் கூறியபடியே இந்த வார்த்தையை நான் பயன்படுத்தினேன்’’ என்றார். அதற்கு கெஜ்ரிவாலின் வழக்கறிஞர்அனுபம் வஸ்தவா பேசுகையில், “ நான் ஆரம்பத்தில் இருந்து இந்த வழக்கை பதிவு செய்து வருகிறேன். இதுபோன்ற வார்த்தையை கெஜ்ரிவால் பயன்படுத்தவில்லை’’ என்றார்.
அவதூறு வழக்கு போட முடியாது
இதையடுத்து, ஜெத்மலானி உள்ளிட்ட அவரின் வழக்கறிஞர்கள், “இந்த வார்த்தையை கெஜ்ரிவால் உள்ளிட்ட ஆம் ஆத்மி தலைவர்கள் பயன்படுத்தாத போது ஜெட்லி ரூ.10 கோடி கேட்டு அவதூறு வழக்கு போடமுடியாது’’ என்று தெரிவித்தனர்.
நிறுத்தவேண்டும்
ஜெட்லிக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர்கள், ராம்ஜெத் மலானி நிதி அமைச்சரை கடுமையான வார்த்தைகளால் பேசுவதை நிறுத்த வேண்டும் என்றனர்.
எச்சரிக்கை
ஆனால், ராம்ஜெத் மலானி தொடர்ந்து ஜெட்லியை தாக்கும் வகையில் பேசினார். இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிமன்ற பதிவாளர், மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத் மலானியும், மற்ற வழக்கறிஞர்களும் எல்லை மீறி போகிறார்கள். நீதிமன்ற நடவடிக்கைக்கு தொந்தரவு செய்யக்கூடாது என்று தெரிவித்தார்.
இதையடுத்து, இந்த வழக்கின் குறுக்கு விசாரணையை ஜூலை 28, 31-ந்தேதிக்குநீதிமன்றம் ஒத்திவைத்தது.