ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி தாக்குதல்..

First Published May 18, 2017, 9:28 AM IST
Highlights
pakistan army attacked in kashmir border


ஜம்மு - காஷ்மீரில் பாலாகோட் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி நேற்று தாக்குதல் நடத்தியது. இதையடுத்து பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

வீரர்களை குறிவைத்து

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய ராணுவம் தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டும் பாகிஸ்தான் தனது அத்துமீறலை நிறுத்திக் கொள்ளவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு முதற்கொண்டு பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.

இது தொடர்பாக ராணுவ அதிகாரிகள் கூறும்போது, "நேற்று காலை 5 மணியளவில் பாலகோட் பகுதிக்கு உட்பட்ட எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகேவுள்ள இந்திய நிலைகளைக் குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது.

பீரங்கி குண்டுகள்

தானியங்கி துப்பாக்கிகள், சிறிய ரக பீரங்கிக் குண்டுகளைக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. ரஜோரி பகுதியிலும் நேற்று முன்தினம் இரவு தாக்குதலில் ஈடுபட்ட பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர்ந்து ஒன்றரை மணி நேரம் தாக்குதலில் ஈடுபட்டனர். நவுசேரா பகுதியிலும் நேற்று முன்தினம் மாலை 6.30 மணிக்கு தொடங்கிய தாக்குதல் இரவு 9 மணி வரை நீடித்தது.

பொதுமக்கள் அச்சம்

எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகாமையில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் பாகிஸ்தான் படைகள் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதால் சுமார் பத்தாயிரம் மக்கள் பீதியில் உள்ளனர்.

ஏற்கெனவே நவ்சேரா பகுதியில் நடத்தப்பட்ட பாகிஸ்தான் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் இருவர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானின் தொடர் தாக்குதல்களால் எல்லையோர கிராமங்களைச் சேர்ந்த 1,700 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

அதிகரிக்கும் அத்துமீறல்

அனைத்துப் பகுதிகளிலும் இந்திய தரப்பும் பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி கொடுத்துவருகிறது" என்றார். எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல் தொடர்பாக ஆர்டிஐ ஒன்றுக்கு விளக்கமளித்துள்ள உள்துறை அமைச்சகம், கடந்த 2016-ல் எல்லையில் 449 முறை பாகிஸ்தான் அத்துமீறியது. 2015-ல் 405 முறை அத்துமீறியது. இந்த இரண்டு ஆண்டுகளில் பாதுகாப்புப் படை வீரர்கள் 23 பேர் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

click me!